இன்றும் நாளையும்

ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் “எ-கலப்பை” மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், எவ்வித நிபுணத்துவத்தின் தேவையுமில்லாமல் ஒருங்குறித் தமிழ் எழுத்துருவில் வலைப்பதிவாளர்களின் ஆக்கங்கள் “பட்டனைத் தட்டிவிட்டால் தட்டிலே ரெண்டு இட்டிலி விழுவது போல்” தெரிவதால், தமிழ் வலைப்பதிவுகள் நிறைய முளைக்க ஆரம்பித்து விட்டன. என்ணிக்கை கூடுமளவுக்கு தரம் கூடியிருக்கிறதா என்னும் ஆராய்ச்சியை நுகர்வோர் கண்ணோட்டத்திற்கே விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். சுரேஷ் கண்ணன் கூறியிருப்பதுபோல் சிலர் இந்த சேவையை தம் outlet-ஆகவும், வேறு சிலர் toilet-ஆகவும் பாவித்து வருகிறார்கள என்பது சிந்தனை செய்ய வேண்டிய கருத்து!

வலைப்பதிவாளர்கள் பலர் கூகிளின் “அட்சென்ஸ்” (Google Adsense) விளம்பரங்களை உள்ளிட்டு “கிளிக்குங்கள் தோழர்களே” என்று கூறாமல் கூவி, அதிலிருந்து சொட்டும் செண்ட் (cent) சில்லுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒருவர் “பீற்றிக் கொள்வது போல்” ஆங்கில வலைப்பதிவுகளின் தாக்கம் நாளொன்றுக்கு இரண்டாயிரம் அமெரிக்க வெள்ளி அட்சென்ஸ் மூலம் ஈட்டுமளவுக்கு முன்னேறியிருப்பது கண்டு நாக்கில் ஜலம் ஊறுகிறது! இந்த அளவெல்லாம் தமிழ் பதிவுக் கூடத்தில் எட்டுவதற்கு வெகு நாளாகும். ஏனென்றால் இங்கே படிப்பவரெல்லாம் பதிப்பவர் மட்டுமே. இந்தக் குறுகிய வட்டத்தைத்தாண்டி, தமிழ் பேசும் வெளி உலகத்திற்கு இன்னும் இவை எட்டவில்லை என்பது உண்மை. இதற்குள்ளேயே ஏகப்பட்ட வெட்டுக் குத்து வேறு – “என்பதிவில் நீ இட்ட பின்னூட்டத்திற்கு நானிட்ட பதிலுக்குப் பதிலாக நீயிட்ட பதிவில் நானிட்ட மறுமொழிக்கு நீயிட்ட அசிங்கத்திற்கு நானிட்ட ‘எழவு'” என்பதுபோல் பலர் தரம் தாழ்ந்து “குண்டுச் சட்டியில் குதிரை” ஓட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். (இதற்கு கியாரண்டிடியாக ஓரிரண்டு ஏசலாவது சங்கத் தமிழில் கிட்டும்!) 🙂

அதிருக்கட்டும். இப்போது கூகிளும் யாஹூவும் போட்டி போட்டுக் கொண்டு இலவச ஷாம்பூ, மஞ்சள்தூள், குங்குமம், தலைவலித் தைலம், இருமல் சிரப் என்பதுபோல் பலவகை சேவைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் வலை விளம்பரங்கள் டாலர்களை தொடர்ந்து கொட்டிக் கொண்டிருக்கும் என்று அவற்றை மட்டும் நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு காலம் முடியும் என்பது தெரியவில்லை. அந்த நிலையில் 1998-2000 போல் டாட் காம் பலூன் பணால் ஆனால் என்ன செய்வது என்று அவர்கள் யோசிக்கலாம். சரி “பில்” கொடுக்கும் நேரம் வந்தாயிற்று என்று கூகிள் ப்ளாக்ஸ்பாட் சேவையை பாவிக்க $19.99 அல்லது $29.99 வெட்டுக என்று அறிவித்தால், (இலவசமாக வேறு சேவைகள் ஏதும் இல்லை என்கிற நிலையில்) அதன் தாக்கம் தமிழ் வலைப் பதிவு உலகத்தில் எவ்வாறிருக்கும், அந்த முக்கிய மாற்றத்தினால் தோன்றும் பின்விளைவுகள்
எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்குப் பட்டவரையில், கருக்காயெல்லாம் காற்றில் பறந்து, நன்கு விளைந்த நெல்மணிகள் மட்டும் நமக்குக் கிட்டும் சூழ்நிலை ஏற்படும் என்று தோன்றுகிறது. பாக்கெட்டில் கைவிட்டு நோட்டுக்கள் எண்ணும்போது எவருமே சற்று சிந்திப்பது இயல்பு. காளான் தோன்றும் நிலை கடந்து, consolidation phase-ஐ நோக்கிப் பயணிப்போம் என்று என்ணுகிறேன்.

வேறு என்னென்ன மாறுதல்கள் தோன்றக் கூடும் என்று தோழர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை எகிர விட்டு, அவர்கள்தம் கருத்தூற்றுக்களை என் பின்னூடப் பெட்டியில் நிரப்ப வேண்டுகிறேன்!

நன்றி!

4 Comments


  1. I have started to write in Tamil..!Thanks to he blogs.! Toiletah …outlet ha..theriyavillai.!


  2. சபாஷ், நாராயணன்!

    தண்ணி லாரி படு ஜோர்!


  3. சரியாய் சொன்னீர்கள்..

    வலைபதிவில் தமிழ் மணம் பரவுகிறது. மல்லிப்பூவை போல்…

    எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா??


  4. ஆனந்த்,

    உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    “இரு வரிகள்” பிரமாதம்!

    வாழ்க, வளர்க!

Comments are closed.