*நன்றி*

இந்த வாரக் கடைசிப் பதிவை நேற்றே இட்டுவிடலாமென்றால், நான் இருந்ததோ திருச்சி அருகில் ஒரு ஊரில். அங்கிருந்த ஒரு உலாவும் மையத்தினுள் சென்றால், பழைய கற்காலத்தின் 98-ஐ பாவிக்கும் ஒரு கணினி, முக்கி முனகித் திறந்தது. தமிழ் எழுத்துக்களை தட்டச்சு செய்யலாமென்றால், எ-கலப்பையை இறக்க முடியவில்லை. மேலும் “கண்ட்ரோல் பேனல்” என்கிற கர்ப்பக் கிரஹத்தினுள் நுழைய அனுமதியில்லை. நிர்வாகியைக் கேட்டால் கடவுச் சாவி என்னிடம் இல்லையென்கிறார். சரி, உலாவியின் எழுத்துறுக் குறியீடுகளை மாற்றிப் பார்த்தால், அதுவரை தமிழ்போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த எழுத்துக்கள், எங்கள் ஊரில் தயிர், மோர், பால், காய்கறிகள் (“பொய்யூர்” கத்தரிக்காய் வியாபாரி உட்பட) கணக்குக்காக சுவற்றில் காட்டாமணி இலையைக் கசக்கிக் கிழிக்கும் கோடுகள்போல் தெரிய ஆரம்பித்தன. என் செந்தமிழ்நாட்டில் தமிழில் தட்டச்சு செய்ய இயலவில்லையே என்ற வருத்தத்துடன், அருகேயிருந்த உணவு விடுதிக்குள் சென்று அவர்கள் படைத்த சூடான இட்லிகளின் மேல் என்கோபத்தைச் செலுத்தினேன்.

இப்போது வீடுவந்து சேர்ந்துள்ளேன். இன்னும் இரண்டு, மூன்று மணிநேரம் என் நட்சந்திர அந்தஸ்து மிளிரும். அதற்குள் நன்றிகளை நவின்றிடலாமென்று அடிக்கிறேன் அவசரமாக!

என்னை சென்ற வார நட்சத்திரப் பதிவாளனாக அங்கீகரித்த காசி அவர்களுக்கும் மதி அவர்களுக்கும் என்மனமார்ந்த நன்றிகள். மேலும் என் பதிவுகளை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்களுக்கும், தம் பதிவுகளில் இவற்றைப் பற்றி எழுதியவர்களுக்கும், வேறு வகைகளில் ஊக்கமளித்தவர்களுக்கும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் “பாரா”ட்டியவர்களுக்கும், இனிமேலும் தொடர்ந்து என் பதிவுகளைப் படிக்கப் போகிறவர்களுக்கும், மற்றும் அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகள் சென்றடையட்டும்.

என் பெட்டிக்கடையை இன்னும் செம்மைப் படுத்தி விரிவாக்க, இவ்வித அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளிக்கும் என்று கூறி, அடுத்த பதிவைப் பற்றி யோசிக்கச் செல்கிறேன்.

பெர்னார்ட் ஷா தன்னைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது: (நேரடியான தமிழாக்கமல்ல):

“சிலர் என்னை விரும்பலாம். பலர் என்னை வெறுக்கலாம். ஆனால் யாரும் என்னை ஒதுக்கித் தள்ள மாட்டீர்கள்”

3 Comments


  1. உங்கள் பதிவுகளுக்கு போதுமான அளவுக்கு பின்னூட்டங்கள் வருவதில்லை என்று செல்லமாக சிணுங்கினீர்கள். இது விளையாட்டுக்காகவே என்றிருந்தாலும் ஆழ் மனதின் ஆசையையும் பிரதிபலிப்பதாகவே உள்ளது. நடுவில் “டோண்டுவுக்கு வருவது போல” என்று பொருள்பட க்வாலிஃபை வேறு செய்திருப்பதால். அந்த டோண்டுவாகிய நானே உங்களுக்கு சில ஆலோசனைகள் கூற ஆசைப்படுகிறேன்.

    1. முதலில் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் இப்போதிருக்கும் நிலையில் யார் வேண்டுமானாலும் வேறு யார் பெயரில் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடும் அபாயம் உள்ளது. என் பெயரில் ஒரு டூப்ளிகேட் ஆசாமி பின்னூட்டமிட்டு குழப்படி செய்தது எல்லோருக்குமே தெரியும். ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது செய்தார் அந்த போலி டோண்டு. இருப்பினும் ப்ளாக்கர் எண் என்ற பாதுகாப்பு வந்து அவர் நான் இல்லை என்பதைப் புரிய வைத்தது. இப்போது உங்கள் பின்னூட்டப் பெட்டியில் என் ப்ளாக்கர் எண்ணை வைத்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. இப்போதிருக்கும் நிலையில் இது அதிக பின்னூட்டம் எடுக்கத் தோதாக இல்லை.

    2. பின்னூட்டமிட்டவுடன் அது மட்டுறுத்தலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. சில சமயம் அது அதிக நேரம் எடுக்கிறது. என் ஒரு பின்னூட்டம் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இது பின்னூட்டமிடுபவரின் உற்சாகத்தைக் குறைக்கக் கூடியது.

    3. சரி பின்னூட்டம் வந்து விட்டது. ஆனால் உங்களிடமிருந்து எதிர் வினை? குறைந்த பட்சம் என் பின்னூட்டம் ஒன்றுக்கும் வரவில்லை. இந்த வகையிலும் உங்கள் தரப்பிலிருந்து மாற்றம் தேவை. ஒரு நன்றி அறிவிப்பாவது இருத்தல் நலம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்


  2. ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது செய்தார் அந்த போலி டோண்டு.

    For the above sentence, please read:

    ப்ளாக்கர் அக்கௌன்டில் என் பெயரைப் போட்டு மெடா ரிடைரெக்ஷன் எல்லாம் செய்து நானே பின்னூட்டம் இடுவது போல செய்தார் அந்த போலி டோண்டு.


  3. டோண்டு அவர்களுக்கு நன்றி!

    “டோண்டுவுக்கு வருவது போல” என்று நான் எழுதியது ஒரு உவமைக்குத்தான். என் பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லையே என்ற ஏக்கம் எனக்குக் கிடையாது. ஆனால் பின்னூடம் இருந்தால் நிச்சயம் மகிழ்வடைவேன். அவர்களுக்கு என் நன்றிகள் எப்போதும் உண்டு. அதை என் மறுமொழியாகவே இதுவரை தெரிவிக்கும் வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை. ஏனெனில் என் பதிவுகளில் என் எதிர்வினைகளே இருக்கக் கூடாது என்று நான் என்ணியதினால்தான். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு என் அனுமானம் தவறு என்று தோன்றுகிறது. இனிமேல் பதிலுரைக்கும் பழக்கத்தை ஏற்கிறேன்.

    நீங்கள் முதலில் கூறியது ப்ளாக்கர்.காம் தள சேவைக்குத்தான் பொருந்தும். என் தளத்திலேயே இந்தப் பதிவுகள் இருப்பதால், ப்ளாக்கர் ஐ.டி இதில் பொருந்தாது. ஆனால் இங்கும் சில நிரலிகள் பின்னூட்டம் இடுபவர்களைக் கண்காணித்து அவர்கள் “பலான இடத்திலிருந்து எழுதுகிறார்கள்” என்பதைப் பட்டியலிட்டுகின்றன. அதனால் முகமூடிப் பேர்வழிகளை அடையாளம்கண்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து விவரங்களும் பதிவாகும். கவலை வேண்டாம். ஐயத்துக்கு இடமான பின்வினைகளைக் கண்டால், உண்மைப் பெயர்கொண்ட நண்பர்களைத் தொடர்புகொண்டு ஆவன செய்வேன்.

    எரிதங்களின் சேட்டையால் மாடரேஷன் முறை தேவையாக இருக்கிறது. சாதரணமாக 10, 15 நிமிடங்களுக்குள் உள்ளிட்டு விடுவேன். சென்ற வாரம் ஒரு கிராமத்துக்குச் சென்றதால், சிறிது தாமதம் ஏற்பட்டது.

    ஆலோசனைகளுக்கு நன்றி.

Comments are closed.