அவர் பெயர் லக்ஷ்மிபதி.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியாயிற்று. யார் பணம் கட்டுவார்கள்? அதிருக்கட்டும், சாப்பாடே தகராறு. பெற்றோர்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்த்திவிட்டு எங்கோ வெளியூர் சென்று பிழைக்கப் போய்விட்டார்கள். எதிர் வீட்டு மாமா என்னதான் நல்லவராயிருந்தாலும் உட்கார்த்திவைச்சு சோறுபோடுவாரா? என்னென்னவோ சின்னச் சின்ன வேலைகளை சிறுமை பார்க்காமல் செய்து பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒன்றும் ஒத்துவரவில்லை. யாரோ பட்டணத்துக்கு அழைத்து வந்தார்கள். வ்யதான ஒருவருக்கு காலையில் தமிழ் தினசரியை உரக்கப் படிக்க வேண்டும். பின் டென்னிஸ் கிளப், கிரிக்கெட் கிளப் ஆகிய இடங்களில் பந்து பொறுக்கிப் போட வேண்டும். நாட்கள் போய்க்கொண்டிருந்தன. கால் வயிறு அரைவயிறு நிரம்பிக் கொண்டிருந்தது. மெட்ராஸ் சரிப்பட்டு வரவில்லை. திரும்பவும் கிராம வாசம். பாடசாலையில் சேர்த்துவிட்டனர் யாரோ. அங்கும் பாதிப் படிப்பில் விட்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். என்ன தொழில்? புரோகிதம்தான். அதற்கு மரியாதையாக “உபாத்யாயம்” என்று அழைப்பார்கள். அதாவது அவர்கள் “வாத்யார்” என்கிற ஸ்தானத்தில் இருப்பார்கள் “எனக்கு தட்சிணை கொடுத்தால் உனக்குப் புண்ணியம்” என்று கூறி எஜமானரிடமிருந்து செய்த வேலைக்கு கூலி பெறவேண்டும். இந்தக் காலம்போலில்லை. ஒரு அமாவாசை தர்ப்பணத்துக்கு நாலணா தட்சிணை என்று பேசி அதையும் கடன் சொல்லிவிடுவார்கள். பிராமண சமுதாயத்துக்குள்ளும் மரியாதை கிடையாது. “முஷ்டி வாங்கி” என்ற பட்டம் வேறே. இதைத் தவிர பெரிய வாத்யார்கள் இவரை வளரவிடவில்லை. “அவனுக்கு என்ன தெரியும்? பிரயோகம் முழுக்கப் படிக்காதவன்” என்ற துர்விமரிசனம்.
பார்த்தார் லக்ஷ்மிபதி. ஒருநாள் விட்டுத் தொலைத்தார் அந்தத் தொழிலை. நாலுபேரிடம் கடன் வாங்கி ஒரு சின்ன கூலி அறவை மில் தொடங்கினார். பனஞ்சப்பைக்கு பதில் தென்னஞ்சப்பை போட்டு சிக்கனமாக கட்டினார். மில் வேலைசெய்யத்தொடங்கியது. கலத்துக்கு அரை ரூபாய் கூலி. காசு சேர ஆரம்பித்தது. திருமணமாயிற்று. ஒரு பெண் பிறந்தாள். ஒரு அல்லர் இருந்த இடத்தில் மாவு, மிளகாய் என்று மூன்று அல்லர் சேர்ந்தது. பென்ணின் பெயரை மில்லுக்கு சூட்டி அழகு பார்த்தார்.
மேலும் காசு சேர்ந்தது. சேர்ந்தது காசு மட்டும் அல்ல. பழைய உறவுகளும். லக்ஷ்மிபதிக்கு அடுத்து மூன்று தங்கைகள். அவருடைய சம்பாத்தியத்தில் பங்கு கொள்ள எல்லோரும் வந்து சேர்ந்தனர். பழைய மானியத்தில் கிடைத்த ஒண்ணரை வேலி பங்கு சாகுபடி செய்ய ஆரம்பித்தார். (நூறு குழி = ஒரு மா. இருபது மா = ஒரு வேலி. ஒரு வேலி = சுமார் ஆறேகால் ஏக்கர்.)
பத்தாயத்தின் ரொம்பிய நெல். வெள்ளைச் சம்பா, சிகப்புச் சம்பா பின் ஆடுதுறை-27, பயறு, உளுந்து இப்படிப் பெருகியது. வருவோர் போவோர், விருந்தாடி என்று தினத்துக்கும் கல்யாணச் சிலவுதான். ஆனால் லக்ஷ்மிபதிக்கோ, அவருடைய மனைவி, குழந்தைகளுக்கோ வேண்டியதைச் செய்ய ஒருவரும் கிடையாது. உரிமைகள் கைமாறின. இவரும் நம் தாயார் மற்றும் உடன்பிறந்தோருக்குச் செய்வது தன் கடமை என்று தியாகியாக மாறினார். குழந்தைகள் பெருகின. அவருடைய குடும்பத் தேவைகள் பெருகப்பெருக, உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதிகள் குறையுமோ என்ற கவலை தோன்றியது தாயாருக்கு. எப்போதும் அப்பளக் கச்சேரி, முறுக்குக் கச்சேரி, சீடைக் கச்சேரி என்று கூடம், தாழ்வாரம், முற்றம், தொட்டி முற்றம், காம்பிரா உள், ரேழி என்று கிடைக்கும் இடமெல்லாம் வேஷ்டியைப் பரப்பி டின் டின்னாக நிரப்பி உடன்பிறந்தோருக்கு ஏற்றுமதியாகும். ஆனால் லக்ஷ்மிபதிக்கொ, அவருடைய குழந்தைகளுக்கோ கண்ணில்கூட காணக்கிடைக்காது. சம்பாதிப்பதுதான் அவர் உரிமை. அனுபவிப்பது இல்லை.
தாயார் லக்ஷ்மிபதியின் குழந்தைகளை வெறுக்க ஆரம்பித்தாள். இவை மட்டும் பிறக்கவில்லையென்றால் தன் இஷ்டப்படி சிலவு செய்யலாமே.ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவன் கேள்வி கேட்கத் தொடங்கினால் என்ன செய்வது. அவளுடைய வெறுப்பு பல வழிகளில் வெளிப்பட ஆரம்பித்தது. குழந்தைகளுக்கு வாழ்க்கை நரகம்தான்.
இதற்கிடையில் மில் அமைந்திருக்கும் மனைக்கட்டின் மேல் ஒரு வழக்கு. மானிய நிலத்தின்மேல் சக்திவாய்ந்த ஒரு அமைப்பு செய்த ஆக்கிரமிப்பு. அதனால் தொடங்கிய வழக்குகள். அடிக்கடி ஈரங்கி, வாய்தா, நம்பர் கட்டு, வக்கீல், வக்கீல் குமாஸ்தா – அவர் வாழ்க்கைத்தடமே தாறுமாறானது. யாராவது அவரை எதிர்த்து ஏதாவது கேஸ் போட்டவண்ணம் இருந்தார்கள்.
தாயும், உடன்பிறப்புக்களுமே இரத்தம் உறிஞ்சும் அட்டைகளாயின. மனைவியோ விழித்திருக்கும் நேரமெல்லாம் மாமியாரிடம் மொத்து பெற்றுச் சலித்துப் போய் பிறந்த வீட்டை நினைத்தே ஏக்கம் கொள்ள ஆரம்பித்தாள். போனால் திரும்பிவர மனம் வராது. குழந்தைகள் கதி?
இதற்கிடையே மில்லைக் காலி செய்ய நோட்டிஸ். மீண்டும் கோர்ட். கேஸ். பிராது. பொறாமை.
இத்தனைக்கும் இடையில் பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்தார். அவருடைய ஜாதியிலேயெ ஒருவர் பெட்டிஷன் போட்டார் – லக்ஷ்மிபதியின் பெண் சட்டப்படியான (“சார்தா” சட்டம்) வயது வருவதற்கு முன்னால் திருமணம் நடந்தது என்று.
இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. ஒரு பையன். அவன் தான் இவருடைய நனவாகாத கனவுகளையெல்லாம் பூர்த்திசெய்யப் போகிறான் என்று ஆசையாக இருந்தார். அதுவும் பொய்த்துப் போனது. அவன் ஒரு சோம்பேறியாக, மிகச் சாதாரணமாக இருந்தான். அன்றாட வாழ்வே பிரச்னையாய், ஒவ்வொரு நாளும் எதிர்நீச்சல் போட்டு சமாளிக்க நேர்ந்தாலும் லக்ஷ்மிபதி ஒரு சிந்தனாவாதி. ராஜாஜியின் மார்க்க அரேலியஸ் சிந்தனைகளை வாசிப்பார். தினமணியை ஒரு வரி விடாமல் படிப்பார். பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தார். இசையிலும் ஈடுபாடு உண்டு. படிப்பு அவ்வளவு இல்லையென்றாலும் உலக அறிவு உண்டு. அவருக்கு “கண் பார்த்தால், கை செய்யும்”. ஆனால் அவர் மகன் அவ்வளவு சூட்டிகையில்லை. கொஞ்சம் மொத்து. இந்த விஷயத்தில் அவருக்கு பெரிய ஏமாற்றம்.
அவருக்கு அப்போது வயது அறுபது. தன் மக்களுக்கும் சுற்றத்தவருக்கும் அவர் எவ்வளவோ செய்திருந்தும், அவருடைய அறுபது வயது பூர்த்தியானதைக் கொண்டாட யாருக்கும் தோன்றவில்லை. இதற்கிடையில் நீரிழிவு வேறு உறவு கொண்டாடத் தொடங்கியது. இரத்ததில் யூரியா சேர்ந்துவிட்டது. கண்கள் மங்க ஆரம்பித்தன.
லக்ஷ்மிபதி தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை ஒருமுறை தீர்க்கமாக நோக்கினார்.
“ரெமாஜென்னின் பாலம்” (The Bidge at Remagen) என்று ஒரு திரைப்படம். இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றியது. ஒரு முக்கியமான பாலத்தைத் தகர்க்க மேஜருக்கு உத்தரவு. வெடியை இயக்கப் போகும் தருவாயில் சில பள்ளிக் குழந்தைகள் பாலத்தின்மேல் நடக்கத் தொடங்கியதைக் கண்டார் அந்த மேஜர். அவர்கள் பத்திரமாகக் கடக்கும்வரை சில நிமிஷங்கள் தாமதம் செய்தார். அதற்குள் எதிரிப் படைகள் பெரும் எண்ணிக்கையில் வந்து பாலத்தைக் கைப்பற்றிவிட்டன. அந்த மேஜரின் படைக்கு பெரும் தோல்வி. உத்தரவுப்படி ஏன் பாலத்தைத் தகர்க்கவில்லை என்று கேள்வி கேட்டு மிலிடரி “கோர்ட் மார்ஷ”லில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் ஒரு மரப்பலகைமுன் நிற்கிறார். அவரை நோக்கி சுமார் பத்து துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டு நிற்கின்றன். “சுடு” என்ற ஆணை கேட்டவுடன் அந்தத் துப்பாக்கிகள் இயங்க, அந்த மேஜரின் உடல் சல்லடைக் கண்ணாகி உயிரற்று விழும். மேஜரை அழைத்துச் சென்று அந்த பலிபீடத்தில் நிறுத்தியவர் அவர்கீழ் பணியாற்றிய அதிகாரி. “இறப்பதற்கு முன் கடைசியாக ஒரு இழுப்பு இழுக்கட்டுமே” என்று மேஜர் வழக்கமாக பாவிக்கும் சிகரெட்டைப் பற்றவைத்து அவருடைய குழாயையும் பொருத்தி வாயில் இடுகிறார். அப்போது தலைக்கு மேலே சில போர் விமானங்கள் பறக்கின்றன. அந்த உதவி அதிகாரி மேஜரைப் பார்த்து, “எதிரி விமானங்கள்” என்றார். மேஜர் சிரித்துக் கொண்டே, “நான் இந்தக் கணத்தில் இருக்கும் நிலையில் என் எதிரி யார்?” என்று வினவுகிறார்!
நீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்?
Permalink
லக்ஷ்மிபதிக்கு விரோதி அவரேதான். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அவரே விரோதி. மற்றொருவர் உங்கள் மேல் குதிரை ஏற நீங்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்த மாதிரி தேவையற்ற தியாகங்கள் கண்டிக்கத் தகுந்ததே. பாத்திரமறிந்து பிச்சையிடு என்று பெரியவர்கள் சும்மாகவா சொல்லியிருக்கிறார்கள்? இவர் செலவில் அப்பளம் முதலியவையிட்டு இவருக்கோ இவர் குழந்தைகளுக்கோ காட்டாமல் இருப்பவர்களை முதலிலேயே தடியெடுத்து விரட்டியிருந்தால் ஏன் பிரச்சினை வரப் போகிறது?
அதனாலேயே ரஜனியின் “ஆறிலிருந்து அறுபது வரை” படம் எனக்கு பிடிக்காது. ஒருவன் தேவையின்றி தன் கையை தானே கட்டிக்கொண்டு மற்றவர்கள் அவனை அடிக்க இடம் கொடுப்பது மடத்தனமே. தயவு செய்து இம்மாதிரி சுய துன்புறுத்தல் எண்ணங்களை வளர்க்க விடாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Permalink
//நீங்களே சொல்லுங்கள், லக்ஷ்மிபதியின் எதிரி யார்?//
லட்சுமிபதியே தான்.