ஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை.
நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல “தமிழ்நாட்”டில் ஏறி அமர்ந்தேன். எதிர்ப்் படுக்கை காலியாக இருந்தது. நாக்பூர் கோட்டா என்றார்கள். வண்டி கிளம்பும்போது ஒரு பெண்மணி (இருபதின் ஒரமோ, முப்பதின் துவக்கமோ என்ற தோற்றம்) ஏறி அமர்ந்தார். அவருடன் பிரயாணம் செய்யும் பேறு பெற்றமைக்காக எங்களை நோக்கி ஒரு “பளீர்” சிரிப்பை சிந்தினார் (அந்தத் தருணத்தில் ஒரிரண்டு பிராயம் கம்மியாயிற்று). அவர் செய்த சேட்டைகளை என் கையிலிருந்த புத்தகத்தின் மேல் விளிம்பிணூடே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
(“சீ, இதென்ன கெட்ட பழக்கம்.” — “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ‘ரசித்தேன்’னு சொன்னவுடனே ஏதோ தப்பர்த்தம் பண்ணீட்டீங்க போல. அவிங்க பொட்டியை மூடினாங்க, தொறந்தாங்க. மறுபடி, மறுபடி. இடையிடையே செல்லிடைப் பேச்சு. ஒரே சங்கதியை மீண்டும் மீண்டும்.” — “அப்படி என்னதான் பேசினாங்க?” — “யாருக்குத் தெரியும். அத்தனையும் தெலுங்கு”)
சீட்டுப் பரிசோதகரிடம் அந்தப் பெண்மணி “சீட்டு” கேட்டார். நடைமேடை அனுமதியுடன்தான் வண்டி ஏறியிருந்தார் என்பது தெரிந்தது. அவர் சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு ரூ. 1200 என்றார். “சரக்”கென்று ரூபாய் நோட்டுகளை உருவிக் கொடுத்தார் அந்த பணக்காரக் குடும்பத்துப்் பெண். உடம்பு பூரா மஞ்சள் உலோகக் கஜானாதான்!
லேசாக பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணிய நான் எதை வைத்து ஐஸை உடைப்பது என்று கணக்குப் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், “மீரு விஜயவாடாவா” என்று கேட்டுக் கொண்டே இன்னொரு பயணி மீதமிருந்த படுக்கைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து “மாக்கு மாக்குனு” மாட்லாடிக்கொண்டிருந்ததால், அரவத்தில் இடைச் செருகலாமென்ற என் முயற்சி வீண். “சரி, அதனாலென்ன, அப்படி ஒன்றும் அழகில் சேர்த்தியில்லை. கல்லூரி நாட்கள் போலிருந்தால் 45 மார்க்தான் போட்டிருப்பேன்.” அதற்குள் பணியாளர்கள் படுக்கையை விரித்து வைத்தார்கள். நானும் பி.ஜி.வுட் ஹௌஸை விரித்தேன்
காலையில் எழுந்து பார்த்தால் எதிர்ப் படுக்கை காலி. “படபாதி”யில் மேல்பாதி தூக்கி நிறுத்தப்பட்டு உட்கார ஏதுவாயிருந்ததால், காப்பியுடன் – அதாங்க, கொட்டை (சீ, அது இல்லேப்பா!) வடிநீர் குளம்பி – அங்கே போய் பட்டறையை கிடத்தினால், ஏதோ நெரடுது. என்ன அது? ஒரு வளையல். தங்க நிறத்தில். (நீங்களே சொல்லுங்கள், அதைத் தங்கம் என்று எப்படிச் சொல்லமுடியும் – ஒரு அப்ரைசர் உரசிப் பார்த்து உறுதிப் படுத்துவதற்கு முன்னால்?)
பிடிச்சது விவகாரம். இப்போ என்ன செய்வது? என் உடன் பயணிக்கும் நண்பர் என்னை “ரேக்கி” விட ஆரம்பித்துவிட்டார். “இதை நீங்களே உடையவர் யாரென்று கண்டுபிடித்து சேர்ப்பித்து விடுங்கள். எனையோர் தேவையான கவனமெடுத்து செய்வார்களோ என்னவோ” – என்று. ஆனால் டி.டி.ஈ – யிடம் அந்த வளையலுக்குச் சொந்தக்காரப் பெண்மணியின் பெயர் இல்லை. வெறுமனே பணம் கட்டிய விவரம்தான் இருந்தது. இதற்குள் அந்த வளையல் அசல்் தங்கம்தானா என்று அவரவர் அமுக்கிப் பார்த்தும், வளைத்துப் பார்த்தும், முகர்ந்து பார்த்தும் சோதிக்க ஆரம்பித்து விட்டனர். (வெஸ்டர்ன் திரைப்படங்களில் செய்வதுபோல் யாரும் கடித்துப் பார்க்கவில்லை. அந்த வித்தை இவர்களுக்கு இன்னும் கைவரவில்லை போல.) பிறகு அவரவர் அனுபவத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றிிய கதைகள். இஷ்டத்துக்கு ரீல்கள்.
“உங்க கையில கிடைச்சதினாலே அவங்களுக்கு நகை திரும்பக் கிடைக்கப்போவுதுங்க. இன்னொருத்தராயிருந்தா கமுக்கமா இருந்திருப்பாங்க. இல்லைன்னா அங்கேயிருந்த பணியாளர்களைத்தான் சந்தேகப் படுவாங்க”.
“இண்டு இடுக்கிலே மாட்டியிருந்துச்சின்னா?”
“அதுக்கின்னே கேங்குங்க இருக்கே. எல்லாரும் எறங்கினவுடனேயே துப்புரவா சுரண்டிப் பாத்துடமாட்டாங்களா”
வளையல் என் பையில். குடைச்சல் என் மனதில். ஏதோ நமநம. நான் செய்ய முற்படுவது சரிதானா. அததற்கு ஏற்படுத்தப்பட்ட துறைகள் இருக்கும்போது நாம் ஏன் நம் தலையில் போட்டுக் கொள்ளவேண்டும்? பையினுள் கைவளையல் கனத்துக் கொண்டே வந்தது. என்ன செய்யலாம்? ஆலோசனை கேட்க என்னருகில் ஜீவ்ஸா இருந்தார்?
இனிமேல் தாங்காது. கூப்பிடு டிரெயின் சூப்பிரண்டை! “தங்கம் போல் தோற்றம் கொண்டிருந்த ஒரு உலோக வளையலை இன்னாரிடமிருந்து, இன்ன இடத்தில், இத்தனை மணிக்கு பெற்றுக் கொண்டேன். ” சாட்சிக் கையொப்பத்துடன் “ரோக்கா” பெற்றுக் கொண்டபின் ஒரு சிறப்பு siesta!
மறுநாள் அவரை நிலையத்தருகில் சந்தித்தபோது, “ஸார், உங்க பாரத்தை எங்கிட்ட தள்ளிவிட்டூங்க. அது பத்திரமாயிருக்கா-ன்னு தடவித் தடவிப் பார்த்துகிட்டெ இருக்க வேண்டியிருக்கு. சென்னையில் கொண்டு சேர்க்கும் வரையில்” என்றார்.்
வீடு வந்தாச்சு. “ஏங்க, தங்கம் விலை எப்ப கொறையறது, எப்ப எனக்கு நீங்க வளையல் பண்றது? எங்கப்பா பண்ணினத்துக்கு மேல ஒரு குந்துமணி எடை சேர்த்திருக்கீங்களா நீங்க? ஆச்சு, அட்சய திருத்தியை வரது. இந்தத் தடவை கட்டாயம் கைக்கு ரெவ்வண்டு.”
நீங்களே சொல்லுங்க. சென்னைக்கு கதீட்ரல் ரோடு, உஸ்மான் ரோடு – இவையெல்லாம் ரொம்ப அவசியமா?