எழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார்.
“சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க?’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்! உங்களை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே. சட்டுனு நினைவு வரலை. நீங்க யாரு?’ என்கிறார்கள்.”
இவர்கள் பரவாயில்லை. தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொண்டு விவரம் கேட்கிறார்கள். பலர் அப்படியில்லை. தெரிந்த மாதிரி பாசங்கு செய்யும் அந்த ‘பலரை’ப் பற்றி சுஜாதா என்ன சொல்கிறார் பாருங்கள்:
“பலர், ‘இப்ப நீங்க எழுதற ‘கண்டதும் கேட்டதும்’ கல்கில விடாம படிக்கிறேன்’ என்பார்கள்.”
இதைப் படித்தவுடன் மகாகவி பாரதியின் ‘சேவகன்’ (கண்ணன் ‘எங்கிருந்தோ‘ வருவதற்கு முந்தையவன்) – “ஏனடா நேற்றைக்கு நீ வரவில்லையென்றால்” சொல்லும் சால்ஜாப்பு நினைவுக்கு வருகிறது: “பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்“. தேள் கொட்டியது என்று சொல்லியிருந்தால் அந்த நொண்டிச் சாக்கில் சிறிதளவாவது உண்மை கலந்திருக்கும். அவ்வாறின்றி அக்மார்க் பொய்யாகத்தான் இத்தகைய டுபாகூர் காரணங்கள் அமையும் என்பதை பாரதி எடுத்துக் காட்டியுள்ளார்.
சுஜாதா எழுதிவந்த கட்டுரைத் தொடரின் பெயர் “கற்றதும் பெற்றதும்”; வெளிவந்த பத்திரிக்கை ஆனந்த விகடன்!
இதுபோல் சில பாசாங்கு பேர்வழிகளை கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் கட்டாயம் காணலாம். பாடகர் பைரவியில் ஆலாபனை செய்துகொண்டிருக்கும் போது, நம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர், “ஏன் சார், இது கானடாவா, மோகனமா?” என்று உரக்க கேட்பார்! பேசாமல் வேறு சீட்டைப் பார்க்க போய்விட வேண்டியதுதான். இல்லையென்றால் அடுத்தது மோகனம் பாடும் போது ‘இது பைரவியா’ என்பார்!
இதைத்தான் ‘double whammy’ என்கிறார்களோ?