புத்தகக் கண்(கொள்ளாக்) காட்சி!

ஜனவரி 8, சனிக்கிழமை

புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று “கிரௌண்டில்” விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று நிதானமாக் கேட்டுக் கொள்ளலாம் என்று நிறுத்தினால் (நான் கொஞ்சம் “மெற்குரி வேபர்” லைட்), மொபைல் பார்ட்டியின், “ரோட்டிலே நிறுத்தாதீங்க” அறிவுருத்தல் – (ஆனால் உண்மையில் நான் எங்கு வண்டியை பார்க் பண்ணினேன் என்பது வேறு விஷயம்!). சென்றமுறை நடு புல்வெளி மைதானத்தில் பார்க்கிங் இருந்தது. இப்போது அங்கே அரங்கு அமைத்திருப்பதால் இந்த ஏற்பாடு என்று தோன்றுகிறது.

கண்காட்சி என்றாலே கட்டாயம் இடம்பெற வேண்டிய பொருள் மெகா சைஸ் அப்பளாம்! மண்ணோடு கலந்த இந்த வஸ்துவுக்கு அங்கும் இடம் இருந்தது. அந்த பூகோளப் புத்தக அப்பளத்தில் edible ink-ஐ பயன் படுத்தி ஏதேனும் சுவையான செய்தியை அச்சடிக்கலாமே என்று தோன்றியது (ஜெயேந்திரரின் காம லீலைகள் – போன்றவையாக இருந்தால் மக்களுக்கு
சுவாரஸியமாக இருக்கும்!)

இட்லி, வடை, பிஸ்கெட், காப்பிகளைத் தாண்டி நுழைவாயில் நோக்கிச் சென்றால் அனுமதிச் சீட்டு வாங்குமிடத்தில் நம்
கண்ணைக் கவரும் வண்ணம் கிழக்குப் பதிப்பகத்தார் அமைத்துள்ள விளம்பர வளைவு, அந்த ஸ்டாலுக்குள்ளேயே நுழைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நுழைந்தவுடன் தென்படுவது கேண்டீன். இசை விழாவின் போது ஏற்பட்ட பழக்கத்தால் என் கால்கள் தன்னையறியாமல் அதை
நோக்கிச் சென்றதை மனைவி தடுத்து நிறுத்தி விட்டார், “எப்பப் பார்த்தாலும் சாப்பிடற நினப்புத்தானா” என்ற கேள்வியுடன்.
மேற்கொண்டு இது பற்றியும், எங்கள் குடும்பத்தார்களின் அடிப்படை குண இயல்புகளைப் பற்றியும் நாங்கள் sotto voce-ல் பரிமாறிக்கொண்ட டயலாகுகள் வாசிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்காது என்பதால் அவற்றிற்கு இங்கு இடம்
கொடுக்கவில்லை.

நிறைய ஸ்டால்கள். பரவலாகப் பட்ட இடவசதி. இன்னொரு நிறைவான விஷயம், நிறைய தமிழ்! ஆனால் ஸ்பீக்கரில் ஒரு
பெண் தவறான ஆங்கிலத்தில் (வேடிககையான உச்சரிப்புடன்), மறுநாள் நடக்கப் போகும் பேச்சுப் போட்டியைப் பற்றி
அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரே அதைத் தமிழில் சொல்லியிருந்தால், எவ்வளவு கொலை செய்திருப்பார் என்று
எண்ணிப் பார்த்ததில், “போட்டுத் தாக்கு ஆங்கிலத்தை” என்று விட்டு விட்டேன்!

மேலும், கார்பெண்டர், காண்டிராக்டர், வேலுசாமி, கன்னிகா பரமேஸ்வரி என்று யார் யாரையோ கூவி அழைத்துக்
கொண்டிருந்தார்கள். “என்னை இல்லைப்பா” என்று மகிழ்ச்சியுடன் கடைகளை மேய ஆரம்பித்தேன்.

அநேகமாக எல்லா ஸ்டாலிலும் முகப்பிலேயே தென்படுவது கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”
போன்றவற்றின் மலிவுப் பதிப்புகள்தான். அவைகள் சிரஞ்சீவியாக நிறையவே விற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற நீண்ட நெடிய நாவல்கள் அதற்கப்புறம் மக்களைக் கவரும் வண்ணம் தமிழில் வரவில்லையோ என்று எண்ணுகிறேன். ஆனால் அப்படியும் மற்றவர்களிடமிருந்து தன்னை தனிப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், “கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிப்பதில்லை” என்று சொல்லிக்கொள்ளும் மேதாவிகளும் இருக்கிறார்கள். Each one to his cup of tea!

Topical-ஆக ஜெயேந்திரரையும் சிறுபதிப்புக்கள் மூலம் காசக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்! பெரும்பாலும் சுற்றி வளைத்து அவரையும், அதைச் சாக்கிட்டு பார்ப்பனர்களையும் திட்டி எழுதப்ட்டிருந்ததைப் பார்த்தேன். ஆனால் ஜெயகாந்தன்
எழுதியுள்ள “ஹரஹர சங்கர”வைப் பற்றி பத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தபின் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் தோன்றியுள்ளது.

மற்றபடி வகை வகையான சமையல், சுய முன்னேற்றம், கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி, ஜோக்குகள், ஆன்மீகம்,
கையடக்க நூல்கள் ஆகியவைகள் பில் போடப்படுவதைப் பார்த்தேன்.

கையில் ஒரு பெரிய பையாக எடுத்துச் செல்லல் நலம். முடிச்சு முடிச்சாக சிறு பைகளை சுமந்து “இடி”பாடுகளில் செல்வது
சிரமமாக இருந்தது! தண்ணீர் ஒரு பாட்டில் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.

நான் வாங்கியவை:-

திருக்குறள் (விளக்கமான உரை)
லிஃப்கோவின் விட்டுப் போன Great Little Books
தனிப்பாடல் திரட்டு
சித்தர் பாடல்கள்
சிலேடைகள்
காளமேகப் புலவர் பாடல்கள்
திருமண சடங்குகளின் விளக்கம்
தெனாலி ராமன், முல்லா, பரமார்த்த குரு, விக்கிரமாதித்தியன் கதைகள் (குழந்தைகளை தூங்கச் செய்ய!)
ஈவேராவின் மறுபக்கம் – ம. வெங்கடேசன்
ஹிந்துத்வா – ஒரு அறிவியல் கண்ணோட்டம்
வெறுக்கத்தக்க பிராமணீயம்
Chidrens’ Book Trust பதிப்புகள் – மலிவு விலையில் இரத்தினங்கள்

எந்த ஒரு திட்டத்துடனும் செல்ல வில்லை என்பதால், ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி இறங்கி, பலருடைய பிருஷ்ட பாகங்களால் இடி பட்டு நீந்திச் சென்றதில் நேரமாகி விட்டது. பார்க்க வேண்டியவை பாதிக்குமேல் பாக்கி. “திறையை மூடுங்கள்” என்ற ஆணை வந்துவிட்டது. வெளியே செல்லலாமென்றால் அங்கு “பரிசு விழுமா” என்று சீட்டின் அடிக்கட்டையை கையில் பிடித்து நிற்கும் கூட்டம். நமக்கு அதுபோல் ஏதும் விழுந்த சரித்திரம் இல்லையென்பதால், நாங்கள் கீழே விழாமல், நெளிந்து நெளிந்து வெளியே வந்து விட்டோம்.

ஏற்கனவே லாஃப்ட்களில் அடுக்கி வைக்கப்பட்டு, அந்துருண்டைகளை வெற்றி கொண்ட அம்புப் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் என் வாழ்நாளுக்குள் என்று வாசித்து முடிக்கப் போகிறேனோ தெரியவில்லை. ஆனால் மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள் கூறியிருந்தது போல, மேன் மேலும் வாங்கி அடிக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்! கையெட்டும் இடத்தில் வைத்தால் படிக்கத் தோன்றும் என்றால் அவை காற்றை சுத்தம் செய்யும் புனித சேவையில் ஈடுபடுகின்றன.
ஒரு Murphy’s law நினைவுக்கு வருகிறது:-

Law of conservation of Filth

For making something cleaner, you have to make something else dirtier!

Corollary to this law

You can still make everything dirtier without making anything cleaner!

இன்றைய Wish List:-

அபிதான சிந்தாமணி
கல்கி, தேவன், எஸ்.வி,வி – இவர்களின் படைப்புக்களில் என்னிடம் இல்லாதவை
Rare Books – ல் முத்துக் குளித்து அள்ள வேண்டிய antics
முன்னே குறிப்பிட்ட ஜெயகாந்தனின் படைப்பு
இன்னும் கொஞ்சம் காரக் கடலை!

வரட்டுமா!

3 Comments


  1. சோ எழுதி நான் வாங்கி அடுக்கிய புத்தகம் (இதுவரை புரட்டிகூட பார்க்கவில்லை, இதுபோல் பல):

    வெறுக்கத்தக்க(தா) பிராமணீயம

    என்று நினைவு.

    வெறுக்கத்தக்க பிராமணீயம
    – இது புதுசாக வந்திருக்குதாண்ணே?


  2. அன்பா!

    “தா” என்றவுடன் தந்துவிடவா போகிறீர்கள்! 🙂

    ஆனாலும் தவற்றை சுட்டியமைக்கு நன்றி!

    எஸ்.கே


  3. புத்தகக் கண்காட்சி விஷயங்கள் அடுத்தவங்களோடதைப் படிக்கறதே இவ்ளோ சுவாரசியமா இருக்கு.

    ///
    “ஹரஹர சங்கர”வைப் பற்றி பத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப்
    ///

    இதுக்கு சுட்டி அவரோட அந்த புத்தக விமர்சனப் பக்கத்துக்குக் கொடுத்திருந்தீங்கன்னா, படிக்கறவங்களுக்கு வசதியா இருக்குமே. நன்றி.

Comments are closed.