சின்னஞ்சிறு விஷயங்களில் கவனம் செலுத்தினால்தான் முழுமையை எட்ட முடியும் என்று அறிஞர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் நம் அன்றாட வாழ்வில் பல செயல்களை கவனமின்றிச் செய்துவிடுகிறோம். எனெனில் அவை நம்மைப் பொருத்தவரை முக்கியமானவை என்னும் பட்டியலில் வரவில்லை. உதாரணத்திற்கு, சட்டைக்குப் பொத்தான்களைப் போடுவது, ஷூ லேஸ்களை சரியாகக் கட்டுவது, சட்டையை பாண்டிற்குள் “டக் இன்” செய்தால் அதனை நேர்சீராகச் செய்வது – இப்படி பலவகை சாதாரணச் செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுக்காமல் செய்கிறோம். ஆனால் உணமையில் அவை மிகவும் முக்கியமானவை என்பதை நாம் அறியாமலிருப்பது நமக்கு எவ்வளவு இழப்புக்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் நாம் அறிந்தோமில்லை!
நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம் நடையுடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் உள்ளார்கள் என்று அறியும்போது நமக்கு மிக அதிர்ச்சியாக இருக்கும். நாம் நம்மையறியாமல் செய்யும் (sometimes due to nervous habits) அங்க சேஷ்டைகளை மக்கள் கூர்ந்து கவனித்து கிண்டலடிப்பது நமக்கு பெரும்பாலும் தெரியவருவதில்லை. ஆனால் நாம் சிலரிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முன்றாம் மனிதர்களின் பழக்க வழக்கங்களை வைத்து கேலி செய்வதைக் காண்கிறோம். நமக்கும் இந்த கதிதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
சாதாரணமாக இத்தகைய உரையாடல்களை அன்றாடம் செவிமடுக்கிறோம்:
“அவரா, எப்போதும் பங்கி மாதிரி தொளதொள சட்டை போட்டுகிட்டு வருவாரே, அவர்தானே”
“அந்த மூக்கு நோண்டிதானே”
“நேத்து அந்த ‘நாக்கு துருத்தி’ வந்திருந்தான்ய்யா”
“ஏனய்யா, அந்த ஆளு தலையை சீவவே மாட்டானா? எப்ப பாத்தாலும் இப்பத்தான் படுக்கையிலேருந்து எந்திரிச்ச மாதிரி இருக்கான்”
இதையெல்லாம் விடுங்க. நீங்கள் ஒரு பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியராக வேலை பார்த்தாலோ அல்லது அங்கு சென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராயிருந்தாலோ நீங்கள் கட்டாயம் உங்கள், டிரெஸ், உடலசைவு, அனிச்சைச் செயல்கள் இவற்றில் முழுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் செயல்களை வைத்தே உங்களுக்குப் பட்டப் பெயர் சூட்டிவிடுவார்கள். அதுவும் இப்போதைய இண்டெர்நெட் உலகில் தொழில்நுட்பத்தை வைத்தே உங்களை பாடுபடுத்தி விடுவார்கள்.
என் நண்பர் ஒருவர் ஒரு பொறியியல் கல்லூரிக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி விட்டு வந்தார். அவர் ரொம்பப் பேசி “கிரைண்டு” பண்ணினாரோ, அல்லது பசங்களுக்கு வெறுப்பேத்தரமாதிரி ஏதேனும் அறிவுரை கொடுத்துவிட்டு வந்தாரோ தெரியாது. ஆனால் அவர் சென்று வந்த ஓரிரு நாட்களில் யூடியூபில் (YouTube) ஒரு வீடியோ படத்தை வலையேறிவிட்டார்கள், அந்த கல்லூரி மாணவ மணிகள். அந்த வீடியோ குறும்படத்தில், என் நண்பர் கையைச் சொறிவதும், பிருஷ்ட பகத்தில் சொறிவதும், மூக்கிலிருந்து தங்கப் பாளம் தோண்டுவதும், மேலும் அவர் முகத்தில் தோன்றிய பலவித அஷ்டக் கோணல்களும் தெளிவாகக் காண்பிக்கப்பட்டன!
இன்னொருவர் தன் உறவினரின் பையனைச் சந்திக்கச் சென்றார். அவன் ஒரு பேச்சிலர். ஒரு லாட்ஜில் ரூம் எடுத்திருந்தான். அவனுடன் ஒரிரு நாட்கள் தங்கியிருந்து சென்றார். பாவம், அவர் குடும்பஸ்தர், பலவித கவலைகள். லாட்ஜிலிருக்கும் காமன் பாத்ரூமுக்குச் சென்று கடன்களை முடித்துவிட்டு ஏதோ நினைவில் ஃபிளஷ் செய்யாமல் சென்று விட்டார். பாவம், அந்தப் பையன். அவனை கிட்டத்தட்ட ஒரு மாதம் இதை வைத்தே காய்ச்சிவிட்டனர், அந்த லாட்ஜில் தங்கியிருந்தவர்கள். அதனால், மகாஜனங்களே, பாது ரூமிற்குச் சென்றால் ஒரு தடவைக்கு இரண்டு தடவை ஃபிளஷ் செய்து விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் உங்கள் மனைவியே உங்களை கிண்டல் செய்வார்!
ஆமாம், ஏதோ இழப்புக்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேனே! அவை அடுத்த இடுகையில்…!
Permalink
ஐயா,
நன்றாகச்சொன்னீர்கள். எவ்வளவு சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவு பெரிய்ய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன? இல்லற வாழ்க்கையில் பிணக்கம் வருவதற்கு பெரும்பாலும் இப்படிப்பட்ட “பைசா பெறாத” விஷயங்களே காரணங்கள் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன? படுக்கையில் எந்த பக்கம் படுத்துக்கொள்வது என்பதில் விட்டுக்கொடுக்க முடியாமல் பிரிந்த மணமக்களும் உண்டு!! இதனால் படிப்பினை என்னவென்றால் dont’ sweat the small stuff. ஆனால், இது நடைமுறையில் சுலபமில்லை. என் மூக்கில் விண்விண்ணென்று வலிக்கும் ஒரு காயமே எனக்குப் பெரிதாய் தெரிகிறது – சைனாவில் வெள்ளத்தில் பல்லாயிரம் பாழ் என்று இருந்தாலும். அதுபோல, சின்ன பிரச்சனைகளே வாழ்க்கையை சில சமயம் தடம் புரட்டி விடுகின்றன.
ஆனால், இம்மாதிரி சின்ன சேஷ்டைகளையும், மறதிகளையும் ஒரு குறைவாக காட்டி கேலி செய்வது நாகரீகம் அன்று. அது ஒருவித தாழ்வு மனநோயின் அறிகுறி.
நன்றி
ஜயராமன்
Permalink
unmaithan yar follow panrthu athayava think pannamudium ethu eppadi eruku