இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:-
சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் “கான்வாய்’ 9.30 மணிக்கு கோட்டைக்கு வந்தது. நுழைவாயிலுக்குள் நுழையும் போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்து முதியவர் ஒருவர் ஓடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரிப்பதற்குள், “தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள், முதல்வரிடம் புகார் கொடுத்தும் லஞ்சம் கேட்கிறார்கள்’ என்று கத்தியபடியே கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, முதல்வரின் கார் மீது வீசினார். காற்றில் பறந்த வேட்டி, பாதுகாப்பு காரின் மீது விழுந்தது.
முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை பிடித்து, துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.கே., நகரில் வசிப்பவர். பெயர் நாராயணன்(64); விவசாயி. இவருக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்திற்கு பட்டா கேட்டு, இருபது வருடங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா தருவோம் என்று அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இவரது மகள் வாங்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்துகிறார். முதல்வரிடம் புகார் கொடுத்தும், பட்டா கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இப்படி செய்து விட்டேன்’ என்று தெரிவித்தார். ண்எனினும், கோட்டை பாதுகாப்பில் “குறட்டை’ விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார் யார், என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர்
இதை வாசிக்கும்போது தெரியவரும் ஒரு விசனத்துக்குறிய உணமையைப் பார்த்தீர்களா:
இது ஜனநாயக நாடு. மக்களுக்குச் சேவை செய்யவே மந்திரிகள் உள்ளனர். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன், தன் கோரிக்கையை எற்போர் யாருமில்லை, பிரச்னையைத் தீர்ப்பார் யாருமில்லை, நியாயம் எங்கும் கிட்டவில்லை என்னும் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையில் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார். வீதியெங்கும், “நான் உங்கள் ஊழியன், உங்களுக்காகவே வாழ்கிறேன், தமிழினக் காவலன்” என்றெல்லாம் அறைகூவும் பிரம்மாண்டமான போஸ்டர்களையும், கட் அவுட்டுகளையும் நம்பி அந்த அப்பாவி மனிதர் முதல்வர்முன் தன் குறையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அந்த நிகழ்வுக்குப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், “பாதுகாப்பு என்னவாயிற்று, போலீஸ்காரர்கள் என்ன செய்தார்கள்” என்ற நோக்கில்தான் மேல்நடவடிக்கை எடுக்க முயல்கின்றனரேயன்றி, அந்த குடிமகனின் பிரச்னையை தீர்ப்பதற்கான செயல்முறையைப் பற்றி யாரேனும் (முதல்வர் உட்பட) மூச்சுவிடுகிறார்களா பாருங்கள்! அது ஒரு பொருட்டான விஷயமேயில்லை; முதல்வர் கார்முன் ஒரு சாதாரண மனிதன் வருவதாவது, இது தெய்வக் குற்றம், அரசாங்கக் குற்றம் போன்றதல்லவா! என்ன கொடுமை இது!
இயற்கையின் விசித்திரத்தைப் பாருங்கள் – ஒரு சாராரின் ஆதிக்க உணர்வையும் எதேச்சாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்து அதனைக் கட்டுடைக்கின்றனர். அதன்பின் இன்னொரு சாரார் தன் கையில் ஆதிக்கத்தை எடுத்துக் கொண்டு ஏனையோரை அடிமைப் படுத்துகின்றனர். பெயர்கள்தான் வேறாக இருக்குமேயன்றி வழிமுறை ஒன்றுதான். முன்பு அரசர் இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஆனால் அவர்க்குப் பெயர் முதன் மந்திரி (அ) பிரதம மந்திரி. ஆனால் பழைய முறையைவிட இந்த ஜனநாயகம் இன்ன்னும் மோசம். முன்பு ஒருநாட்டுக்கு ஒரு ராஜாதான். இப்போது பல ராஜாக்கள், பல பெயர்களில்.
அடித்தள மக்கள் அதேஅடித்தளத்தில்தான் உழல்கின்றனர். “இந்தா, பிடி”-யென்று வாக்குறுதிகளையும், உணர்வெழுச்சியூட்டும் சொல்லாடல்களையும் வண்டிவண்டியாக அள்ளி வீசுவார்கள். அவ்வளவே. படிநிலைப் பாகுபாடுகள், வர்க்க மேலாண்மை போன்றவை எல்லா காலகட்டத்திலும் ஏதாவது ஒரு உருவத்தில் இருந்தே தீரும். இதுதான் இயற்கையின் நியதி போலும்!
Permalink
I have gone through this incident. I felt very bad on the part of government functions. How long this atrocities would continue? Once only we are taking birth and what are the field of fights? we will have to find a solution to this for the present generation to get awareness