என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!
இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை “மாம்பலம் சகோதரிகளி“ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.
அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.
தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் “திக்குத் தெரியாத காட்டில்”, “சொன்னதைச் செய்திட சாகசமா”, “மா ரமணன்” போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் “காவாவா”, “தாயே யசோதா” போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை “கர்நாடக இசை” என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.
டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள்.
இது எப்பேர்ப்பட்ட பொய்மைவாதம் என்பது இசையறிந்த அனைத்து மக்களுக்கும் தெரியும். காஞ்சீபுரம் நயினாப் பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றவர்கள் முதல், எம்.எம்.தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, மதுரை சோமசுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற எண்ணிறந்த கலைஞர்கள் வாய்ப்பாட்டிலும் வயலினிசையிலும் தலை சிறந்து விளங்கியது வரலாறு.
“தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்” என்னும் கட்டுரையில் எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் தமிழக இசை வரலாற்றை மிகச்சிறப்பாக எழுத்தில் வடித்திருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர் சாதிப் பாகுபாடின்றி இசையை செவ்வனே கற்று சிறப்பாகப் பாடுகின்றனர். பல இசைக் கருவிகளும் – தாள வாத்தியங்கள் உட்பட – “பக்க வாத்தியம்” என்ற நிலையிலிருந்து உயர்ந்து தனி கச்சேரிகளாக நிறைய இரசிகர்களின் ஆதரவைப் பெற்று சக்கைபோடு போடுகின்றன.
இன வெறுப்பை தூக்கிப் பிடிக்கும் குறுமதியினர் இனிமேலாவது உண்மை நிலையை உணர்ந்து, விதண்டாவதங்களை விடுத்து, ஆக்கபூர்வமான சிந்தனையை நோக்கி தங்கள் மனங்களைச் செலுத்துவார்கள் என எதிர்பார்ப்போம்!
Permalink
மிகச்சிறந்த பதிவு.
என் பாராட்டுக்கள்.
Permalink
நல்ல பதிவு.
காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்
என்றார் பாரதி. இசை தரும் ஆனந்த அனுபவத்தில் மூழ்கித் திளைப்பதை விட்டு அதில் மொழி. சாதி அரசியலைப் புகுத்தி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கயவர்களின் தலையில் குட்டி யிருக்கிறீர்கள்.
Permalink
Isai enmadhu isaivipadhu.Eraivanai PANNKATTUM ESAIYAN enru sollum thevaram,Athil ketpavar purindhu kollum vagaiyai paadinal isaai inbum koodum, Tamil isai nadelllam paravavendum Athigaya murayil Bharathi padalai ulagu ariya seidavargal MS amma,DK Pattammal,Madurai Mani iyer,GNB kuripada thakavargal Inru andha paniyinai,Vijaya siva,Sanjay Subramanian,Surya Prakash ponror seivadhu magizvu tharuvadhu Isai inbum peruga,Mana thelivu peruga Barathi ramchandran
Permalink
பாரதி இராமச்சந்திரன்,
நீங்கள் கீழ்க்கண்ட வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் (அவற்றில் குறிப்பிட்டுள்ள முறைகளில்) அது தமிழாக மாறி இன்னொரு பெட்டியில் தெரியும். அதன்பிறகு அந்தத் தமிழாக்கத்தை மின்வருடி, நகலெடுத்து இங்கே ஒட்டிவிடலாம்.
1. http://www.higopi.com/ucedit/Tamil.html
2. http://www.suratha.com/unicode.htm
3. http://www.google.com/transliterate/indic/Tamil
4. http://quillpad.in/tamil/
எஸ்.கே