ஆம், இவ்வுலகில் புத்திசாலித்தனமாக பிழைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கோ யாரோ சொன்னார், எந்த நூலிலோ எழுதியிருக்கிறது என்று வரட்டு சித்தாந்தங்களில் மூழ்கி, தன் வாழ்க்கையையும், தன் குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுபவர் அநேகம். மக்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து நம் எதிவினையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் பிழைக்கும் வழி. 😆
நண்பர் பிகேபி தன் வலைப் பதிவில் கீழ்க்கண்ட செய்தியை எழுதியுள்ளார். அது உங்கள் மனத்தைத் தொடும் என்று என்ணுகிறேன்!
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?
இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.
அது ஒரு கிராமம்… சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.
முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்… சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே… இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க… அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்… இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் – முதலை சொல்வது மாதிரி… இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்… ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன… அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !
ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்…
நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல… முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.
பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த… முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.
முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது – புரிந்ததா… இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !
சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர… அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.
வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.
Permalink
எஸ். கே அய்யா,
அற்புதமான கதை. மிக பொருத்தமாய் எழுதியிருக்கிறீர்கள். இது குறித்து நிறைய சொல்லலாம். தங்கள் பதிவு பல கருத்துக்களை தொட்டுச்செல்கிறது. இம்மாதிரி ஆழமான கருத்தை மிகவும் அழகாக சொன்ன அந்த கதையை போட்டதற்கு நன்றி.
எப்படியாவது பிழைத்துக்கொள் என்றால் இங்கு பிழைப்பது என்பது எது? பொதுவில் சமுதாயத்தில் காசு பார்ப்பதிலும், அதிகாரத்தை ஈட்டுவதிலும் தான் இப்படிச்சொல்கிறார்கள். ஆனால், உங்கள் கதையில் பிழைப்பது என்பதற்கு லிட்டரலான ஒரு அர்த்தமே சொல்லப்படுகிறது – அதாவது உயிர்தப்புவது.
சமுதாயத்தில் வழங்கும் “பிழைப்பது” என்பது ஒரு மலினமான வாழ்க்கை. அதனால், ஒரு பிரயோசனமும் இல்லை. “வரட்டு சித்தாங்கங்களில் மூழ்கி துயரத்தில் ஆழ்ந்துவிடாதீர்கள்” என்று சொல்கிறீர்கள். இல்லை, எப்படியும் வாழ்வேன் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று இருப்பவன் கஷ்டப்படலாம், ஆனால் துயரப்பபட மாட்டான் – அவன் வாழ்வில் ஒரு நிறைவு இருக்கும்.. அவன் மனதில் ஒரு எழுச்சி இருக்கும். நம் கலாசாரமும், பாரம்பரியமும் காட்டும் பலப்பல யுக புருஷர்கள் எல்லோரும் நடந்த பாதை அதுதான். அதை நீங்கள் “ஒன்றுக்கும் உதவாத” பாதை என்று சொல்வது வருத்தமானது.
நீங்கள் சொன்ன “பிழைக்கத்தெரிந்தவர்கள்” மட்டுமே நிரம்பியிருந்தால் இந்த சமூகத்தில் நடப்பது காட்டாட்சியாகிவிடும். பின் இங்கு வாழ்க்கை இருக்காது, நாகரீகமற்ற ஒரு காட்டுமிராண்டித்தனமே மிஞ்சும். பலமானவர்களுக்கும், சக்தி பெற்றவர்களுக்குமே இந்த உலகம் உரிமையாகும். அபலர்களும், மற்றும் விளிம்பு மனிதர்களும் நசுக்கப்படுவார்கள். ஆதிக்க வெறியே மிஞ்சி விடும். இதையா நீங்கள் விரும்புகிறீர்கள். இம்மாதிரி “பிழைப்பதால்” தற்காலிகமாகமாக சில வெற்றிகள் கிடைக்கலாம், ஆனால் அவை கானல்நீராகும். அவற்றால் எந்த ஒரு மகிழ்ச்சியும் கிடைக்காது.
அப்படியென்றால், உலகத்தில் எல்லோரும் நேர்மையாகத்தான் நடந்துகொள்வார்களா என்று கேட்கிறீர்களா? இல்லை! நாம் உலகத்தில் நடப்பது நம் குறிக்கோள் மற்றும் வேல்யுசிஸ்டம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதனால், எல்லோரும் அப்படித்தான் நடப்பார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. இதைத்தான் “உன் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே” என்கிறான் கீதாசார்யன். இம்மாதிரி நடவடிக்கைகளில் மனம் தெளிவாகி, செயலும் சிறக்கிறது. உலகில் செய்நன்றி முதலான துரோகங்கள் இருக்கலாம் – அதனால் எப்போதும் சுயநலமாய் செயல்படுவது என்பது தீர்வாகாது. சொல்லப்போனால், பொதுநலமாக நடப்பதே மிகச்சிறந்த சுயநலம் என்கிறார்கள் சமூக விஞ்ஞானிகள். அதுவே தொலைகால வெற்றிக்கு வித்து. எப்போதும் தன்னையே நினைத்து “பிழைக்கப்” பார்ப்பவர்கள் விரைவில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போகிறார்கள்.
ஆகவே, இந்த “பிழைக்கப்பார்” என்ற அறிவுரை காலத்தால் ஏற்கப்படாதது. நம் இளைய தலைமுறைக்கு இம்மாதிரி அறிவுரைகள் எப்போதுமே எதிர்வினையாக முடியும். அதனால் நாம் இதில் கவனமாக இருக்கவேண்டும். நீங்கள் சொன்ன உதாரணக்கதையில் நான் பார்க்கும் சாரம் இதுதான். நல்லதைச்செய் ஆனால் பிறரிடமிருந்து பலனை எதிர்பாராதே என்று. இந்த “புத்த” கதைக்கு நேர் எதிராக ஒரு பிரசித்தமான “இந்து” கதை ஒன்று உண்டு. காசியில் கங்கையின் பிரவாகத்தில் தத்தளித்த தேள் ஒன்றை பலமுறை அந்த தேளினால் கொட்டப்பட்டும் காப்பாற்றியே தீர்ந்த ஒரு துறவியின் கதை. அறிந்திருப்பீர்கள். நம் கலாசாரமும், பாரம்பரியமும் நமக்கு போதிக்கும் அணுகுமுறை அதுதான். இந்த “புத்த” முறை அல்ல.
பொருட்களை தயாரிக்கும்போது அந்த பொருட்களால் பிறருக்கு தீங்கு ஏதும் நிகழாமல் தயாரிக்கவேண்டும். அதுமட்டும் இன்றி பிறரால் நிகழும் தீங்கையும் இந்த பொருள் தாங்க தகுதியுள்ளதாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த தயாரிப்பு. உதாரணத்திற்கு எல்லா எலெக்டிரிக் சாமான்களும் EMI எனப்படும் மின்காந்த அலைகளை பரப்பாமல் இருக்க வேண்டும். அதே சமயம் பிற உபகரணங்களிலிருந்து வெளியாகும் EMI அலைகளையும் ஏற்க தயாராக இருக்க வேண்டும். நெருப்புப்பொறி விஷயத்திலும் அப்படித்தான். நாமும் இந்த உலக வாழ்க்கையில் இவ்வாறே இருக்க பழக வேண்டும். வெற்றியின் ரகசியம் இதுவே. நல்லதே செய், ஆனால் கெட்டதை ஏற்க பழகு. இது உங்கள் பாஷையில் “வரட்டு சித்தாந்தம்” ஆக இருக்கலாம். ஆனால், வரண்ட சித்தாந்தம் அல்ல.
நன்றி
ஜயராமன்
Permalink
ஜெயராமன்,
நுட்பமான பல விஷயங்களைத் தொட்டிருக்கிறீர்கள். நான் இன்னும் சிறிது ஆழ்ந்து படித்துவிட்டு தனி இடுகையாக என் எதிர்வினையை தெரிவிக்கிறேன்.
நன்றி.
எஸ்.கே
Permalink
ஹூம்!!! படிக்காமலேயே “எதிர்வினை” செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள். என்னத்தை சொல்வது!!! :-)))
இது என்ன, “சுகபோதானந்தா” என்று போட்டிருக்கிறீர்கள். இந்த கதை அவர் (சொன்னதா?) விட்டதா? – அவர் எங்கிருந்து சொன்னாரோ?
Permalink
ஜெயராமன்,
முழுதும் கற்றவன் என்று ஒருவரும் இல்லை.
நீங்கள் தொட்டுள்ள “சித்தாந்தங்களை” என் புரிதலில் எதிர்கொள்ள (Off the cuff தோன்றியவற்றை சற்றே ஆறப் போட்டு) அவைசார்ந்த நூல்களை இன்னும் சிறிது வாசித்துவிட்டு பதிலுரைக்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறேன். ஏனென்றால் உங்களைப்போன்ற அணுகுமுறை கொண்டவர்கள் பலருக்கு என் பதிலாக இருக்கட்டும் என்றுதான்!
தாக்கியபின் இமோடிகான்களை இடுவது நமக்குத் தெரிந்த ஒருவருடைய பழக்கம். அது உங்களுக்கும் தொற்றிக்கொண்டதா!!