பஞ்ச ரத்தினம்

எனக்கு மிகவும் “டென்ஷண்” ஏற்றிவிடும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தியாகராஜ ஆராதனையின் முத்தாய்ப்பான “பஞ்சரத்ன கீர்த்தனை” கோஷ்டி கானம்தான். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் ரேடியோ நேரடி ஒலிபரப்பின்போதும் அப்படித்தான். ஒவ்வொரு பாடகரும் நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு, பலவிதமான் சுருதிகளில் ஒரு cacophony-ஐ கிளப்பிக் கொண்டிருப்பார்கள். டி.வி வந்தவுடன் இது இன்னும் மோசமாகிவிட்டது. பக்தியோ, சிரத்தையோ சிறிதுமில்லாமல், டி.வியில் முகம் காண்பிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு, அங்கு அடிக்கப்படும் லூட்டியைக் கண்டால் சாதாரணமானவர்களுக்குக் கூட பிரஷர் ஏறிவிடும்.

இன்று காலை பொதிகையில் பஞ்சரத்ன கீர்த்தனை நேரடி ஒளிபரப்பு. அங்கே வெளிச்சமாகக் காணமுடிந்தது பகட்டும், படாடோபமும் தான். “பஞ்ச”மாக இருந்த ரத்தினங்கள், பக்தியும், ஈடுபாடும், தியாகராஜர்மேல் நன்றியுணர்வும்!

முதலில் நாகஸ்வர இசை, பின் வேணுகானத்தில் இழைந்த “சேதுலார” கீர்த்தனை. ஆதன்பிறகு தொடங்கியது ஒரு டிராமா. கேமரா நிலைகுத்தி நின்றது ஒரு படாடோபமாக “பட்டை” தீட்டிக் கொண்டிருந்த ஆசாமி முன்னால். வாயை “அஷ்டக் கோணல்” ஆக்கிக் கொண்டு, கைகளை உயர்த்தி ஆதி தாளத்தை போட்டுக் காண்பித்து, பின் கீர்த்தனை தொடங்கியவுடன் சிறிது வாயசைத்து விட்டு நிறுத்திக் கொண்டார். அவர் தன் முன்னால் மைக்கை வைத்துக் கொள்ளவில்லை. கேமராவுக்கு முகத்தை மறைக்கும் என்பதாலோ, அல்லது தான் எப்படியும் பாடப்போவதில்லை, வேறு வாத்தியமெதுவும் வாசிக்கவும் இல்லை என்ற கருத்திலோ தெரியவில்லை. ஆனால் காமிரா மட்டும் அவரை சுற்றிச் சுற்றி வந்தது. அவரருகில் அமர்ந்திருந்தார் உண்ணிகிருஷ்ணன். அதனால் அவரும் தெரிந்தார்.

ஆனால் அவரை “பீட்” செய்து விட்டார் ஒரு பெண்மணி. அவருக்கு மட்டும் மூன்று மைக். மற்ற பெண் பாடகிகளுக்கு 5, 6 பெருக்கு பொதுவாக ஒரு மைக்தான். அந்த மூன்று மைக் பாடகி ஒரு கூடை பூவுடன், சர்வாலங்கார பூஷிதையாக, உதட்டுச் சாயப் பூச்சுடன் வீற்றிருந்தார். இடையே யாரையோ பார்த்து சிரித்தார். தன்னை மறந்து இசையுடன் லயித்துப் பாடிக்கொண்டிருந்த விஜய் சிவா, மகாராஜபுரம் இராமச்சந்திரன் போன்ற பல பாடகர்கள் முன் மைக்கே இல்லை. நமக்கெல்லாம் பரிச்சயமான பல முகங்கள் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் காண முடிந்தது.

முதல் பாட்டான “ஜகதானந்த காரகா” விறுவிறுப்பாக முடிந்தது. பிறகுதான் “பந்தா” பாகவதர்களின் வண்டவாளம் தெரிந்தது. இரண்டாவது கீர்த்தனை “துதுகூ கல” (கௌளை) கச்சேரிகளில் பாடப்படுவதில்லை. ஆகையால் பிரபலங்களுக்கு பாடமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக முனகல்தான் கேட்டது. ஆனால் ஸ்வரங்களையும் பாட்டையும் விடாமல் பாடிய பாடகர்கள்முன் மைக் இல்லை.

கேரளாவில் நடக்கும் செம்பை ஆராதனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். வீடியோ கேமரா பக்கம் யாரும் பார்ப்பதில்லை. துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பக்தியுடன் பாடிக்கொண்டிருப்பார்கள். இங்கேயோ, தியாராஜர் சன்னிதியில் அபிஷேகம் நடக்கும்போது அங்கே நின்றுகொண்டிருந்தவர்கள்கூட அவரைப் பார்க்காமல் கேமராவை நோக்கியவண்ணம் இருந்தனர். முன்வரிசை பாடகர்களோ, ஏதோ சினிமாவில் நடிப்பதுபோல் பல வண்ணங்களில் சால்வைகளைப் போர்த்திக் கொண்டு “போஸ்” கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கே “பளிச்”சென்று பொன்னிற முகத்துடன் ஒரு பாடகியைக் கண்டேன். அவர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, “அது யார் தெரியால்லையா? “சஹானா”-ல வந்தாங்களே அனுராதா சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, அவர்தான். இதற்குத்தான் கொஞ்சம் பொது அறிவு வேண்டும்” என்று என் மனைவி பாடமெடுத்தார். கிரிக்கெட் ஸ்கோர், டி.வி சீரியல் – இவை பற்றியெல்லாம் தெரியாமல் இருந்தால் நம்மை புழு பூச்சிபோல் பார்ப்பார்கள். கர்நாடக இசையைப் பற்றி தெரியாமலிருக்கலாம். நீங்கள் ஒரு கச்சேரிக்குச் சென்றீர்களானால் “ராகம்-பாட்டு” கையேடுகள் கிடைக்கின்றன. அகராதிபோல் அதை எல்லோரும் பிரித்துவைத்துக் கொண்டு, ‘ஆகா, இது “கீர்ணாவளி”; “கீரவாணி”ன்னு சொல்றயே’ என்று பேசிக் கொள்வார்கள். நமக்கு உடனே “கீரை வடை” ஞாபகத்துக்கு வந்து, கேன்டீனைப் பார்க்க ஓடுவோம்!

கூட்டத்தில் சில வெளிநாட்டவர்கள் தலையை அசைத்து இசையை ரசித்துக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

சல்வார், கமீஸுடன் சில அழகிய பெண்கள் இசையில் லயித்துப் பாடிக்கொண்டிருந்தனர். “மேக்கப்” ஏதுமில்லாமலேயே அவர்கள் அழகாயிருந்தார்கள். 🙂

இரண்டு இரத்தினங்களுக்கு மேல் பார்க்க நேரமில்லை. அந்த “சாம்பிள்” போதும். மூன்றாவதான (சாதிஞ்சனே) ஆரபி கிருதியையும், ஐந்தாவதான (எந்தரோ மகானுபாவலு) ஸ்ரீ ராக கீர்த்தனையையும் நிச்சயம் எல்லோரும் பாடிவிடுவார்கள். வராளியில் தான் துழாவுவார்கள்.

அதுசரி, தியாகராஜ கிருதிகளைத் தான் பெரும்பாலும் எல்லா வித்வான்களும் கச்சேரிகளில் கையாளுகிறார்கள். அவருக்கு (அவர்தம் சந்ததியாருக்கோ, அவர் பெயரிலமைந்த ட்ரஸ்டுக்கோ) ஏதேனும் “ராயல்டி” கொடுக்கிறார்களா. அல்லது ஒரு பாட்டுக்கு இவ்வளவு துகை என்று உண்டியலில் போட்டு, அதை கஷ்டப்படும் இசைக்கலைஞர்கள் யாருக்கேனும் கொடுத்துதவுகிறார்களா, தெரியவில்லை!

1 Comment


  1. As you said correctly, these popular people are coming there to just show that they are their in the market and they are very much thankful to Thiyagaraja, at least by their presense, if not by heart. There is this long time ‘mana varuttham’for many in tamilnadu. Why not these popolar artists conduct a tamil isai vizha for ‘bharathi, papanasam sivan and other tamil poets. This should be the topic we need to debate and bring some change in the music world in chennai/ tamilnadu.

Comments are closed.