நான் சிறுவயது முதலே பல முஸ்லிம்களுடன் பழகி வந்துள்ளேன். எங்கள் ஊரில் முஸ்லிம்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கப்பலில் சென்று வாணிகம் செய்யும் மரைக்காயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உருது பேசுவதில்லை. தமிழில் அவர்களுக்கான முறையில் பேசுவார்கள் – வாப்பா, அத்தா, மச்சி – இதுபோன்று. பிராமணர்களுக்கு எவ்வாறு ஒருவித பரிபாஷை இருந்ததோ, அதுபோல்தான் இவர்களுக்கும். அவர்கள் எல்லா வகுப்பினருடனும் நன்கு பழகுவார்கள். என்னுடன் பள்ளியில் படித்த பல முஸ்லிம்கள் இன்னும் நண்பர்களாக உள்ளனர்.
நான் சிறுவனாக இருந்தபோது எங்களூரில் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் ஜாதியின் பெயரைச் சொல்லித்தான் அழைத்துக் கொள்வார்கள்.ஆனால் அதில் காழ்ப்புணர்ச்சி இருக்காது. வெறுப்பு இருக்காது. “என்ன ஐயரே”, “என்ன பாய்”, “பிள்ளைவாள்”,”முதலியார்வாள்”, “நாயுடுகாரு” இதெல்லாம் சர்வசாதாரணம். பரஸ்பரம் அன்புடனும் நேயத்துடனும் பழகுவார்கள். என்தந்தைக்கு நெருங்கிய நண்பர் ஒரு பாய் தான்.தினமும் மாலையில் சிறிது நேரம் அவருடைய ஜவுளிக் கடைக்குச் சென்று பேசிவிட்டுத்தான் வருவார். நான் அவரைப் பார்க்க அங்குசென்றால், அங்கு அமர்ந்திருக்கும் இன்னொரு முஸ்லிம் நண்பர் என் கையைப் பிடித்துக் கொள்வார். அவ்வளவுதான், விரல்களை நசுக்கி எடுத்து விடுவார். “விடுங்க,விடுங்க” என்று துடிப்பேன். ஆனால் அவர் “டேய், உன் அப்பன் பேச்சைக் கேட்டுக்கிட்டு பருப்பு சாம்பாரே சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்னா இப்படிநோஞ்சானா இருக்க வேண்டியதுதான். நாளையிலிருந்து கறி,மீன் சாப்பிட ஆரம்பி, நீயும் சுல்தான் (அவர் மகன்) மாதிரி ஆயிடலாம்” என்பார். என் தந்தை சிரித்துக் கொள்வார். அந்த பாய் பெரிய பணக்காரர். ஆனால் சிம்பிளாக இருப்பார். பூச்சிகடிக்கு மந்திரித்துக் கொடுப்பார். நான் பலமுறை இதற்காக அவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். இப்படி ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்து “மில்ஜுல்கர்” வாழ்ந்து வந்தோம். குடும்ப நண்பர்களாக இருந்தோம்.
பொதுவாகவே முஸ்லிம்களிடமிருந்து ஏனையோர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. அவர்கள் சோம்பித் திரியமாட்டார்கள். நல்ல உழைப்பாளிகள். ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்வார்கள். கூட்டம் கூடி நின்று அரட்டை அடித்து தன் பொன்னான நேரத்தை வீணடிப்பதில்லை. இன்றைக்கும் பலவித வணிகங்களில் அவர்கள் ஓங்கியிருக்கிறார்கள். குடந்தையில் விடியற்காலை வெற்றிலை ஏலம் நடக்கும். அதில் முஸ்லிம்கள்தான் பங்கெடுத்துக் கொள்வார்கள். சென்னையில் சைனா பஜாரில் உள்ள இரும்புக் கடைகள் எல்லாமே (அநேகமாக) “தாவூதி போரா” என்னும் முஸ்லிம் வகுப்பினர்கள் கையில் இருக்கிறது.
எனக்கு மதம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் ஈடுபாடு. சாதிப் பாகுபாடு பார்ப்பதேயில்லை. நமக்கு இருக்கும் அனறாடப் பிரச்னைகளே ஆயிரம் இருக்கிறது. இந்த விசாரம் வேறு எதற்கு!
இப்போது சிறிது இடைவெளி!
நான் முதன் முதலில் தமிழில் பதிவு எழுதத் தொடங்கும்போது ரொம்பத் திரிங்க்காக இருந்தாது. அதுவரை ஆங்கிலத்தில்தான் இணையத்தில் பதிய முடியும்; தமிழில் எழுத வேண்டுமானால் அதற்காக Portable Font Format என்று ஒரு மென்பொருள் வாங்கி அதனை வலைப் பக்கத்தில் சேர்க்கவேண்டும் என்கிற நிலை இருந்தது. பிறகு யூனிகோடு முறை பெருமளவில் செயல்படுத்தத் தொடங்கியபின், i18n, l10n போன்றவைகளின் உதவியால் மொத்தமும் தமிழில் பாவிக்க மிக வசதியாகிவிட்டது.
ஏதோ எழுதத் தொடங்கினேன். “தமிழ்மணம்”திரட்டத் தொடங்கியபின் என் பதிவுகளுக்கு நிறைய விருந்தினர் வந்தனர். பல நண்பர்கள் கிடைத்தனர். நிறைய விஷயங்களும் அறிந்துகொள்ள முடிந்தது.
என்னைப் பொறுத்தவரையில் மதம் என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். அதுவே வாழ்க்கையாகாது. “Epicurianism” பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாது. இந்து மதம் போல அதுவும் இன்னொரு மதம். “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு, நம் வழி நமக்கு” என்று அதைப் பற்றி எந்தவொரு தீவிர ஆராய்ச்சியிலும் இறங்கியதில்லை. முதன் முதலில் நபிகள் நாயகம் பற்றியும் வஹி முதலியவை பற்றியும் நேசகுமாரின் கட்டுரைகளைப் படித்தபின் தான் ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. முழு விவரம் தெரியாது என்பதால் நான் இந்த விஷயத்தில் பலர் எழுதுவதைப் படிப்பதோடு சரி. எந்தவித சர்ச்சையிலும் ஈடுபடுவதில்லை. எந்த மதத்தையும் மட்டமாக எழுதுவதில்லை. விமரிசிப்பதில்லை. இப்போதுகூட சில முஸ்லிம்களுக்கு என்மேல் உள்ள ஒரே கோபம், நான் நேசகுமாரின் பேட்டியை என் பதிவில் வெளியிட்டு அவருக்கு என் தார்மீக ஆதரவு கொடுத்தேன் என்பதுதான். இந்த இடத்தில் ஒரு உண்மையை உங்களுக்குத் தெளிவாக்க விரும்புகிறேன். நேசகுமார் ஒரு முன்ஜாக்கிரதையான மனிதர். முன்பின் அறியாத என் முன்னால் தன்னை இன்னார் என்று வெளிப்படுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. நான் நட்சத்திரப் பதிவராக இருந்தபோது புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி அவருடைய பேட்டியை வெளியிடலாம் என்ற அவாவை அவருக்கு ஈமெயில் மூலம் தெரிவித்தேன். அவர் நேரில் வரமுடியாது என்றும் என் கேள்விகளை ஈமெயில் மூலமாகவே அனுப்பினால் அவர் பதிலுரைப்பார் என்று சொன்னார். ஆனால் ஒரு “த்ரில்” இருக்கட்டுமே என்று சற்று adventurous-ஆக நேரில் பேட்டி கண்டதுபோல் எழுதியிருந்தேன். ஆனால் உண்மையை இணைய நுணுக்கங்கள் தெரிந்த “ஆப்பு” என்பவர் கண்டுபிடித்து எழுதிவிட்டார். உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. “நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே” என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை. நேரில் கண்டதாக எழுதியது தவறு. சிறுபிள்ளைத்தனமான செயல்.
இப்போது தமிழ்ப் பதிவுலகத்தில் திட்டலும், கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்களும் பெருகிவிட்டன. என் பதிவுகளுக்கு வரும் சில மட்டுறுத்தப்பட்ட பின்னூட்டங்களைப் படித்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் என்று தோன்றும் (“சாவது தானேடா, நீ இருந்து என்ன பயன், பர்ப்பனப் பன்னாடையே” என்று இதற்கு உடனேயே ஒரு பின்னூட்டத்தை எதிர் நோக்குகிறேன்!!)
இன்றும் எனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்கு என் மனப்போக்கு, உள்ளப்பாங்கு, கண்ணோட்டம் எல்லாம் நன்கு தெரியும். அவர்கள் எல்லோரும் என்னைவிட நல்லவர்கள். மனித நேயம் மிக்கவர்கள். ஜிகாதி, வஹாபி அணுகுமுறை இல்லாதாவர்கள். அவர்களுடன் தொடர்ந்து தொடர்புகள் கொண்டிருக்கிறேன். இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தூரக் கிழக்கு நாடுகளிலும் அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவன்.
சரி. தமிழ்மணத் திரட்டியிலிருந்து இந்தப் பதிவுடன் விடை பெறுகிறேன். இனிமேல் சாதிப் பிரிவினை ஒழிய வேண்டும், தலித்துக்கள் வேதம் பயில வெண்டும் என்னும் விஷயங்களைப் பற்றியும், டெக்னிகல் விஷயங்களையும் பற்றி எப்போதாவது எழுதுவேன். ஏனெனில் வேறு பல அலுவல்கள் நிலுவையில் இருக்கின்றன. உடல்நிலையும் அவ்வளவு சரியில்லை. இன்னும் எவ்வளவு நாளோ!!
மற்றபடி இது ஒரு நல்ல அனுபவம்.
நன்றியுடன்,
எஸ்.கே
Permalink
கடையை மூடறீங்களா என்ன?
Permalink
இல்லீங்க. பெட்டிக்கடை திறந்தேயிருக்கும். தமிழ்மணத் தோட்டத்திலிருந்துதான் விடைபெறுகிறேன். நீங்கள் என் பதிவை Bookmark (Favourites)-ல் சேர்த்துக் கொண்டு அடிக்கடி வருகை தாருங்கள்.
நன்றி.
Permalink
என்ன நீங்களுமா??
சரி வேறென்ன பண்ணுவது? முடிந்த போது அங்கு வந்து பார்க்கிறேன்.
தரமான பதிவுகளை கொடுத்து படிக்கவைத்ததற்கு “நன்றி”
Permalink
வடுவூர் குமார்,
உங்கள் ஊக்கம் கொடுக்கும் சொற்களுக்கு நன்றி.
அடிக்கடி வாருங்கள்.
அன்புடன்,
எஸ்.கே
Permalink
உங்கள் பதிவுகளை அவ்வளவாக படித்திராதவன் நான்…கடைசீயாக உங்கள் பதிவில் படித்ததை நினைவில் இருந்து கொண்டு வரமுடியவில்லை…ஆனால் இந்த பதிவு உங்கள் உள்ளத்தினை எவ்வளவு அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளது…
சாதி சண்டையும் அரசியலும் தனிமனித தாக்குதலும் நிறைந்துள்ள இந்த வலையுலகில் உங்களளப்போன்ற மென்மையான இதயம் கொண்டவர்கள் தொடர்ந்து இயங்குவது கஷ்டம்தான் என்று மட்டும் புரிகிறது…
தொடர்ந்து இயங்குங்கள், உங்கள் அனுபவத்தில் இருந்து நல்ல பதிவுகளை தாருங்கள், உங்களின் புது வாசகன் இந்த ரவி…
Permalink
கிச்சு சார், நீங்களும் போறீங்களா? தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது? ஒண்ணுமே புரியலை!
🙁
Permalink
thangal pathivu nantraga ullathu..vaztthukkal…