தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் “இந்தியும். நந்திகளும்” என்னும் தலைப்பிட்ட “திண்ணை“க் கட்டுரையும் வாசியுங்கள்.
“திராவிட” என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். “மதராசியா, அவன் ஒரு ‘அகடம் பகடம்’ ஆளய்யா” என்பார்கள்!
இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.
இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் செல்வம் – அது இந்தியில்தான் பேசுகிறது!!
நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?
சிந்தித்துப் பாருங்கள்.