மிஸ்டு கால்!

என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!

“ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க”, இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே “பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்” என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, “பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்” என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:

” இதுங்க சும்மா ‘மிஸ்ஸீடு கால்’ தான சார் கொடுக்குதுங்க” என்றார்!

அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, “கெக்கே கெக்கே” என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி – என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். “இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க” என்றாள்!

எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். “நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” – இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.

ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!

உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!! 🙄

3 Comments


 1. வீரவேல் ! வெற்றி வேல் !

  கௌரவமான குலப்பெண்களை கைது செய்யும் காவல்துறை பற்றித் தெரியுமா?

  மேல் விவரங்களுக்கு: http://cuziyam.wordpress.com/2008/03/09/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/

  வந்தே மாதரம் !


 2. இந்தியர்களின் வளைந்துகொடுக்கும் திறத்துக்கும், புதுப்பொருட்களில் தன் வழியைத் தேர்ந்தெடுக்கும் திறனுக்கும் சான்றாக நான் இந்த மிஸ்டு கால் வழக்கத்தை காண்கிறேன்.

  இந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் நுகர்வோர்களை அநியாயமாக உறிஞ்சுகின்றன. உள்ளூர் அழைப்புகள் பல நாடுகளில் பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. ஆனால், இந்தியாவில் இந்த சுரண்டல் தொடர்கிறது.

  இந்த தொலைதொடர்பு நிறுவனங்களின் சேவைத்தரமும் மிகவும் கீழ்த்தரமாய் இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் கார்டுகளில் இந்த நிறுவனங்கள் சேவைக்கட்டணம், அதிக விலையான அழைப்புக்கட்டணம் என்று நியாயமில்லாத முறைகளில் சுரண்டுகின்றன. இந்திய பயனாளிகளில் 70 சதம் இந்த ப்ரீபெய்ட் அழைப்புகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆச்சரியமாக, ட்ராய் முதலான ஒழுங்குமுறை கண்காணிப்பு நிறுவனங்கள் கூட இந்த ப்ரீபெய்ட் கட்டணத்தை நிர்ணயிக்க தவறிவிட்டன. மொத்தத்தில் இந்த பழக்கம் ஒரு விதத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அநியாய வியாபாரமுறைக்கு ஏற்பட்ட ஒரு எதிர்விளைவே. இதில் நகைச்சுவையோ, கிண்டலோ நான் காணவில்லை.

  தங்கள் பதிவுக்கு நன்றி

  ஜயராமன்


 3. உங்கள் கருத்துக்கள் முழுதும் சரி. ஜயராமன்.

  நிறைய நிறுவனங்கள் இந்தத் துறையில் இருப்பதால் அவர்களுக்குள் போட்டி மிகுந்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நடைமுறையில், அந்த நிறுவங்கள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்து cartel formation செய்துகொண்டு, நுகார்வோர் ஜேபியில் கைபோடுகிறார்கள். அந்தத் துறைக்கான கட்டுப்பாட்டு நிறுவ்னங்களும் கண்டு கொள்வதில்லை.

  என் கவலையெல்லாம், இந்த மிஸ்டு கால்களுக்கும் காசு கேட்கத் தொடங்கிவிடுவார்களோ என்பதுதான்!

  நன்றி

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.