நல்லோர்க்கல்ல இவ்வுலகம்!

நல்ல உள்ளம்!எங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் ஒரு தனி மனிதன். ஆம், அவரைச் சுற்றி நின்றவை பல லட்சம் தலைகள். ஆனால் அவர் தன்னந் தனியனாகத்தான் அங்கு நின்றார். கண்களில் கண்ணீர் வெள்ளம். கையில் பிடித்திருந்த ஒலி பெருக்கி மூலம் அந்த இளம் உள்ளங்களை நோக்கி வேண்டுகிறார். “இங்கிருந்து கலைந்து சென்றுவிடுங்கள். நான் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். நான் வெகு தாமதமாக வந்துள்ளேன். நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. தயவு செய்து விலகிச் செல்லுங்கள். உடனே செல்லுங்கள். இந்த இளந்தளிர்களின் இரத்தம் சிந்துவதை என்னால் தாங்க இயலாது” என்று இறைஞ்சி நிற்கிறார்.

அதுதான் அந்த மனிதர் வெளி உலகத்தைக் கண்ட கடைசி நாள்.

அந்த நாள்: 1989 மே மாதம் 19-ம் தேதி.

அந்த இடம் : டியனன்மென் சதுக்கம், பெயிஜிங், சீனா.

அந்த உயர்ந்த மனிதர் ஸாவோ சியாங் (Zhao Ziyang). அவர் சார்ந்த அமைப்புக்கு ஒவ்வாத நல்ல மனம் படைத்த அவருடைய ஆன்மா கடைசியாக பிரிந்த நாள் ஜனவரி 17, 2005. ஆனால் அவர் 15 வருடங்கள் முன்னமையே ஒருமுறை இறந்து விட்டார்.

சீன நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அவர். கட்சி (கம்யூனிசம்) வேறு, ஆட்சி வேறு என்ற கொள்கையை கொணர முயற்சித்தவர். சீனப் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் மலர வழிவகுத்தவர். தன் தந்தையை தன் கட்சி அரசியல்வாதிகளே கொன்றபோதும், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்தவர். சீனத்தின் மக்கட் தொகை மிகுந்த சீசுவான் மாநில ஆளுநராக ஸாவோ பணியாற்றும்போது, மக்களுக்கு அவர்களின் நில உரிமையை வழங்கி உற்பத்தியை 80 சதம் பெருக்கினார். அவர் செய்த சீர்திருத்தத்தின் பயனால் அங்கு பஞ்சம் தீர்ந்தது. அக்காலத்தில் அவரைப் போற்றி “yao chi liang, Zhao Ziyang” (உண்ண உணவு வேண்டுமா, ஸாவோ சியாங்கைக் கேள்!) என்று கோஷமிடுவார்களாம். அந்த அளவுக்கு சீனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.

The man!கலாசாரப் புரட்சியெனும் கொடுமைகளுக்குப் பிறகு சீன மக்கள் தனி மனித சுதந்திரத்தை சுவாசிக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். ஆனால் அவர் அதற்காகக் கொடுத்த விலை மிக அதிகம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஒரு கைதியாக, எந்த தனி மனித உரிமையும் இல்லாமல் 15 வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டு, விடுதலை பெறாமலேயெ நேற்று காலமானார் (ஜனவரி. 8 அன்றே இறந்து விட்டார் என்கிறார்கள் சிலர்). அவர் செய்த தவறு, அப்பாவி மக்கள்மீது ராணுவத்தை ஏவக் கூடாது என்று கட்சியில் வாதாடியதுதான்! ஒரு உண்மையான ஜனநாயகவாதியின் சோக முடிவு அது. He was a right man at the wrong place and time!

அந்நாட்டின் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக அவர் இருந்தபோதுதான் சீனாவின் அடக்கு முறை அரசியல் அத்தியாயம் முடிந்து மக்கள் உண்மையான ஜனநாயகத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த அடிக்குப் பின் விளைவாக மக்களுக்குக் கிடைத்தது மிகப் பெரிய மரண அடி!

The attack
மனித இரத்தத்தினால் எழுதப்பட்ட சீன சரித்திரத்திலேயே ஜூன் 4 (1989) ஒரு மனத்தை உருக்கும் துக்க நாள். அன்றுதான் அந்த நாட்டின் ராணுவம் தன் ராட்சத டாங்க் படையைக் கொண்டு அப்பாவி இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் நசுக்கிக் கொன்று கிழட்டு அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறியைத் தணித்த நாள். அங்கு மக்கள் எப்படி வேட்டையாடப் பட்டார்கள் என்பதை BBC – யின் இந்த வீடியோ படத்தில் காணளாம்:

பாவம்

The rescue

The unknown Rebel!தனி மனிதனாக இராணுவ டாங்குகளை எதிர்கொள்ளும் இந்த இளைஞனின் தீரத்தையும் பயமின்மையும் காணுங்கள். இந்த இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. இவனுக்கு “டாங்க் மனிதன்” மற்றும் “Unknown Rebel” என்ற பட்டப் பெயர்கள் உள்ளன. இவனை சீன ராணுவம் கொன்றுவிட்டது என்கிறார்கள்; இல்லை இல்லை, எங்கோ பதுங்கியிருக்கிறான் என்கிறார்கள் – இது போன்ற பல கதைகள் உலவுகின்றன. ஆனால் மனிதனுக்கு சுதந்திர தாகம் மட்டும் வந்துவிட்டால், எத்தகைய மனத்திட்பம் கொண்டவனாக ஆகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. அவன் ராட்சத டாங்கு களை எப்படித் தடுக்க முயலுகிறான் என்பதை CNN-ன் குறும்படத்தைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள். அவன் நின்று கொண்டிருந்த சாலையின் பெயர் “Great Avenue of Everlasting Peace”. What an irony! ஆனால் சீனாவில் இந்த டாங்க் மனிதனைப் பற்றி மக்கள் யாரும் கருத்துரைக்கவோ எழுதவோ முயலுவதில்லை. ஏனெனில் அங்கு அரசு இயந்திரத்தின் அடக்கு முறைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

டெங்குஅப்பாவி மக்களின்மேல் இந்த அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது யார் தெரியுமா? மாவோவுக்குப் பின் சீனாவின் விடிவெள்ளியாகக் கருதப்பட்ட டெங் சியாவோ பிங் (Deng Xiaoping) மற்றும் அவர் சீடர் லீ பெங். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த லீபெங், சீன மக்களால் மிகவும் விரும்பப் பட்டவரும் தன்னைவிட மக்கள் மத்தியில் புகழ் பெருகிறார் என்பதற்காக அவருடைய புற்று நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு மாவோவால் அனுமதிக்கப் படாமல் இறந்துபோனவருமான சூ என் லாயின் வளர்ப்பு மகன்.. இந்த சூ யென் லாய் தான் ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர். “பஞ்ச சீலம்”, “ஹிந்தி-சீனி-பாய் பாய்” போன்ற வாசகங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் எல்லாவற்றிற்கும் “பெப்பே” என்று நம்மீது படையெடுத்து, நேஃபா மற்றும் அக்சாய் சின் பகுதியில் பெரிய நிலப் பரப்பை சீனா தன்வசப்படுத்தியது இன்னொரு சரித்திரம்.

இந்த அடக்கு முறைக்குப் பின் ஸாவோ பதவி நீக்கம் செய்யப் பட்டு சிறையிடப் பட்டார். ஆனால் இறந்த பின்னும் அவர் இன்றைய சீனத்தின் அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவருக்கு முன்னால் சீர்திருத்தம் செய்ய முற்பட்ட தலைவர் ஹ்யூ யாவொ பெங் இறந்த பின் அவர் நினைவாக மக்கள் கூடியபோது வெடித்ததுதான் டியனன்மென் புரட்சி. அதற்கு முன் சூ யென் லாய் இறந்த போதும் இது போன்ற கிளர்ச்சி எழுந்தது.

இந்த உலகத்தில் நல்லவர்கள் கையில் எந்த அதிகாரமும் நிலைக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் ஸாவோ சியாங்!

3 Comments


  1. இத்தனை பெரிய மனித உரிமை மீறல் உலக அரங்கில் சகித்துக்கொள்ளப்பட்டது பல சமூகங்களின் உண்மை சொரூபத்தைப் புரிந்துகொள்ள உதவியது. நல்ல நடை. உருப்படியான தகவல்கள். நன்றி.


  2. பிபிசியின் வீடியோ படத்தை உள்ளிட்டிருக்கிறேன். பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.