தோடா !

இந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம்!

தன்னோ ஹம்ஸப் ப்ரசோதயாத்சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு (!) ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். நான் படித்த பள்ளி என்பதாலும் அந்த நிறுவனம் ஆற்றும் தொண்டின் சிறப்பை நன்கு அறிந்தவன்என்பதாலும் இது எனக்குக் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் எனக் கொண்டேன். இதை என் மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட போது, கிடைத எதிர்வினை இது:

“இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு யாராவது பெரிய மனிதர்களைத்தானே கூப்பிடுவார்கள். ம்ம்ம்!”

சரி, தாமஸ் கார்லைல் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஒரு மனிதன் தனக்கு மிக அருகாமையிலேயே இருக்கும் எவருக்கும் ஒரு ஹீரோவாக இருக்க முடியாது என்பதால், தூரத்தில் இருப்பவர்களை ஏமாற்றுவதே சுலபம் என்று எண்ணி மனைவியை மன்னித்து விட்டேன்.

ஒரு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்றி விட்டு வந்த பிறகு மையமாக மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் விழா நடந்தது. இரண்டு பாண்டு குழுக்கள் இசைத்துக் கொண்டு முன்னே செல்ல, ஒரு ஊர்வலம் போல் விழா நடந்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றதுதான் மிக்க கூச்சமாக இருந்தது.

மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள். அதிலும் தபேலா வாசித்த பையன் தேர்ந்த வித்துவான் போல் தன் கைவண்ணத்தைக் காண்பித்து எல்லோர் மனத்தையும் கவர்ந்தான். இரு மாணவர்கள் திருப்பூர் குமரன் மற்றும் நேதாஜி ஆகியவர்களின் தியாகத்தைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்கள்.

பிறகு நான் மைக்கப் பிடிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. என் மாணவ நாட்களில் இது போல் பல நிகழ்ச்சிகளை வெய்யிலில் மணிக்கணக்காக நின்று பங்கெடுத்த நினைவுகள் வந்தன. அதிலும் இதுபோன்ற தருணங்களில் சொற்பெருக்குகள் நேரக் கட்டுப்பாடின்றி நீண்டு கொண்டே சென்று பொறுமையை சோதித்த அநுபவம் நிறையவே உண்டு. ஒரு நாற்பது பக்கம் நோட்டு நிறையுமளவுக்கு எழுதி வைத்துக்கொண்டு ஏதோ ஆண்டறிக்கை வாசிப்பது போல் அது பாட்டுக்கு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும். யாராவது போய் அந்தப் பேப்பரை பேசுபவரிடமிருந்து பிடுங்க மாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறேன். ஐயகோ, நானும் இப்போது அது போன்ற கொடுமையை அந்தப் பிள்ளைகளுக்கு இழைக்கப் போகிறேனா?

சாதாரணமாக “மைக்”கைப் பிடித்தால் கடிகாரத்தை மறந்து விடுவதுதான் என் வழக்கம். அதிலும் கொஞ்சம் சூடு பிடித்தால் மெயின் சப்ஜக்டை விட்டு வெளியேறி கதை மற்றும் உப கதைகளாக உட்டுக் கொண்டே (சரக்கு தீரும் வரை) செல்வது எனக்குப் பிடித்தமான செயல். அதனால் எல்லோரும் என்னிடம், “உனக்கு ‘உரையாடல்’ என்பதே மறந்து விட்டது. எல்லாமே உரையாற்றலா’கவே இரு(அறு)க்கிறது” என்று முறையிடுகிறார்கள். ஆனால் என் அனுபவத்தில் எவ்வளவு தூரம் ஒரு பேச்சின் கருப் பொருளை விட்டு வெளியேறி கதைகளையும் ஜோக்கு களையும் உதிர்க்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் கேட்பவர்கள் காதைத் திறக்கிறார்கள். சப்ஜக்டிலேயே உழன்று கொண்டிருந்தால், காதுகள் தானாகவே இறுக்கமாக மூடிக் கொண்டு வாய்கள் மட்டும் “ஆ”வென்று திறந்து நம் வாயை மூடச் சொல்லி சிக்னல் கொடுக்கின்றன!

எப்படியோ நான் பேச ஆரம்பித்து விட்டேன். என்ன பேச வேண்டும் என்று முதல் நாளே எழுதி வைத்துக் கொண்டு அந்த காகிதத்தை மறக்காமல் எடுத்துச் சென்றிருந்தேன். அதைப் பிரிப்பதற்கு முன்னால், அங்கு நடந்த கலை நிகழ்ச்சியில் கலெக்டரின் டாவாலியாக நடித்த ஒரு பையனின் வசனத்தை நினைவு படுத்தி எல்லோரையும் வாழ்க்கையின் தத்துவத்தை அந்த வசனத்திலிருந்து சரியாகப் புரிந்து கொள்ளும்படி அறிவுரை கூறினேன். அப்படி என்னதான் சொன்னான் அந்தப் பையன்? இதுதான்:-

டாவாலி (கலெக்டரைப் பார்க்க வந்த ஒரு கிராமவாசியிடம்) :-

“போப்பா அப்பாலெ, கலெக்டரையைல்லாம் இப்போ பாக்க முடியாதுன்னு சொன்னா இங்கேயே நின்னு பேஜார் பண்ணறியே. உன்னோட பேசிக்கிட்டு இருக்கிற நேரத்திலே கலெக்டருக்கு ரெண்டு சலாம் போட்டாலாவது ஏதாவது புரமோஷண் கிடைக்கும்”

அவ்வளவுதான். எல்லாரும் நிதர்சன உலகத்தை நன்றாகப் புரிந்தவர்கள் போல – ஏனென்றால் அந்த வசனம் பேசப் பட்டபோதும் அதை நான் எடுத்துச் சொன்ன போதும் நிறைய கை தட்டினார்கள்.

கைதட்டினால், அதுவும் மாணவர்கள் தட்டினால், “பட்”டென்று வாயை clam shut – என்று பொருள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும் என்றாலும் அந்த சூழ்நிலையில் அவர்கள் ரசித்துத்தான் தட்டினார்கள் என்று அவர்களின் body language மூலம் தெரிந்து கொண்டு (!) மேலே தொடர்ந்தேன்.

குடியரசு தினத்தன்று பேசுவதற்கு விஷயம் வேண்டுமானால், குடியரசுத் தலைவரை விட வேறு நல்ல source கிடைக்குமாஎன்ன? போடு கூகிளை என்று திரட்டி வைத்திருந்த சரக்கை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விட ஆரம்பித்தேன். சுற்றி வளைத்து அன்றைய நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களைச் சொல்லி மாணவர்களை சிரிக்க வைத்து விட்டு, “உங்கள் முகத்தில் இந்த சிரிப்பு அப்படியே தங்க வேண்டாமா – வயது கூடக்கூட ஏன் அந்த சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது? இந்த வெளியுலகம் நமக்கு எந்த வித எதிர்காலத்தை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறதோ, நமக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ என்பதால் தானே” என்று திரு. அப்துல் கலாம் அவர்கள் பேசியவற்றை மேற்கோள் காட்டிப்பேசினேன். (plagiarize செய்யவில்லை!)

மெயின் பாயிண்டிலிருந்து சிறிது விலகி ஒரு எக்ஸ்கர்ஷன் போய்விட்டு அவ்வப்போது நிகழ்ச்சியின் கருவுடன் ஒரு தொடுப்பு கொடுத்துவிட்டு பிறகு மக்கள் கவனத்தில் தொய்வில்லாமல் பார்த்துக் கொள்வது நிஜமாகவே கடுமையான வேலையாகத்தான் இருக்கிறது. நான் முன்னால் சொல்லியபடி “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்று ஏதாவது one-liner – ஐ எடுத்து சுண்டி விட்டால்தான் ரசிக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு சின்சியராக மையக் கருத்திலே உழன்று கொண்டிருந்தால் “கிரைண்டு” என்று நமக்குப் பெயரிட்டு விட்டு அவர்கள் “கழண்டு” விடுவார்கள்! இன்று கூட Taj Cannemera-வில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். திரு. விட்டல் (முன்னாள் C.V.C) அவர்கள்தான் முக்கியப் பேச்சாளர். அவர் நடுநடுவே சொன்ன ஜோக்குகள்தான் மக்களிடம் நினைவில் நின்றது; மற்றபடி அவர் சொன்ன வேறு எதுவும் யாருக்கும் நினைவில்லை.

எப்படியோ 20-25 நிமிஷம் ஓட்டியாகி விட்டது. தொடக்கப் பள்ளிக் குழந்தைகள் இனிப்புக்காகவும், பெரிய பையன்கள் பரிசுக்காகவும், மற்றவர்கள் டிபனுக்காகவும் காத்திருக்கின்ற நேரத்தில் நான் செய்ய வேண்டியது என்ன? முன்னாள் கவர்னர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை public speaking செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய மூன்று விதிமுறைகளைப் பற்றி சொல்லியிருந்தார். அது என்ன தெரியுமா?

Stand up
Speak up
and
Shut up
When the time is up!

அந்த அறிவுரையை அப்படியே கடைப் பிடித்தேன். ஆகா, அந்தத் தருணத்தில் அனைவரின் முகத்திலும் மலர்ந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே!

இராமகிருஷ்ண மாணவரில்லம்இராமகிருஷ்ண மாணவரில்லம் அடுத்த மாதம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. ராமஸ்வாமி ஐயங்கார், ராமானுஜம் என்கிற இரண்டு சகோதரர்களால் 1905-ல் நான்கு அனாதைகளுடன் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் இப்போது மிகவும் வளர்ந்திருக்கிறது. இந்த நூற்றாண்டு விழாவுக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் தயவு செய்து skichu[@]gmail.com (பிராக்கட்டை நீக்கிவிடுக) என்கிற என் ஈமெயில் அட்ரஸுக்கு தொடர்பு கொள்ளுங்கள். சிறிய தொகையாயிருந்தால் பல denomination களில் கூப்பான்கள் உள்ளன. அவற்றைக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன். பெரிய தொகையாயிருந்தால் (இந்தியாவில்) வருமானவரி விலக்கு பற்றிய நமூனா அனுப்பி “செக்”கைப் பெற்றுக் கொள்கிறேன.

2 Comments


  1. உண்மையா எழுதறதைவிட மேடைல பேசறது ரொம்ப ரொம்ப கஷ்டம். நீங்க பேசுவீங்கங்கறதே பெரிய விஷயம். அதுலயும் ஔஆடியன்ஸ் மூட் பாத்து பேசறது.. நான் படிக்கற காலத்துல ரொம்ப ரொம்பக் கொஞ்ச பேர்தான் அப்படி பேசியிருக்காங்க. நிறைய படிச்சவங்க, எழுத்தாளர்கள் கூட சொதப்பிடுவாங்க.


  2. hello brother,
    can u do one favour for me..? i was created my account in blogspot as ” nilavunanban” ..but idont know how to post my articles in tamil. i have more articles in SARUKESI or BAMINI font. but there was no option in that posting format..how can i load my articles in my account. pls if u r free, can u explain me..thankyou bye

Comments are closed.