ட்சூனாமி என்கிற கோர அரக்கன்!

அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.

“ட்சூனாமீ” என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!

ட்சூனாமீஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.

இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. “ட்சூ” (துறைமுகம்), “னாமீ” (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.

ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித “தப்புப் பாளங்கள்” (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் “ட்சூனாமீ” என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?

அதுதானே இங்கு நிகழ்ந்தது!

சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?

Leave a Reply

Your email address will not be published.