எம்.எம்.தண்டபாணி தேசிகர்

MMDandapanidesikar தேசிகர் தேன்குரல் தேசிகர்

எம்.எம். தண்டபாணி தேசிகர் (1908 – 1972)

பரம்பரை பரம்பரையாக சிவத்தொண்டு புரிந்துவந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். புகழ்பெற்ற கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசை ஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். ‘பட்டினத்தார்’ தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த ‘நந்தனார்’ படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), ‘முதல் தேதி’ (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், “ஜகஜனனீ “, “என் அப்பன் அல்லவோ…”, “தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்”, “வழிமறித்து நிற்குதே”, “காண வேண்டாமா” முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) இனிய கர்நாடக இசையில் தேஷ் ராகத்தில் மெட்டமைத்தவர் தண்டபாணி தேசிகர் அவர்கள். எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இப்பாடலை செவிமடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்கு
இன்பம் சேர்க்க மாட்டாயா? – நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் தீர்க்க மாட்டாயா? – கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?”

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். கர்நாடக இசையில் அமைந்த பல கீர்த்தனைகளையும் அவர் புனைந்துள்ளார்.

தென்றல் இணைய இதழில் “ஆதி” அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் – குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண ‘இசை விருந்து’ இருக்க வேண்டும். இதற்கான ‘இயக்கம்’ வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் – இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, “ஏன் முடிக்கிறார்?” என்று தோன்றியது.

தண்டபாணி தேசிகரின் வெல்வெட் குரலில் “தாமரை பூத்த தடாகமடி” அப்படியே நம்மை உருகவைக்கிறது. கேளுங்கள்:

[1] “சங்கீத யோகம்” – தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு – தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

4 Comments


  1. வணக்கம் தோழர்களே
    நான் மிகவும் நேசிக்கும் இந்த வெண்கலக்குரலோடு இணைந்து பாடிய சென்னை வே.சோமசுந்தரதேசிகர் எனது மாமா.


  2. நான் அரசு மருத்துவராக திண்டுக்கல் தலைமை மருத்துவமனையில் பணியிலிருந்த 1971 – 72 ல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் இசைப் பேரறிஞர் தண்டபாணி தேசிகரின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன். அவர் பாடும் பாடல்கள் கேட்போரையும் உடன் பாடும்படி சொற்கள் தெளிவாக இருந்தன.
    வ.க.கன்னியப்பன்


  3. அமரர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள் பாடிய பாடல்கள் குறுந்தகடு வடிவில் எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது?

Leave a Reply

Your email address will not be published.