அரியின் அனுமன் அறிமுகம்

அரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது!

ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த “அனுமன் வார்ப்பும் வனப்பும்” என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது.
புத்தக அசிரியர், “இணையத் தமிழ் ஆசான்”, “மரபுக் கவிதை மாவீரர்”, “ஹரியண்ணா” என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து எனக்கு இரண்டு மடல்கள் அனுப்பினார் பாரா அவர்கள். ஆனால் அவற்றிற்கு பதில் எழுதாமல் இருந்து விட்டேன். நிச்சயமாகச் செல்வது என்று முடிவு செய்து விட்டதால், பதில் எழுதத் தோன்றவில்லை. ஆனால் அது பெரிய தவறு என்பது அவரைச் சந்தித்த பின் தான் தென்பட்டது. அவர் என் வலைத் தளத்தினுள் புகுந்து எல்லாப் பகுதிகளையும் முழுமையாகப் படித்து விட்டு வந்து என்னை மனம்விட்டுப் பாராட்டினார். நான் அந்த அறிமுகத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தார். மணிக்கணக்காக வலையில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு இரண்டு வரி எழுதி அனுப்பியிருக்கலாம். இனி கண்ணியம் காக்க வேண்டும் (Netiquette – ‘Thou shalt reply all emails sans spam‘) என்று மெரீனா கடற்கரையில் தீர்மானம் செய்துகொண்டேன். இது கடற்காற்றிலோ, கடல் நீரிலோ கரைந்து போவதல்ல – ஹும்ம்ம்!

காந்தி சிலை அருகே மற்றவர்க்காகக் காத்திருந்த நேரத்தில் பத்ரியும் மதுரபாரதியும் இன்டெர்னெட்டின் தாக்கத்தையும், மற்றும் அதன் நீட்சியின் தேக்கத்தையும் பற்றி உரையாடினர்.

பின் மணற்பரப்புக்குச் சென்று சுண்டல், பஜ்ஜி வகயறா மற்றும் பலவகை கூச்சல்கள், இரைச்சல்கள் நடுவே வட்டம் போட்டு அமர்ந்து வாசகர் வட்டம் அமைத்தோம். ஆனால் சுண்டல் பையன்கள் எங்களை வட்டமிடுவதைத் தடுக்க முடியவில்லை. முருகன் அவர்கள் தன் பேச்சிடையே இவ்வளவு சிறிய பையன் சுண்டல் விற்று வயிர் வளர்க்க வேண்டியிருக்கிறதே என்று விசனப் பட்டார்.

இரா, முருகன் அவர்களும் மதுர பாரதி அவரகளும் நூலைப் பற்றியும், ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் கருத்துச் செரிவுடன் பேசினார்கள். ஆங்காங்கே ஹரியும் விளக்கங்கள் கூறினார்.

முருகனும், மதுரபாரதியும் ஹரியின் நூலின் நடையைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மிக எளிமையாக இருக்கிறது, இலக்கியமே தெரியாத பாமரனுக்குக் கூட தெளிவாகப் புரியும்படி அமைந்திருக்கிறது என்று கூறினார்கள். அப்போதுதான் புரிந்தது என்னை ஏன் அங்கு அழைத்திருந்தார்கள் என்பது!

வால்மீகியை விட கம்பன் இன்னும் ஆழமாக பாத்திரங்களின் பரிமாணத்தை விரிவு செய்திருக்கிறார் என்றும், அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வரும்போது கால மாறுபாட்டை (change of time zone) கம்பன் விவரித்திருப்பது அவனுடைய அறிவியல் கண்ணோட்டத்தை காண்பிக்கிறது என்பதையும் ஹரி உணர்ச்சியுடன் விளக்கினார். இலங்கைத் தீவும் இமைய மலையும் ஒரே நேர்க் கோட்டில் இருப்பதால், அவற்றின் longitude ஒன்றாக இருக்கும் என்று வாஞ்சிநாதன் எடுத்துக் காட்டினார் என்றும், அதனால் ஹரி, நம் கூகிள்நாதனின் உதவியுடன் “மேரு மலை” ஆப்பிரிக்காவின் “கிளி மாஞ்சாரோ” மலைத் தொடரில் இருக்கக் கூடும் என்று அறிந்ததாகவும் விளக்கினார்.

முருகன் அந்த நூலை முழுதும் படித்திருந்தார். நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினார். மதுரபாரதி தனக்கும், ஹரி அவர்களுக்கும் உள்ள வெகுநாள் நட்பையும் ஆதி நாட்களில் இலக்கியம் கற்ற சிறப்புக்களைப் பற்றியும், அவர் ஹரியை எழுதத் தூண்டியதையும் நினைவு கூர்ந்தார்.

அனுமனைப் பற்றி நான் சிந்திப்பது, பெருமாள் கோயில் செல்லும் போதும் communication பற்றி கூட்டங்களில் பேச முற்படும்போதும் தான். அனுமன் ஒரு communication expert. எனக்குத் தெரிந்த ஒரே வரி கம்ப இராமயணத்தில் இதுதான் – “கண்டேன், கற்பினுக்கரசியைக் கண்டேன்”. இதற்கு பலவிதமான விளக்கங்களையும் அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறேன். (அது இப்போ வேண்டாமே!)

ஆனால் சாதாரணமாக மற்ற கடவுளர்களைப் பற்றி கொஞ்சம் கொச்சையாக விமரிசிப்பவர்கள் கூட அனுமனிடம் சிறிது ஜாக்கிரதையாகப் பேசுவர். அனுமன், இராகு, சனி போன்ற கடவுட்களிடம் பொதுவாக மக்கள் பயத்துடன் இருப்பர்.

இராமாயண கதா பாத்திரங்களில் அனுமனைத் தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் ஹரி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்; அவற்றை கிழக்குப் பதிப்பகதார் வெளியிட வேண்டும் என்று அன்பர் அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

முடிவாக பத்ரி அவர்கள், தான் எப்படி ரா.கா.கி-யின் அறிமுகத்தால் தமிழ்ப் புத்தக பதிப்புத் தொழிலில் இறங்கினார் என்பதையும் தங்கள் எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார். கிழக்குப் பதிப்பகத்தார், நல்ல content மற்றும் packing – உடன் நூல்களை வெளியிடுகிறார்கள், எழுத்தளர்களுக்கு ராயல்டியை தவறாமல் வழங்குகிறார்கள் என்பதையும் பலர் பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.

அனுமனின் துதியில் நாம் வேண்டிக் கொள்வது, புத்தி, பலம், யஸஸ்(செல்வம்), தைரியம், பயமின்மை, உடல் நலம், மனத் திண்மை, சொல்வன்மை இவையெல்லாம் அனுமன் நமக்கு அருளட்டும் என்பதுதான். அவை அனைத்தும் ஹரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் வழியில் மதுரபாரதியுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது ஒரு போனஸ்.

இகாரஸ் பிரகாஷ், வள்ளியப்பன், இரு பெண் கவிஞர்கள், சுவடு சங்கர், தேசிகன், அருட் செல்வன், அரவக்கோன், சந்த வசந்தம் அதிபர்,……… முக்கியமான யாரையாவது விட்டு விட்டேனா? மன்னியுங்கள். இப்போது மணி நள்ளிரவு 12.

ரோல்காலுடன் போட்டோக்களும் பத்ரி போட்டுவிடுவாரே. பார்க்கலாம்.

3 Comments


 1. chE 🙁 naan saturday chennaila thaan irunthEn
  hterichirunthaa naanum koottaththukku vanthiruppEn
  ungaLukku company koduththiruppEn 🙂

  enRum anbakalaa
  maravaNtu


 2. அந்தப் பெண் கவிஞர்கள் க்ரிஷாங்கினி, மதுமிதா. சந்தவசந்தம் அதிபர் (!) இலந்தை ராமசாமி. வந்திருந்த மற்றவர்கள் நாகரத்தினம் கிருஷ்ணா, வாஞ்சிநாதன், டோண்டு ராகவன், திருமதி. ஹரிகிருஷ்ணன் அவ்வளவுதான் என்று நினைக்கிறேன்…


 3. நான் ஏதோ உங்க சாதிச் சங்கத்துலேர்ந்து அமாவாசைக் கூட்டம் போட்டீங்கன்னுல்ல நெனைச்சேன்! தெரிஞ்சிருந்தா வந்திருக்கலாம்.

Comments are closed.