பிறர் மனத்தில் எற்றிய படிமம்!

நித்யா தன்னம்பிக்கை மிக்கவள். அது தகுதி மற்றும் திட்டமிடல் அடிப்படையில் அமைந்த தன்னம்பிக்கை. எதைச் செய்தாலும் அதை பூர்த்தியாக செவ்வனே செய்து முடிப்பவள் என்று அவள் படிக்கும் கல்லூரியிலும் வீட்டிலும் பெயர் வாங்கியவள். அதனாலேயே அவளுடைய கல்லூரியில் எந்த நிகழ்ச்சியானாலும் அதை நடத்துவதற்கு கூப்பிடு நித்யாவை என்பதுதான் முதலில் காதில் விழும்.

அவள் இளங்கலை பொறியியலை முடிக்கும் நேரம். அனைத்து நதிகளும் கடலில் சங்கமமாகிறாற்போல் எந்த பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் வேலை தேடுவது என்னவோ கணினி மென்பொருள் துறைதான் என்றிருக்கும் இன்றைய நிலையில், நித்யாவோ தான் படித்துக் கொண்டிருக்கும் மின்னியல் துறையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அதற்கேற்றாற்போல் ஒரு பன்னாட்டு நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள்.

நித்யாவின் சுபாவப்படி அவள் தகுந்த முன்னேற்பாட்டுடன் தேர்வுக்குச் சென்றாள். அவளுடைய பாடத்திலும் சரி, நிர்வாகம், மக்கள் தொடர்பு, ஆளுமை போன்ற எந்தத் துறையிலும் எல்லோரைக்காட்டிலும் சிறந்த திறமைசாலியாக அவள் விளங்குவாள் என்பதில் அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதுபோல் அவள் பூர்வாங்கத் தேர்வுகளை வெற்றிகரமாகத் தாண்டி நேர்முகத் தேர்விலும் அனைத்து கேள்விகளுக்கும் தீர்மானமன தன்னம்பிக்கையுடன் சரியாக விடையளித்திருந்தாள். அந்தத் தேர்வை தலைமையேற்று நடத்திய நிர்வாகியும் மிகத்திருப்தியான முகபாவத்தை வெளிப்படுத்தினார்.

அந்த நிறுவனம் பெருமை வாய்ந்த ஒன்று. நித்யாவுக்கு நிச்சயம் கிட்டப்போகிற அதிர்ஷ்டத்தை எண்ணி அவளுடைய பெற்றோரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

ஆனால் வேலைக்கான ஆணையேதும் வரவில்லை. சில காலம் பொருத்துப் பார்த்துவிட்டு அவளுடைய தந்தை விசாரித்துப் பார்த்ததில் அவள் தேர்வு பெறவில்லையென்று தெரிவிக்கப்பட்டது. நித்யா, ஒருபுறம் ஏமாற்றமும், இன்னொருபுறம் தான் தேர்வு பெறாததற்கான காரணத்தை அறியும் ஆவலும் மிக்கவளாக தன் கல்லூரி சீனியர் யாரேனும் அங்கு வேலை பார்த்தால் அவர்கள் மூலம் விவரம் அறியலாம் என்று விசாரிக்கத் தொடங்கினாள்.

அவள் நேர்முகத் தேர்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை. ஆனால் அவளுடைய பேச்சின் தோரணை, ஓங்கிய குரல், கைகளையும் விரல்களையும் நீட்டி அசைத்துப் பேசும் முறை, சில ஆங்கில சொற்களை வேண்டுமென்றே ஸ்டைலாக உச்சரித்துப் பேசும் பழக்கம் இவையெல்லாம் அந்த நிறுவன மேலாளர்கள் மனத்தில், அவள் பிறரோடு ஒத்துப் போய் அனுசரிக்கத் தயங்கும் தனித்தியங்கி (loner) என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டன. இது நித்யாவின் உண்மையான தோற்றம் இல்லை என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இவ்வுலகில் நீ யார் (உண்மையில்) என்பது முக்கியமல்ல. நீ யாராக பிறரால் அறியப்படுகிறாயோ அதுதான் முக்கியம்.

ஆகையால் பிறர் மனத்தில் நம்மைப்பற்றி எத்தகைய இமேஜை ஏற்படுத்துகிறோம், நம்மை எவ்வாறு இந்த சமூகத்திடம் அறியப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றி இருக்கிறது.

2 Comments


  1. “நம்மை எவ்வாறு இந்த சமூகத்திடம் அறியப்படுத்துகிறோம் என்பதில்தான் நம் வாழ்வின் வெற்றி இருக்கிறது”

    — முற்றிலும் உண்மை

Leave a Reply

Your email address will not be published.