வரலாறு படைக்கும் ஸரயு நதி

Dipotsavam on the banks of Sarayu river
புனித சரயு நதிக்கரையில் தீபோத்ஸவம்

சரயு நதி இன்று உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வினால். ஆம், சரயு நதிக்கரையில் மற்றுமொரு “தீபோத்ஸவம்” கண்கொள்ளாக் காட்சியாக நடந்தேறிய மறுநாள் (5.8.2020) இராமபிரானுக்கு அவர் அவதரித்த அயோத்யாவிலேயே ஆலயம் எழுப்புவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் திருக்கரத்தால் நிகழ்ந்திருக்கிறது!

இதற்கு முன் 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு முன் தினம் சுமார் 5 லட்சம் மண்ணாலன அகல் விளக்குகளை புனித சரயு நதிக்கரையில் ஏற்றினர் பக்தர்கள். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஸரயு நதியின் தோற்றம்

ராம, லக்‌ஷ்மணர்களை படகில் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர். நதியின் நடுவே குபுகுபுவென்று பலத்த ஓசை. நீர் கொப்பளித்து வெளிவருகிறது. அந்த அதிசயத்தைப் பற்றி விளக்குகிறார் முனிவர்.

கைலாச மலையில் பிரமனின் மனத்திலிருந்து தோன்றியது என்றுமே வற்றாத மானசரோவர் ஏரி. அதிலிருந்து புனித நீர் பாய்ந்து வந்து இங்கு “சரயு” நதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நீரூற்று தான் அவர்கள் கண்டது. “ஸரஹ” என்னும் சொல் ஏரியைக் குறிப்பிடுகிறது. அதனால்தான் அந்த நதி “சரயு” எனப் பெயர் பெற்றது. இது இராமாயணத்தின் பாலகாண்டத்தில் வரும் வர்ணனை.

ஆனால் அயோத்தியில் தற்போது நாம் காணும் சரயு நதியையும் திபேத்திலிருக்கும் மானசரோவர் ஏரியையும் புவியியல் ரீதியாக இணைக்கும் எந்த தடயத்தையும் காண இயலவில்லை. “அந்தர் வாகினி”யாக மண்ணின் அடியில் வழி பெற்று பாய்ந்திருக்கலாம்!

சரயு என்னும் பெயரில் இரண்டு நதிகள் இமயத்தை ஒட்டிய மாநிலங்களில் பாய்கின்றன. உத்தராகாண்டின் இயற்கை எழில் கொஞ்சும் நகரமான ஜாகேஷ்வரை ஒட்டி உறவாடி பாய்கின்ற சரயு (சர்ஜ்யு) நதி, கோமதி மற்றும் “ராம கங்கா” நதிகளுடன் இணைந்து மலையின் மீதே பாய்ந்து பல ஊர்களை வளம்பெறச் செய்கிறது. பின் “காலா பானி” என்னும் இடத்திலிருந்து பாயும் “மகா காளி” (சாரதா) என்னும் பெரிய நதியுடன் “பஞ்சேஷ்வர்” என்னுமிடத்தில் இணைகிறது. நதிகள் இணைவது பிரிவதும் இயற்கை தானே. இந்த மகாகாளி நதியும், மானசரோவர் அருகாமையில் தோன்றி நேபாளம் வழியே உத்திரப் பிரதேசத்தில் நுழையும் வற்றாத நீரொழுக்கொடு கூடிய “காகரா” (Ghaghara) நதியில் இணைகிறது. அதன்பின் அது ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு (சுமார் 1000 கி.மீ) கங்கையுடன் இணைகிறது.

இந்த காகரா நதிதான் நம் வரலற்றின் கதாநாயகி என்றே குறிப்பிடலாம். ஏனெனில் இந்த ஆறு அயோத்தி வழியே பாயும் பொழுதுதான் “சரயு” என்ற பெயரைப் பெறுகிறது. அயோத்யா நகரில் ஊடே செல்லும் வழித்தடத்தில் அதை சரயு என்றுதான் அழைக்க வேண்டும் என்று வரையறுக்கும் அரசாணையே பிறப்பித்திருக்கிறார்கள்!

இராம காதையில் இடம்பெறும் சரயு நதி சிவனுடைய முடியிலிருந்துதான் தொடங்குகிறது! சிவனின் ஜடையில் தோன்றும் “ஜட கங்கை” ஜாகேஷ்வர் கோவிலுக்கு அருகே “பிரம்ம குண்டம்” என்கிற நீர் தேக்கத்தில், இதற்குச் சற்று மேலே தன் தோற்றுவாயிலிருந்து ஓடிவரும் நதியுடன் சேர்ந்து சரயு என்று பெயர் பெறுகிறது.

விருத்த (முதிய) ஜாகேஷ்வர் என்னுமிடத்திலிருந்து கீழ் நோக்கினால் சரயு மற்றொரு நதியுடன் இணைவதை காணலாம். அவ்வூர் மக்கள் “ராம சரயு” என்று குறிப்பிடும் அந்த குகை போன்ற இடத்தை சென்று பார்க்க முடியுமா என்று கேட்கிறார் எழுத்தாளர் சுப்பு அவர்கள். அவர் பெற்ற பதில், “அது அதள பாதாளம். நீங்கள் அங்கு செல்லலாம். மேலே வர இயலாது. ஆனால் “மேலே” சென்றடைவது நிச்சயம்”!

தசரத மன்னன் பிள்ளை வரம் வேண்டி யாகம் செய்ததும், ராமன் பசியே எடுக்காமலிருக்க “பலா, அதிபலா” மந்திரங்களை உபதேசம் பெற்றதும் இந்த சரயு நதிக்கரையில்தான். சரயு கங்கையுடன் இணையும் பகுதியில் நதியைக் கடந்தனர். அங்கே ஒரு சோலை. அது என்ன சோலை என்று இராமன் வினவ, முனிவர் கூறுகிறார். “ஒரு சமயம் சிவபெருமான் யோக நிலையில் இருந்தார். அப்போது மன்மதன் தனது பாணங்களைக் கொண்டு காமக் கணைகளை ஏவ, சிவபெருமான் சினந்து, அவனைத் தன் நெற்றிக் கண் திறந்து எரித்து சாம்பலாக்கி விட்டார். அது நிகழ்ந்த இடம் இதுதான். இதனை காமன் ஆசிரமம் என்பார்கள். இந்த நாட்டுக்கு அங்க நாடு என்றும் பெயர்” என்று எடுத்துரைத்தார் முனிவர். இவ்வாறு இராம காதையில் பின்னிப் பிணைந்திருக்கிறது சரயு நதியின் மாண்பு.

சரயுவின் மேன்மையை கம்பன் ஆற்றுப் படலத்தில் பல பாடல்கள் மூலம் எடுத்துரைகின்றான்.

இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது,-
சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ்
உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.

சூரிய குலத்தில் தோன்றிய எண்ணற்ற பல வேந்தர்களின் போற்றத் தகுந்த நல்லொழுக்கத்தின் தன்மையை மேற்கொண்டதாகிய சரயு என்னும் பெயருடைய அந்த ஆறு, உயிரினங்கள் யாவற்றுக்கும் பாலூட்டிப் பேணும் தாயின் மார்பகம் போன்றது.

காவிரிக் கரையில் அமர்ந்து சரயுவின் பெருமையை வடிக்கும் கம்பன் சொல் முழுதும் உண்மையே. சரயு நதி, தான் செல்லுமிடம் அனைத்தையும் வளம்பெறச் செய்து வருகிறது.

ஸரயு நதி இன்று

தற்போது அயோத்தியில் சரயு நதிக்கரையில் 100 மீட்டர் உயரமுள்ள இராமனின் திருவுருவச் சிலை ஒன்றை நிறுவும் வேலை தொடங்கியுள்ளது. மேலும் அதனருகே 500 ஏக்கர் பரப்பில் “புது அயோத்தி” என்ற பெயரில் ஒரு அதிநவீன வசதிகள் கொண்ட நகரம் ஒன்றை நிர்மானிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சரயு நதி இராமாயணத்தில் இடம் பெறும் முன்னேயே ரிக்வேதத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

நதிகளை பெண் தெய்வமாக வழிபடுவது நம் பாரதத்தின் புராதன இந்து பண்பாடு. நதிநீரை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அதை இறைவனுக்கு ஒப்பிடுவதன் மூலமாக வலியுறுத்தி வந்தனர் நம் முன்னோர். ஆனால் அன்னியப் படையெடுப்புகளால் சீரழிந்து போன நம் கலாசாரம் நதிகளையும் மாசுபடச் செய்து வருகிறது! இந்தப் போக்கை மாற்றி நதிகளை தூய்மைப் படுத்தும் திட்டமான “ஸ்வச் பாரத்” இயக்கத்தை தொடங்கியுள்ளார் பாரதப் பிரதமர் மோடி அவர்கள்!

Leave a Reply

Your email address will not be published.