வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்

Varthaga Ulagamசன் நியூஸ் சேனலில் அன்றாடம் காலை 9-30 மணி முதல் 10-30 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “வர்த்தக உலகம்”. இதை நான் முன்பெல்லாம் ஏதோ கோயம்பேடு மார்க்கெட்டில் கத்தரிக்காய், வெண்டைக்காய் விலை நிலவரம் பற்றிய நிகழ்ச்சி என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருநாள் சேனல் சேனலாக தாவிக் கொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சியில் ஒருவர் முதலீடுகளை திட்டமிடுதல் எப்படி என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். பிறகுதான் அறிந்து கொண்டேன், அந்த நிகழ்ச்சி பங்கு வர்த்தகம் மற்றும் ஏனைய முதலீடுகள் பற்றியது என்பதை.

பங்கு மார்க்கெட் செயல்படும் வார நாட்களில் ஷேர்களைப் பற்றியும், வார இறுதியில் ம்யூசுவல் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸ், வருமான வரி, கமாடிடீஸ், ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களைப் பற்றியும் அலசும் நேரடி ஒளிபரப்பு இந்த நிகழ்ச்சி. நேயர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, அன்றாடம் நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் துறை சார்ந்த நிபுணர்களின் பதில்களை பெறுவது இதன் செயல்பாடு.

பங்கு வர்த்தகம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு CNBC-TV18 போன்ற முழுநேர வணிகம் பற்றிய சேனல்கள் மற்றும் பல இணைய தளங்கள் இருந்தாலும், இந்த ஷோ மூலம் நம்மூர் நிபுணர்களின் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் நம் ‘தமிழ்கூறும் நல்லுலக’ மக்களின் விநோத மனப்பாங்குகள், விசித்திரங்கள், முரண்பாடுகள் (idiosyncrasies & eccentricities) போன்றவற்றை உற்றுநோக்குவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது!

இந்த நிகழ்ச்சியின் லைவ் ஷோவை மிஸ் பண்ணிவிட்டாலும் யூட்யூபில் (Youtube) காணலாம். பெரும்பாலும் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக upload செய்துவிடுகிறார்கள் என்றாலும் அதற்கு மேலும் தாமதமாவது உண்டு. சில நாட்களின் நிகழ்ச்சிகளை காண முடிவதில்லை. எடிடிங் போன்ற டெக்னிகல் காரணங்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை அப்லோடு செய்பவர்கள் அதோடு சேர்த்து ஒரு “முள்”ளையும் வைத்துவிடுகிறார்கள்! அதாவது எந்த ஒரு வலைத்தளத்திலோ, வலைப்பதிவிலோ அந்த Youtube வீடியோக்களை உள்ளிட்டு காண்பிப்பதை தடை செய்திருக்கிறார்கள். அநேகமாக எல்லா யூட்யூபு படங்களும் வெவ்வேறு வலைத்தளங்களில் embed செய்யப்படுவது என்பது சர்வ சாதாரணமான நடைமுறை. இதை பெரும்பாலும் யாரும் தடை போடுவதில்லை. அவற்றின் உரிமையாளர்களுக்கு அது ஒருவித விளம்பரம் தானே என்பதால்.

ஆனால் சன்டிவி காரர்கள் ஏன் embed-ஐ தடுத்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் இன்னொரு வலைப் பக்கத்தில் உள்ளிடப்பட்டிருந்தாலும் அது Youtube தளத்திலிருந்துதான் ஷேர் செய்யப்படுகிறது. அந்தப் படங்கள் தெரியும் பரப்பு Youtube தளத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது என்று கூட சொல்லலாம். மேலும் embed செய்யப்பட்ட வீடியோக்களிலும் விளம்பரங்கள் உட்செலுத்தப்படுகின்றன. ஆகையால் வணிக ரீதியான காரணங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குப் புலப்படாத காரணம் ஏதாவது இருக்கலாம். என்றாலும் சன்டிவி நிர்வாகத்தினர்முன் இந்த முள்ளை அகற்றும்படி இதன்மூலம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்!

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெரும் பல நேயர்களின் கேள்விகள் பெரும்பாலும் சில பங்குகளைக் குறிப்பிட்டு அவற்றை வாங்கலாமா, விற்கலாமா என்றும், எந்தப் பங்குகளை வாங்கலாம் என்ற பரிந்துரையை வேண்டியும்தான் அமைகின்றன. அவர்களில் பெரும்பான்மையினரின் கேள்விகளிலிருந்து அவர்கள் எந்த ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சியும் செய்யாமல் பங்குச் சந்தையில் இறங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எவ்வளவுதான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, அடிக்கோடிட்டு, பங்குகளில் நீண்டகால முதலீடு (long term investment) என்பதுதான் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றது, குறுகிய காலத்தில் பங்குகளை வாங்கி விற்று வணிகம் செய்வதை (trading) அவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற உண்மையை விஷயமறிந்த பெரியவர்கள் அறிவுறுத்தினாலும், பல நேயர்கள் பங்குச் சந்தை என்றால் குறுகிய காலத்தில் பெரும்பணம் அள்ளக்கூடிய இடம் (Get rich quick) என்ற மாயையில் சிக்கியிருக்கிறார்கள்.

நீடித்த அனுபவமும், ஆராய்ச்சி சார்ந்த அறிவும் இல்லாமல் ஷேர் டிரேடிங்கில் இறங்க முற்படாதீர்கள் என்று அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அநேக நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்பது (அல்லது விற்று வாங்குவது – short selling) என்னும் முறையை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள் என்று அழுத்தமாக அறிவுறுத்துகிறார்கள். பல ஆண்டுகள் இந்த ஃபீல்டில் இருக்கும் அவர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால் intra-day trading செய்து சம்பாதித்தவர்களே கிடையாது என்பதுதான்!

பல கம்பெனிகளின் அடிப்படைகளையும் (fundamentals), ஷேர் விலை ஏற்ற இறக்கங்களின் விவர வரைபடங்களையும் (technical charts) விலாவாரியாக ஆராய்ந்து, எவற்றை எந்த விலையில் எப்போது வாங்குவது, எப்போது விற்பது போன்ற முடிவுகளை எடுத்து செயல்படும் திறன் உள்ள நேயர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதில்லை. அவர்கள்தான் அந்த நேரத்தில் ஷேர் விலைகளின் ஏற்ற இறக்கங்களின் புள்ளிகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்களே!

“NIFTY 50” எனப்படும் குறியீட்டில் பங்கு பெறும் அதிக விலை மதிப்பு மிக்க (High market capitalisation) கம்பெனிகளின் பங்குகளை வாங்கினால் கட்டாயம் லாபம் பெறலாம் என்பது பெரும்பாலும் மறுக்க முடியாத உணமை என்றாலும், அவற்றை வாங்கிவிட்டு ‘அப்பாடா’ என்று தூங்கிவிட முடியாது. அந்தக் கம்பெனிகளின் செயல்பாடு எப்படியிருக்கிறது, அந்தப் பங்குகளின் விலையின் தற்போதைய நிலை என்ன, அவற்றின் விலையை பாதிக்கும் நிகழ்வுகள் ஏதேனும் உள்ளதா போன்ற செய்திகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்து, சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க வேண்டியது கட்டாயம். இல்லாவிடில் கைக்காசு போய்விடும். இது போன்று ஹோம்வொர்க் செய்ய முடிந்தவர்கள் ஷேர்களை வாங்கத் தொடங்குகள். அது இயலாது, ஏனெனில் நீங்கள் எங்கேனும் வேலை பார்க்கிறீர்கள், சிறிதளவு நேரம்தான் இதற்கு ஒதுக்க முடியும் என்ற நிலை இருந்தால், பங்கு மார்க்கெட்டில் மிகுந்த அனுபவம் மிக்க நிபுணர் திரு. ஸ்ரீராம் அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரையை ஏற்று அதன்படி செயல்படுவதுதான் உத்தமம்!

திரு.ஸ்ரீராம் அவர்கள் ஒரு சார்ட்டட் அக்கவுண்டெண்ட். பங்கு வர்த்தகத் துறையில் 30 ஆண்டுகள் (அவர் கூற்றுப்படி) அனுபவம் மிக்கவர். பல நிறுவனங்களை நிர்வகித்து வருபவர். பங்கு மார்க்கெட்டுக்கு முன்னனுபவம் இல்லாமல் முதலில் நுழைபவர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரை இதுதான்:- “தனிப்பட்ட பங்குகளை வாங்காதீர்கள். எல்லா முன்னணி பங்குகளின் சேர்க்கையான நிஃப்டி குறியீட்டின் மதிப்பை ஒட்டி வளரும் Goldman Sachs Nifty Exchange Traded Scheme (NSE code: “NIFTYBEES”) என்னும் பங்கை வாங்குங்கள். நீங்கள் நஷ்டப்பட மாட்டீர்கள்” என்பதுதான். இந்த NIFTYBEES ஒரு ம்யூச்சுவல் ஃபண்ட் போலத்தான் என்றாலும் மற்ற பங்குகளைப் போல BSE மற்றும் NSE Exchange-களில் டிரேட் ஆகும் ETF வகையைச் சார்ந்தது. இந்த வகையில் உள்ள நன்மை, சந்தையில் உடனே விற்கலாம், வாங்கலாம் – அப்ளிகேஷன் போன்றவை தேவையில்லை. டீமேட் மற்றும் ஷேர் புரோக்கர் அக்கவுண்ட் போதும்.

திரு ஸ்ரீராம் அவர்கள் சொல்வது என்னவென்றால் இந்த NIFTYBEES-ஏ ஒரு ஆண்டில் 46.36% லாபம் கொடுத்திருக்கிறது. மற்றும் சென்ற 5 ஆண்டுகளில் 12.41% (annualised) returns கொடுத்திருக்கிறது. ஒரு ஆண்டு காத்திருந்து விற்றால் நீங்கள் பெறும் லாபத்திற்கு வருமான வரி (Capital Gains Tax) கிடையாது. வேறு என்ன வேண்டும் உங்களுக்கு! இதே பணத்தை நீங்கள் வங்கி வைப்பு நிதியில் போட்டால் 9 – 9.75 % கிடைக்கும், ஆனால் அதற்கு உங்கள் வருமானத்தின் படிநிலைப்படி (slab) 10 – 30 % வருமானவரி செலுத்த வேண்டியிருக்கும். அதனால் எஃப்.டியில் 6 – 8 % தான் நிகர வருமானம் கிட்டும்.

இந்த ஷோவிற்கு வரும் கேள்விகள் பெரும்பாலும் இரண்டு ரகம்:-

மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது சில பங்குகளை மிக அதிக விலைக்கு வாங்கிவிட்டு, தற்போது விலை குறைந்திருக்கிறதே என்ன செய்வது?

ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் விலைக்கு சில உப்புமா பங்குகளை விலை குறைவு என்பதற்காகவே ஆயிரக்கணக்கில் வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றை விற்கலாமா, வைச்சுக்கலாமா?

இப்படிப்பட்டவர்கள் ஏன் பங்குச் சந்தைக்கு வரவேண்டும்? பேசாமல் கைவசம் இருப்பதை நஷ்டமானாலும் பரவாயில்லை என்று விற்று விட்டு, திரு ஸ்ரீராம் சொல்வது போல் நிஃப்டிபீஸ், அல்லது ஒரு நல்ல மல்டிகேப் ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, கையில் ஒரு கிண்ணம் சுடச்சுட பஜ்ஜியை வைத்துக் கொண்டு டிவி முன்னால் அமர்ந்து கொண்டு சீரியல் / மேட்ச் பார்க்கலாமே!

திரு ஸ்ரீராம் அவர்களின் இந்த கூற்று இந்த நிகழ்ச்சியில் பெருமளவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுக்கருத்து கூறுகிறேன் என்று தொடங்கும் சில நிபுணர்கள், கடைசியில் தான் புதிதாக சொல்வதுபோல இதே அறிவுரையை ரிபீட் செய்வார்கள் – “நீங்க ஹோம் வொர்க் செய்ய முடிஞ்சா தனிப்பட்ட பங்குகளை வாங்குங்க, இல்லைன்னா நிஃப்டிபீஸ் தான் சரி” – இது எப்படி இருக்கு!

ஆகையால் எங்கள் ஓட்டு திரு. ஸ்ரீராம் அவர்களுக்கே!

—— ****** ——-

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கவனிக்கும் போது, இதில் பகிரப்படும் சிற்சில தவறான செய்திகளும் நம் கவனத்திற்கு வருகின்றன. ஒருசில உதாரணங்களை உங்கள்முன் வைக்கிறேன்:

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் நிபுணர்களில் ஒருவரான திரு சுந்தர் அவர்கள் 19-08-2014 அன்று கூறிய ஒரு செய்தி: “நிஃப்டி-50 basket–ல் முதலீடு செய்திருந்தால் கடந்த 7 ஆண்டுகளில் 20% அல்லது 25% தான் வளர்ச்சி அடைந்திருக்கும்” என்பது. இதை அவர் absolute return என்ற வகையில் குறிப்பிடுகிறார் – “வங்கு வைப்பு நிதியில் வைத்திருந்தால் கடந்த 7 வருஷத்தில் 70% வந்திருக்கும்” என்கிறார். அதாவது 10% X 7 ஆண்டுகள். அதை நிஃப்டி-யில் முதலீடு செய்வதோடு ஒப்பிடுகிறார், on absolute return basis.

ஆனால் இந்தக் கூற்று முழுதும் உணமை நிலைக்கு புறம்பானது. ஏனெனில் நிஃப்டி கடந்த 7 ஆண்டுகளில் 92.13% மதிப்பு ஏறியிருக்கிறது என்பதை இதன்கீழ் நான் கொடுத்திருக்கும் விவரத்திலிருந்து அறியலாம்:

Nifty index progression

இதன்மூலம் Niftybees போன்ற நிஃப்டியை ஒட்டி வளரும் இடிஎஃப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் அவர்களின் முதலீட்டின் மதிப்பு சுமார் 92.13% கூடியிருக்கும் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். உணமையில் நிஃப்டிபீஸ் நிஃப்டி-ஐயே beat செய்து அதற்குமேல் வருமானம் அளித்திருக்கிறது. உதாரணத்திற்கு NIFTYBEES கடந்த 7 ஆண்டுகளில் 100% வருமானம் கொடுத்திருக்கிறது. அதாவது 2007-ல் இதே தேதியில் ரூ.10000 முதலீடு செய்திருந்தால் 19-08-2014 அன்று அதன் மதிப்பு ரூ. 20027 ஆகும்.

Niftybees Return

CAGR முறையில் NIFTY index மற்றும் NIFTYBEES ETF ஆகியவற்றின் கூட்டுவட்டி புள்ளிவிவரங்களை Value Research Online வலைத்தளத்திலிருந்து எடுத்து இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதிலிருந்து Niftybees கடந்த 7 ஆண்டுகளில் 10.54% மற்றும் 10 ஆண்டுகளில் 18.28% கூட்டு வட்டி அளித்திருப்பதைக் காணலாம். இந்த 18.28% கூட்டு வட்டி வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. இந்த வருமானத்தோடு, ஆண்டுக்கு 6% முதல் 8% மட்டுமே அளிக்கும் (வரியை கழித்த பிறகு) வங்கி வைப்பு நிதியை ஒப்பிட்டு நோக்கினால், எந்த முறை முதலீடு சிறந்தது என்பதை ‘அங்கை நெல்லியென’ தெளிவாக அறிவீர்கள்! நீங்களே யோசியுங்கள், வேறு எந்த வகை சொத்தில் (asset class) முதலீடு செய்தால் இந்த அளவிற்கு உழைப்பில்லாமல் வருமானம் கிடைக்கும் என்று!

NiftyBees CAGR Returns

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு தொகுப்பாளர் திரு மகாதேவன் அவர்கள். இவர் வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில் அனுபவம் மிக்கவர் என அறிகிறேன். இவர் நகைச்சுவையோடு உரையாடி ஜனரஞ்சகமாக நடத்திச் செல்வார். ஆனால் ஒரு குறை – நிபுணர் பதில் சொல்லத் தொடங்கிய உடனேயே ஊடே புகுந்து, அவருடைய ‘ஃப்ளோ’வை மடக்கி, இவர் “தொகுக்க”த் தொடங்கிவிடுவார் (“தொகுப்பாளர்” என்னும் தன் வேலையை (role) அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளாரோ என்னவோ!). இதனால் சில சமயம் முக்கிய விஷயங்களைப் பற்றிய நிபுணரின் விளக்கம் பூர்த்தியடையாமல் நின்றுவிடுகிறது. இந்த அருமையான தொகுப்பாளர் சற்றே குறுக்கிடல்களை குறைத்துக் கொண்டால் நலம் என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் நேயர்கள் சிலர் தொடுத்த சில விசித்திரமான கருத்துக்கள் + கேள்விகள் பற்றி அடுத்த கட்டுரையில் கதைக்கலாமே!

ஒரு துணுக்குச் செய்தி:

ஜப்பானிய குடும்பப் பெண்களில் பெரும்பாலானோர் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும்பணம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்களாம். வேறெந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை இது!

3 Comments


  1. நிஃப்டிபீஸ் போன்ற மற்றொரு Index ETF இருக்கிறது. அதன் பெயர் Quantum Index Fund ETF. இது Niftybees–ஐ விட சிறப்பான லாபத்தை கொடுத்திருக்கிறது. மேலும் அந்த Quantum நிறுவனம் ஒழுக்கமான வியாபார முறைகளை கடைப்பிடிக்கின்றது. முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்யும் முறையை கடைப்பிடிக்கின்றது. அதனால் அந்த ETF–ஐயும் கருத்தில் கொள்ளலாம்.


  2. Good article.

    I don’t know Sun TV people people have seen this. But the latest program on income tax was very well conducted and informative. Mr. Mahadevan did it wonderfully well without interfering.

    Selvam


  3. Google has clearly said this in their site: https://support.google.com/youtube/answer/132596?hl=en

    “Only YouTube and the video owner will earn revenue from ads on embedded videos; the site owner where the video is embedded will not earn a share.”

    I wonder why Sun News Channel has prevented embedding of videos showing their programmes in Yotube.

Leave a Reply

Your email address will not be published.