குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்

குழந்தை கடத்தல்

child-lifter.jpgசென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று விட்டாள். இது குறித்து போலீசில் அவர்கள் புகார் செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை தூக்கிச் சென்ற அந்த மர்ம பெண்ணின் உருவம் பதிவாகி இருந்தது. அந்தப் பெண்தான் குழந்தையை திருடியவள் என்று அடையாளம் காட்டப்பட்டாள்.

குழந்தை மீட்பு

இதற்கிடையே ஆவடியில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயிலில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது. அக்குழந்தையை பார்த்து விட்டு அது தங்களுடைய குழந்தை தான் என பெற்றோர் உறுதி செய்தனர்.

இந்நிலையில் குழந்தையை திருடிய பெண்ணிட்ம் ஒரு திடீர் குழந்தையைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் கொடுக்க, அவளும் பிடிபட்டாள்; வீடியோ அடையாளம் உறுதி செய்யப்பட்டு அவளிடமிருந்து குழந்தையும் மீட்கப்பட்டது.

மரபணு சோதனை

dfcf67b6-2b2f-428a-817c-81604ef50411_S_secvpf.gif.jpgஇப்போது கைவசமிருக்கும் இரண்டு குழந்தைகளிடையே எந்தக் குழந்தை அவர்களுடையது என்பதை கண்டு பிடிக்க மரபணு சோதனை (DNA genetic fingerprinting) நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான அனுமதி வேணடி நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றனர்.

யாருடைய சாயல்?

சாதரணமாக பிறந்த குழந்தையை பார்க்க வரும் பெரிசுகள் தவறாமல் உதிர்க்கும் கருத்துக்கள் அக்குழந்தை யாரை “உரித்து” வைத்திருக்கிறது என்பது பற்றித்தான். “அப்படியே அம்மா மூஞ்சியையே உரிச்சு வெச்சிருக்கு பாரு” என்று தாய் வழி உறவுகளும், “நம்ப ராஜு மாதிரியே பெரிய கண்ணு பாரு இந்த நொங்குக்கு” என்று தந்தையின் வீட்டு பெரிசுகளும் (“ம்க்கும், அந்த மேட்டு நெத்தியை கொள்ளாமல் இருந்தால் சரிதான்” – இது கிராஸ் டாக்!), மற்றும் அத்தை, மாமாக்களின் அங்க அடையாளங்களை அந்த பிஞ்சுக் குழந்தையின் மேல் ஏற்றி, குழந்தையை தங்கள் குடும்பத்துடன் இணைத்து ஏற்றுக்கொண்டு விடுவது தான் நம் மரபு.

சில நாட்கள் சென்ற பின் அக்கம் பக்கத்தார் குழந்தை வந்து பார்த்து விட்டு “பையன் அப்பன் மாதிரியே ஜொள்ளு விடரான் பாரு” என்று அந்த மூத்த ஜொள்ளனை ஓரக் கண்ணால் பார்த்தபடி கிசுகிசு கமெண்டுகளும் அரங்கேறும்!

மேலை நாடுகளில் தாய்க்கும் குழந்தைக்கும் ஒரு Smart Tag மூலம் மாறி விடாதபடி இணைப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். கண்காணிப்பும் பலமாக இருக்கும். அது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இங்குள்ள மருத்துவ மனைகளிலும் அமையப்போவது எப்போது!

யாருக்கு அப்பன் யாரோ!

DNA double helixஇன்னொருவர் மூலம் தனக்குப் பிறந்த குழந்தையை அது தன் கணவன் மூலம்தான் உண்டானது என்று நம்ப வைத்து வளர்ப்பதை “Paternity Fraud” என்று அழைக்கிறார்கள். “Maternity is always certain, paternity is a matter of inference” என்ற legal maxim அடிப்படையில் தாலி கட்டிய கணவன் தந்தை எனும் பட்டம் பெறுகிறான், அதற்கு அவன் chromosome தானம் செய்யாமல் இருந்தால் கூட! இது கொடுமைதான், என்ன செய்வது! இது போன்ற சிக்கல்களைத் தீர்க்க மரபணு சோதனைதான் சரியான வழி என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால் பல நீதிபதிகள் இதனை ஒப்புக் கொள்வதில்லை. இதன் விளைவு – தி. ஜானகிராமன் எழுதிய “அம்மா வந்தாள்” கதைதான்!

ஆனால் இன்னொருவர் குழந்தையை தன் குழந்தையாக எண்ணிக் கொண்டு ஒரு தாய் அதனை பால் ஊட்டி வளர்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? சிறிது வளர்ந்த பிறகுதான் வண்டவாளம் பல்லை இளிக்கும். அதுவரை குயில் குஞ்சுகளை தனதாக வளர்க்கும் காக்கையின் நிலைதான் அந்த தாய்க்கு!

அப்பா டக்கர் குயிலார்!


crow-feeding.jpgபெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். அந்த அப்பாவிப் பறவைகள் குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தான் கத்தும் கட்டைக் குரலில்!

அந்த அப்பாவி காகங்கள் குயில் குஞ்சுக்கு உணவூட்டுவதை காண இங்கே கிளிக்குங்கள்

wren-feeding.jpgகாகமாவது பரவாயில்லை. இந்த தம்மாத்தூண்டு குருவி தன்னைவிட பல மடங்கு சைஸில் பெரிய குயில் குஞ்சுக்கு உணவு ஊட்டுவதைப் பாருங்கள். இதுபோல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு, பிறகு பொரித்த குஞ்சுகளும் அந்த ஏமாந்த பறவை மூலமாகவே பராமறிக்கப்படும் முறைக்கு “Brood Parasitism” என்று விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கிறார்கள்.

சாப்பாட்டுக்கு ஒரு பாஸ்வோர்ட்!

FairyWren.jpgஇது போன்ற டுபாக்கூர் வேலைகளை தவிர்க்க ஆஸ்திரேலியாவில் வசிக்கும் Fairy-wren என்னும் ஒரு வகை மயில் கழுத்து குருவி ஒரு சூப்பர் ஐடியாவை செயல் படுத்துகிறது. அது தன் குஞ்சுகளுக்கு அவை முட்டையின் உள்ளே இருக்கும் போதே ஒரு பாட்டை சொல்லிக் கொடுத்து விடுகிறது. அதே மெட்டை மீண்டும் மீண்டும் கூவி குஞ்சுகளுக்கு மனப்பாடம் ஆகச் செய்கிறது. பிறகு தாய்க் குருவி கூட்டை நெருங்கு முன்னரே அதை கூவிக் கொண்டே இருக்கும். குஞ்சுகள் பதிலுக்கு அதே மெட்டை இசைத்தால்தான் கூட்டுக்குள் வந்து இரை கொடுக்கும்.

ஆனால் அந்த பாஸ்வோர்ட் பாடலை குயிலின் குஞ்சும் முட்டையின் உள்ளிருந்து செவி மடுக்குமே? அங்குதான் இருக்கிறது சிக்கல் (குயில் குஞ்சுக்கு). குயில் குஞ்சு தன் உடனுறை குருவிக் குஞ்சுகளைவிட சீக்கிறமே முட்டையிலிருந்து பொரித்து வெளி வந்து விடுவதால் அந்த மெட்டை உள்வாங்கி மனப்பாடம் செய்ய அதற்கு நேரம் பற்றாமல் போய் விடுகிறது. அந்த சங்கேதக் குறியீட்டு கூவல் தெரியாமல், அது தன் இயல்புப்படி கத்தத் தொடங்குவதால் சுலபமாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது.

மேலும் குயில் குஞ்சு சீக்கிறமே முட்டையிலிருந்து வெளி வந்து விடுவதால் அது “ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுவது” போல அந்தக் கூட்டுக்கு சொந்தமான குருவியின் முட்டைகளை வெளியே தள்ளிவிடும் இயல்பு கொண்டது (நம்மூர் அரசியல்வதிகள் போல்). அது போல் நேர்ந்தால் தாய்க் குருவி அறிந்து கொண்டு அந்தக் கூட்டையே கைவிட்டு ஓடிவிடும் – ஏனெனில் கூட்டை நெருங்கும் போது எதிர்ப் பாட்டு ஏதும் அதற்கு கிட்டாது அல்லவா! பிறகென்ன, அந்த குயில் குஞ்சு பாடு அம்போதான்!

இதென்ன ஜுஜுபி? எத்தனை சினிமாவில் “குடும்பப் பாட்டை” பாடி பிரிஞ்ச உடன்பிறப்புக்கள் ஒன்றாக சேர்ந்து வில்லனை அடிக்கறதை பாத்திருக்கோம்! ஒரு வேளை அந்த Fairy-wren குருவிகள் நம்மூர் சினிமாவைப் பார்த்துத்தான் இந்த ஐடியாவை கத்துகிட்டு இருக்குமோ என்னவோ!

அதிருக்கட்டும். குயிலைப் போன்ற குரல் என்கிறோமே அந்த இனிமையான குரலுக்கு (குவூ.. குவூ..) சொந்தக் காரர் யார் தெரியுமா? ஆண் குயில் தான். பெண் குயிலின் குரல் கர்ண கடூரமாக இருக்கும்!

Leave a Reply

Your email address will not be published.