உன் சமர்த்து!

சீனிராஜ் சிவகுமார் என்பவர் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறப்பான கவிதைகள் பல ஆக்கி அளித்துள்ளார், தம் “சிவமகா” என்னும் வலைத்தளத்தில். அங்கு உதிர்ந்துள்ளதொரு முத்து இது:

வாழையடி வாழை

வழுக்கையின் பரப்பளவு கூடும் முன்னே
வீடுகட்ட வாங்கியதை அடைக்க வேண்டும்
விழுக்காடு கூடுவதும் தெரிய வில்லை
வங்கியிலே கேட்டாலும் புரிய வில்லை
இழக்காமல் சேர்ப்பதற்கு முடிய வில்லை
ஏன்தம்பி சரிகிறது நிஃப்டி, சென்செக்ஸ்?
ஒழுங்காக மேற்கல்வி பயின்றி ருந்தால்
ஓடாகத் தேய்ந்திருக்கத் தேவை யில்லை

பேஸிக்கும் டீஏவும் ஏறி னாலும்
பேர்பாதி தவணைக்கே போத வில்லை
யோசிச்சு யோசிச்சு செலவு செஞ்சும்
எட்டாம்நாள் அக்கவுன்டில் ஏது மில்லை
ஆசைக்கோர் அரைவேட்டி எடுக்க வில்லை
அவளுக்கோ துணிக்கடையே தீர்ந்து போச்சு
பூசைகள் செய்தாலும் ஏற்ற மில்லை
பூங்காவில் அமர்ந்தாலும் இளைக்கும் மூச்சு

காதுகுத்தல் கல்யாணம் வந்து விட்டால்
கவரோடு போய்நின்று கை குலுக்கிப்
பாதிமுகம் ஒளிப்படத்தில் தெரியு மாறு
பல்வரிசை காட்டிவிட்டு வருவ தற்குப்
போதாது நான்பார்த்த நாலு OT
போகலைன்னா புலம்பிடுவா எம்பொண் டாட்டி
போதிமரம் எங்கிருக்கு சொல்லுங் கப்பா
பொதுவாய்த்தான் கேட்கின்றேன் உதவு மில்ல?

இன்பங்கள் துறப்பதற்குப் புத்தன் இல்லை
இருந்தாலும் நச்சரிப்புத் தாங்க வில்லை
பெண்பார்த்த போதெனக்குப் புத்தி தூங்கி
பவுடர் பூ பசப்பலில்தான் விழுந்துட் டேனோ?
உண்பதற்கு வாய்திறக்கும் வேளை யில்தான்
உயிரெடுக்க வாய்திறப்பாள் என்னில் பாதி.
அன்பான சொல்கூடத் தேவை யில்லை
அமைதியாக இருந்தாலே அவள்தான் சாமி.

வகையறாக்கள் வந்துவிட்டால் சிரித்து வைத்து
வகைசெய்ய வேண்டுமடா மூன்று நாட்கள்
பகையெல்லாம் இவர்கள்தாம் என்ற போதும்
போய்ச்சேர்ந்தால் வேண்டுமடா எட்டு கால்கள்
மகனுக்கு உதட்டின்மேல் கறுக்கும் போது
மாட்டாமல் உருப்பட்டால் நல்ல வேளை.
மகளுக்குத் தேடவேண்டும் பொன்கொ டுத்து
மத்தபடி மருமவனே உன்ச மர்த்து.

Leave a Reply

Your email address will not be published.