நங்கை மடவன்னம்

vaduvur duraisamy iyengarஅந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.

அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.

எப்படி இருக்கிறது வர்ணனை!

இதுதான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் பாணி! நாவலின் பெயர் ”பன்னியூர் படாடோப சர்மா”. வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ்), 244 (பழசு), இராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004.

இந்தக் கதையில் உலாவரும் சில பாத்திரங்கள் இவை:

  • சவுடாலப்பர்
  • பரகமன சதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் (பரிசுத்த பாப்பையா)
  • கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர்

இவர் பயன்படுத்தியுள்ள ஒரு விநோதமான சொல் – ”சாம்பாக்கன(ல்)” அதன் பொருள் ”Champagne” என்கிறார் இவர்!

ஆம், புகழ்பெற்ற “திகம்பர சாமியார்” பாத்திரத்தைப் படைத்த வடுவூரார்தான். தமிழில் பொழுதுபோக்கு நாவல் எழுதுவதில் அனைவருக்கும் அவர்தான் முன்னோடி.

வடுவூராரின் நடை மற்றும் விலாவாரியான விவரணங்கள் சாண்டில்யனின் வர்ணனைகளுக்கு அண்ணனாக இருக்கும். ஒருவேளை சாண்டில்யனுக்கே இவருடைய தாக்கம் இருந்தது போலும். சாண்டில்யன் எழுதியுள்ள “செண்பகத் தோட்டம்” என்னும் நகைச்சுவை சமூக நாவலின் பாத்திரப்படைப்பு, உரையாடல் போன்றவை கிட்டத்தட்ட வடுவூரார் பாணியிலேயெ இருப்பதைக் காணமுடிகிறது.

வடுவூராரின் நாவல்களில் பல ஆஷாடபூதிகளையும், கபட சன்னியாசிகளையும், காமாந்தகாரர்களையும், அகடவிகட சவுடால் டாபர் மாமாக்களையும், மயக்கு சுந்தரிகளையும் மற்றும் பல்போய், சொல்போய், “சொய்ங்” என்று தொய்ந்துபோன நிலையிலும் டம்பத்தில் சிறிதும் குறைவில்லாத வெட்டி வீராப்பு பேசும் டுபாக்கூர்களையும் நீங்கள் சந்திக்கலாம். அவருடைய பாத்திரப் படைப்பும் மனித சுபாவத்தை தெளிவாக சித்தரிக்கும் யுக்திகளும் பிரமிக்க வைக்கக் கூடியவை; 1925 வாக்கில் தமிழ்நாட்டின் அன்றாட நடப்புக்களை நம் கண்முன்னால் கொணர்ந்து நிறுத்தக்கூடியவை. அவருடைய “மேனகா” என்னும் படைப்பு திரைப்படமாக வெளிவந்து சக்கைபோடு போட்டது.

வடுவூரார் வாழ்க்கையை ரசித்து அனுபவித்தவர். அந்தக் காலத்து பி.ஏ. அவரைப் பற்றிய ஒரு வர்ணனை:-

“நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்ச கச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை. தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார், இளமையோடிருக்க! மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.”

இவரைப் பற்றி விமரிசகர் க.நா.சு முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இவை:-

“சேலம் பட்டுக்கரை வேஷ்டியும், காதில் பால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீசூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை இன்றுகூட நினைவு கூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்துகொள்ளப்ப்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.”

சென்னை திருவெல்லிகேணி பெரிய தெருவில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் கோயிலுக்கு அருகில் இருந்த (இப்போது இடம் மாறி விட்டது) சரவணா லெண்டிங் லைப்ரெரியிலிருந்து பெற்று வடுவூராரின் அனைத்து நாவல்களையுமே படித்து முடித்து விட்டேன் – எல்லாம் குண்டு குண்டு தலையணைகள். தற்போது அல்லயன்ஸ் பிரசுரம் கொணர்ந்திருக்கும் பதிப்புக்களை வாங்கிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு!

இவரைக் குறிப்பிட்டு நான் முன்பு எழுதிய இடுகை: “செவலையும் திகம்பர சாமியாரும்

1 Comment


  1. நடை சிறிது “வசவச”-வென்று இருந்தாலும் அந்தக் காலத்து பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள் பலவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு “ ஆடு மலையேறி மேய்ந்தாலும் குட்டி கோனாருடையதுதானே!”

Leave a Reply

Your email address will not be published.