ஒரு ரயில் பயணத்தின்போது எதிரே அமர்ந்திருந்த தம்பதிகளுக்குள் காரசாரமான விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. பிறர் பேசுவதை ஒட்டுக் கேட்பது நாகரிகமல்ல என்றாலும் ஒரு பொது இடத்தில் இதுபோல் உரக்க நடந்துகொண்டிருந்த அந்த வாக்குவாதம் என் காதில் தொப்தொப் என்று விழுந்து கொண்டிருந்தபோது அதை செவி மடுக்காமல் இருக்க முடியுமா, அதுவும் சமாசாரம் சுவாரசியமாக இருந்தால்!
விஷயம் இதுதான் – சமீபத்தில் அவர்கள் வெளிநாட்டிலிருக்கும் தன் மகன் வீட்டிற்குச் சென்று திரும்பியிருக்கிறார்கள். மகனின் குழந்தைகளை சீராட்டிவிட்டு, அவர்களுக்கு baby sitting சேவைகளை செவ்வனே செய்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுடைய பேரக் குழந்தையை சிறிது கடிந்து பேசிவிட்டாள் அந்த அம்மாள் என்பதற்காக அவர்களுடைய மருமகள் கோபப் பட்டிருக்கிறாள். அவர்களுடைய மகனும் முகத்தைக் காண்பித்திருக்கிறார்.
இதுதான் அந்த அம்மாளுடைய மனத்தாங்கலுக்குக் காரணம். “அவர்களுக்குச் செய்வதற்குத்தான் நானா? கண்டிப்பதற்கு உரிமை இல்லையா” என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள், அந்த அம்மையார். அவருடைய புருஷன் சமாதானம் செய்து கொண்டிருந்தார், “இதைப்பார், பிறருடைய குழந்தைகளைக் கொஞ்சி சீராட்டி வளர்க்கலாம். அவர்களுடன் விளையாடலாம். ஆனால் கடிந்துபேச நமக்கு உரிமை இல்லை. அது அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு மட்டும்தான் உரிமையான விஷயம். அதுதான் சரியான அணுகுமுறை. இது நம் பேரக் குழந்தைகளுக்கும் பொருந்தும்” என்றார் அவர்.
கூர்மையாக யோசித்துப் பார்த்தால் இந்தக் கூற்று சரியானதுதான் என்று தோன்றுகிறது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்ற பேச்சே இல்லாத இக்காலத்தில் சில நாட்கள் குழந்தைகளோடு இருக்கும் போது இனிமையாக பொழுதைக் கழிக்காமல் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் தலையிட்டு, குழந்தைகளின் தற்கால எண்ணப் பாங்கினையும் அவர்கள் வளரும் சூழலின் தன்மையையும் அறியாமல் அவர்களுக்கு அறிவுரை சொல்ல முயன்றால் பிணக்குதான் மிஞ்சும்.