அபிதான கோசம்

சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது “அபிதான கோசம்” என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், “Asian Educational Services” நிறுவனத்தினர்.

அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது
யாழ்ப்பாணத்து மானிப்பாய்
ஆ. முத்துதம்பிபிள்ளையால்
செய்து,

இலங்கை இராஜ்மந்திர சபை
அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி
ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய
வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்
பிரகடனஞ் செய்யப்பட்டது.

இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-

பூவுலகத்திலேயுள்ள பாஷைகளுள்ளே வடமொழியும், தென்மொழியும் மிகப்பழமையும், இலக்கண வரம்பும், நூற்பெருக்கமும், அதிப்புராதன இதிகாசங்களும், ஞானநூன் மலிவும், நாகரிகவளமுமுடைய பாஷைகளென்பது ஆய்ந்தோர் துணிபாம். இருபாஷையாளரும் வைதிக சமயிகளேயாதலின் வேதபுராணேதிகாசங்களும் தரும நூல்களும், ஏனைய சாஸ்திரங்களும் இருவருக்கும் பொது நூல்களேயாம். ஒரு நூலிலே ஒருவர்பெயர் கேட்கப்படும்பொழுது அவர் யாரென்றலும், எக்காலத்தவரென்றலும், யாதுசெய்தாரென்றலுமாகிய இன்னோரன்ன வினாக்கள் உதித்தல் வித்தியார்த்திகள் கண்ணும், வித்தியாவிநோதர்கள் கண்ணும் இயல்பேயாம்.

ஆதலின், வேதாகம புராணேதிகாசங்களிற் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், இருஷிகள், முனிவர்கள், அசுரர், யக்ஷர், கந்தருவர், கிந்நரர், அவதர புருஷர், பக்தர், அரசர், புலவர், வள்ளல்கள், வித்துவான்கள் முதலியோர் சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரம், நதி, தடாகம், விருக்ஷ முதலியவற்றின் வரலாறுகளும், தமிழ்நாட்டுப் பண்டைகாலத்து அரசர், புலவர், வள்ளல்கள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வைதிக சாஸ்திரக் கொள்கைகளும் ஆராய்ந்துணர்தல் தமிழ் கற்போருக்கும், தமிழ்க் கலாவிநோதர்க்கும் இன்றியமையாதனவாம்…

இந்நூலை வாசிக்கையில் ஒரு உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது. இடைக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்துமுகமாக நம் மக்களை “ஆரியர், திராவிடர்” என்று இனப்பிரிவினை செய்து, அந்த விஷவித்தை அவர்களுடைய கைக்குக்கூலிகள் அப்பாவி மக்கள் மனத்தில் விதைத்து அதை நீர்விட்டு வளர்த்த காலத்திற்கு முன்னர் தமிழும், சமஸ்கிருதமும் ஒருசேரப் பின்னிப் பிணைந்து அனைவராலும் கற்றுணரப்பெற்ற பொற்காலமாக அந்நாட்கள் விளங்கியிருந்திருக்கின்றன.

யாழ்வாழ் தமிழறிஞரின் நடையைக் காண்கையில் இருமொழிகளும் எவ்வாறு வெறுப்புணர்வின்றி சமநிலையில் மக்களால் கையாளப்பெற்றிருந்தது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

இனவாத இருளிலிருந்து விலகி சத்திய ஒளியை நோக்கி ஏறுநடை போடுவோம். தமிழ்கூறும் நல்லுலகிலுள்ளோர் அனைவரும் நம் பாரதத்தின் தொன்மையான பாரம்பரியத்தை பேணிக் காப்போம்!

2 Comments


 1. இந்த நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

  அந்த முன்னுரை அழகாக எழுதியிருக்கிறார். தமிழர் சம்ஸ்கிருத மொழியைத் தமதாகவே கருதினர் என்பதற்கான ஆதாரங்களான இத்தகைய ஆவணங்கள் அனைத்தையும் தொகுத்து வைக்க வேண்டும்.


 2. நன்றி ஜடாயு.

  இப் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்குச் சென்று இதுபோன்ற நூல்களை வாங்கிவர எண்ணியுள்ளேன்.

  அதன்பின் அவை பற்றி தெரிவிக்கிறேன்.

  அவர்கள் எழுத்துருவை மாற்றாமல் facsimile முறை மூலம் அச்சிடுவதால், நாம் அந்தக் காலத்திற்கே கொண்டு செல்லப்படுகிறோம்!

  எஸ்.கே

Leave a Reply

Your email address will not be published.