மென்பொருள் உலகம் – 1

இன்று இந்தியாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கணினி மென்பொருள்தான். “எல்லா மார்க்கங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன, எல்லா நதிகளும் ஒரே கடலில் கலப்பது போல” என்கிற cliché (இந்தக் கூற்றை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை – நீ வேண்டுமானால் என்னுடன் சேர்; அப்போதுதான் நாம் இருவர் வணங்கும் கடவுளும் ஒருவரே எனக்கொள்ளலாம் – என்பது சிலர் வாதம்!) போல எந்தப் படிப்பு படித்தாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ அல்லது மென்பொருளைக் கையாண்டு வேறுபல சேவைகள் செய்யும் நிறுவனத்திலோ வேலைக்கு சேருவதுதான் எல்லோருடைய குறிக்கோளும். அப்பத்தான் நாலு காசு பார்க்க முடியும், திருமண மார்க்கெட்டிலும் மதிப்பிருக்கும். இதுதான் இன்றைய நிலை. பெரிய நிறுவனங்கள், ஒருசில பெயர் பெற்ற கல்லூரிகளுக்கே சென்று மெகானிகலோ, எலெக்ட்ரிகலோ, பாறாங்கல்லோ (அல்லது டி.வியில் வரும் “இந்த நிகய்ச்சியை அலிப்பவர்கல்”லோ!) யாராயிருந்தாலும் வலைபோட்டு வாரி எடுத்து (troll) சேர்த்துக்கொள்கிறார்கள்.

இந்தத்துறையில் பெருமளவில் வேலை பார்ப்பவர்கள் (மருத்துவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் போல இவர்களுக்கு அடையாள அட்டைகள் – இரண்டுமே கழுத்தில்தான் தொங்கும்!) கூட்டம் நிறைந்திருப்பது பெங்களூரில்தான். அமெரிக்காவிலிருந்து outsourcing செய்யவேண்டும் என்று நினைத்தவுடன் அவர்கள் மனதில் முதலில் தோன்றும் இலக்கு பெங்களூரே. இந்தியாவின் பல மானிலங்களிலிருந்தும் இங்கு வந்து e-குப்பை கொட்டுகிறார்கள்! மேலும் அமேரிக்காவில் நித்திய கண்டமாக எப்போது pink slip கொடுப்பார்கள் என்ற பயத்தில் தூக்கத்தை இழப்பதைவிட அங்கிருந்து ஓடும் வேலைகளை இங்கு வந்து பிடித்துவிடலாம் என்று நாடு திரும்பும் techies கள் வீடு தேடுவதும் பெங்களூரில்தான்! இதனால் ஏற்பட்ட விளைவுகள் சில:-

 • குடக்கூலி கன்னாபின்னாவென்று ஏறிற்று
 • மனை விலைகள் வானளாவி நிற்கின்றன
 • சாலைகளில் வாகனங்கள் ரொம்பிப்போய் ஒரே முட்டல்-மோதல், தள்ளுமுள்ளுதான்!
 • நீர், மின்சாரம் போன்ற அடிப்படை infrastructure பிரச்னைகள்
 • வேலைத் தாவல்கள் (நிறுவனங்களின் நோக்கில் high attrition rate)
 • திறமையானவர்களைத் தக்க வைத்துக்கொள்ள சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம்

இந்த நிலைமையிலிருந்து மீள விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் இனி தங்கள் தொழில் பெருக்கத்தை பெங்களூருக்கு வெளியே, இந்தூர், நேக்பூர், பெல்காம், மைசூர், பூனே மற்றும் எங்கெங்கே பொறியியல் மற்றும் எம்ஸிஏ போன்ற துறைகள் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளதோ அங்கே கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய மிச்சம். உள்ளூரிலேயே நல்ல வேலை கிடைப்பதால் அடிக்கடி சம்பளம் “போட்டுக்கொடுங்கள்” என்று பிரஷர் கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் இடமாற்றம் செய்து அங்கு வாடகை, ஹோட்டல் சாப்பாடு போன்ற சிலவு இல்லாமல் சம்பளத்தை “விள்ளாமல் விரியாமல்” அப்படியே – பொறுங்கள், அம்மா கையில கொடுத்துப்போடும் “சின்னக்கண்ணு”க்கள் எவ்வளவுபேர் இந்தக் காலத்தில்! (வேறு வகையில் சிலவாகும் அவ்வளவுதான்). கூடுவிட்டுக் கூடுபாய்தலும் அதிகம் இருக்காது! அவர்களை தங்களுக்கு வேண்டியபடி பயிற்சியளித்து வேலைவாங்கலாம். அடிப்படை infrastructure இருந்தால் போதும். இந்த ரீதியில் போனால் வேலைவாய்ப்பு பரவலாகும். இதுவும் நல்லதுதான்.

***************************************************************************

இந்த மென்பொருள் துறையின் வளர்ச்சியால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன, அத்தகைய நிறுவனங்களில் கையாளப்படும் நிர்வாக நுணுக்கங்கள் எவ்வாறு மாறுபடுகின்றன, knowledge workers – என்ற வகையைச் சார்ந்த மென்பொறியியலாளர்களைக் கையாளுவதில் ஏற்படும் சிக்கல்கள், சாப்ட்வேர் கம்பெனிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க கையாளும் உத்திகள் என்ன, அவை முற்றிலும் நியாயமானவைதானா?
– அடுத்த பகுதியில் அலசுவோம்!

7 Comments


 1. I liked the comparison on steth and id card. These IT companies can easily move to less crowded cities like Coimbatore and make then crowded one too. If the companies here go on outsourcing spree, then soon Americans also will move towards Bangalore. Already my colleagues are asking how to get a H1 visa to work in Bangalore.

  Good topic. Eagerly awaiting for the next one.

  Regards
  S.Thirumalai


 2. உண்மைதான். மென்பொருள் நிறுவனங்கள் பெங்களூரை விட்டு சென்னையில் குடிகொள்ள ஆரம்பித்திருக்கின்றன.(பார்க்க சுட்டி:http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEN20040926092530&Page=N&Title=Infotech&Topic=0#start) இதில் வேலைசெய்வோர் பெரும்பாலும் பிரம்மச்சாரிகள். இதனால்அடையார், வேளச்சேரி, திருவான்மியூர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு குப்பை அள்ளுவதைப் போல நிறுவனங்கள் மாணவர்களை அள்ள ஆரம்பித்திருக்கின்றன. பார்ப்போம். என்னதான் நடக்கிறது என்று.


 3. அண்ணாத்தே,

  சோக்காத்தான் சொல்லிக்கீறீங்க. ஆனா முதல் பாராவுலயே இம்மாம் பெரிய வரியா போடனுமா? கொஞ்சம் வெட்டி போட்டா இன்னும் சோக்கா இருக்குமே? அக்காங்.


 4. பாமரத் தம்பி!

  வெட்டலாம்னுதான் போனேன். ஆனா இன்னும் கொஞசம் சேர்த்துக்கிட்டேன், “பெருமாள்” போய் “பெத்தப்பெருமாளா” திரும்பி வந்த கதையா!

  நான் எம்ஜிஆர் மாதிரி – லேஸில புள்ளி வைக்க மாட்டேன்!!

  எஸ்.கே


 5. அருமையான விஷயத்தை நல்ல நேரத்துல சூப்பரா ஆரம்பிச்சுருக்கிறீங்க. நல்லா தொடர்ந்து எழுதுங்க.


 6. அண்ணாத்தே,

  நீங்க பாட்டுக்கும் ஸ்டெதஸ்கோப்பு கணக்காக்கீதுன்னு சொல்லிட்டீங்க. எங்களுக்கு அது நாய் கழுத்துல போட்ட சங்கிலி கணக்கால்ல கீது. நீங்களும் போட்டுக்கினா தெரியும்.

  infrastructure infrastructure-னு கூவிக்கீறீங்fகளே, எனக்கு என்னமோ இருக்கறதும் குறைஞ்சிகிட்டு வர்ற மாதிரி தெரியுது. பாழாப்போன பழைய மஹாபலிபுரம் ரோட்டுலதான் நம்ம ஆபீஸ் கீது. அங்கதேன் Infosys,TCS,Wipro,CTS,Polaris,Xansa-ன்னு பெத்த பெத்த கம்பெனியெல்லாம் குறைஞ்ச வெலைக்கு கெடைச்சுதுன்னு ஆபீஸ் கட்டி உட்டிருக்குது. கட்டிப் போட்டுட்டு உருப்படியா ரோடு போட்டுக் குடுன்னு மாநகராட்சியை இம்சை பண்ணிக்கிட்டி கீதுங்க.

  இதுல பெருங்குடியாண்ட பாதாள சாக்கடை மராமத்து பண்றோம்னு பாதி வழியை அடைச்சுட்டு வேளச்சேரி போற ரூட்டுல போவச் சொல்லோ, மொத்த மேட்டுக்குப்பத்துல இருந்து SRP Tools வரைக்கும் மொத்த ரோடும் மோசமா இருக்கச் சொல்லோ தெனமும் காலைல ஒண்ணு சாயந்திரம் ஒண்ணுன்னு சிட்டி பஸ்ஸுங்க பள்ளத்துல மாட்டிக்கச் சொல்லோ ஒரே பேஜாராக்கீது. கஸ்டமர் எல்லாம் என்னாங்கடா ரோடு இதுன்னு அலுத்துக்கறாங்க.(அய்…நானும் முற்றுப் புள்ளி இல்லாம எழுதீட்டேனே. என்ன ரெண்டு கமாதான் வந்துருச்சு…நீ கில்லாடிப்பா).

  இதுக்கு ஏதாவது பண்ணனும்னு கம்பெனியெல்லாம் முழிச்சுக்கினு கீது. இத்தப் ப்த்தியும் ஏதாச்சும் எழுதிப் போடு அண்ணாத்தே. அக்காங்.

  – பாமரன்

Leave a Reply

Your email address will not be published.