தரையிலிறங்கிய விண்மீன்!

சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார். எந்தக் கோயிலில் என்ன விசேஷம் என்று விசாரித்து சென்ற வண்ணம் இருப்பார். விரதம், உபவாசம் என்று உடலை வருத்திக் கொள்வார். இதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு சிந்தனையே கிடையாது. செயலும் கிடையாது. தவிர, உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னாலியன்றதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள். தம் ஜன்மமே பிறருக்குப் பயன்படத்தான் என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.

அவர்களுக்கு ஒரே குழந்தை, அவர்களது மகன். அவனுக்கு இப்போது 33 வயது முடிந்துவிட்டது. ஆனால் அந்தப் புத்திரன் விஷயத்தில் அவர்கள் அனவரதமும் தொழும் அந்த பெருமாள் அவர்களை மிகவும் சோதித்துவிட்டார்!

ஆம். அந்தப் பையன் ஆட்டிஸம் (Autism) எனப்படும் நுண்ணுணர்வு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளான். அது தவிர வேறு சில மூளை தொடர்பான கோளாறுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்போது உட்கொண்ட வீரியமிக்க மருந்துகளின் தாக்கத்தால் பேசும் சக்தியையும் அநேகமாக இழந்துவிட்டான். ஒரு பெரிய உருவம் கொண்ட 1 வயது குழந்தைபோல அவனைக் கருதவேண்டிய நிலை.

அந்தப் பையனின் சில அடிப்படை இயல்புகள்-

 • அவனால் பிறர் பேசுவதை உள்வாங்கி எதிர்வினை புரிய இயலாது
 • அவனுடைய வீட்டில் எல்லாப் பொருட்களும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். ஒரு நாற்காலி சிறிது இடம் பெயர்ந்திருந்தாலும் உடனே மாற்றி வைத்துவிடுவான்
 • தன் குடும்பத்தினர் மற்றும் நன்கு பழகியவர்களைக் காணும்போது அவர்களின் தலைமுடி சிறிது கலைந்திருந்தால்கூட ஓடிச் சென்று அதனை சரி செய்வான். மோதிரம் சிறிது சுழன்றிருந்தாலும் நுணுக்கமாகக் கவனித்து அதனை நேராக்குவான்
 • அவனுக்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எங்கிருந்தாலும் உடனே எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். அதனால் பெரும்பாலும் அடுத்தவர் இல்லங்களுக்கோ பொது இடங்களுக்கோ அவனை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
 • நடந்து செல்லும்போது எதிரே வரும் நபரின்மேல் இடித்துக் கொண்டே செல்வான்

இவையெல்லாம் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

சௌந்திரராஜன் தம்பதிகளுக்கும் வயதாகி விட்டது. தங்களுக்குப் பிறகு இந்தப் பையனை யார் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு பிறரிடம் பழகுவது எப்ப்படி, பொது இடங்களில் நடந்துகொள்வது எப்படி போன்றவை ஒன்றும் தெரியாது.

இந்தப் பையனுக்கு விமோசனம் என்ன?

அவன் பெயர் ஸ்ரீராம்!

அவர்கள் அன்றாடம் தொழும் ஸ்ரீராமன்தான் வழிகாட்டவேண்டும்!

நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே –
இம்மையே இ’ராம’ என்று இரண்டு எழுத்தினால்.

1 Comment


 1. 82 வயதுக் கிழவன் குத்தாட்டம் பார்த்து மகிழ்கிறான். கோழிக்குருமா தின்று குத்துக்கல்மாதிரி இருக்கிறான்.
  ஸ்ரீராம் ஆடிசம் வியாதியால் குழந்தைபோல் தவழ்கிறான்.
  முன்வினைப்பயன் அல்லாது வேறு என்ன?
  ஸ்ரீராமன் அருளால் அற்புதம் நிகழ்ந்து ஸ்ரீராம் குணமடைய நாம் பிரார்த்திப்போமாக!

Leave a Reply

Your email address will not be published.