கோகில கான இசை வாணி

சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் – முதலில் Texla பிறகு Bush – இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை – அதிலும் செம்மங்குடி போன்ற மூக்கு வித்வான்கள்தான் ”நீ இழு, நான் இழு” என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள், நீர் வற்றிக் கொண்டிருக்கும் குட்டையின் சேற்றில் படுத்து சொர்க்கத்தை அநுபவிக்கும் எருமை மாட்டின் “கொய்ங்” போல! இந்த சங்கீதக் காரர்களுக்கு அநாவசியமாக வாய் வேறு எதற்கு – மூக்கு ஒன்றே போதுமே என்று நான் பல முறை என்ணியிருக்கிறேன்.எம்.எஸ் என் அம்மாவிடம் “இப்படி இழுத்து இழுத்து பாடுவதுதான் சங்கீதமா? ஏன், இனிமையாகப் பாடக் கூடாது என்று ஏதாவது இலக்கணக் கட்டாயமா?” என்று கேட்கும்போதெல்லாம், “டேய், ஜிஎன்பி, எம். எஸ் – இவங்களைக் கேட்டுப்பார்டா. அது தாண்டா சங்கீதம்” என்று பதில் சொல்லுவார். அப்போதிலிருந்தே அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் போல் நானும் எம்.எஸ் பாடல்களைக் கேட்டு அந்த இசையின்பத்தை அநுபவித்து வருகிறேன்.

சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனைக்குச் சென்றிருந்தேன். வழக்கத்தை விட தாங்க முடியாத கூட்டம். காலையிலிருந்தே கையில் சாப்பாடு, தண்ணீருடன் கொட்டகைக் குள்ளேயே பல பெண்மணிகள் உட்கார்ந்திருந்தனர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிக் கொண்டே வந்தது. ஆம், அன்று ஒரு சிறப்பான நாள். பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் அன்று தான் எம்.எஸ் அவர்கள் ஆராதனையில் பாட இருந்தார்கள்! மேடையை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம். நானும் எனக்குத் தெரிந்த தலைகள் மூலம் கிட்டத்தில் போக முற்பட்டேன். பலிக்கவில்லை. முன்னமையே முயற்சி செய்து அங்குள்ள நிர்வாகிகள் யாரையாவது சிபாரிசு பிடித்திருக்கலாமே என்று
தோன்றியது. சரி. இப்போது என்ன செய்வது? கடைசியில் அமர்ந்து கேட்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது மேடையின் அருகில் அமர்ந்து எம்.எஸ் கச்சேரியை கேட்க வேண்டும் என்கிற வெறி.

என்ன செய்வது? எட்வர்ட் டி போனோ-வின் “லேடரல் திங்கிங்” முறையை பயன் படுத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று கொட்டகைக்கு வெளியே ஒரு பரபரப்பு. மேடைக்கு வித்வான்கள் வரும் சிறப்பு வழியில் போலீஸ்காரர்களும் நிர்வாகிகளும் ஓடிக் கொண்டிருந்தார்கள். நானும் சென்று பார்த்தேன். ஒரு முக்கியமான வி.ஐ.பி வந்து கொண்டிருந்தார். தியாகராஜ ஆராதனை நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்த மூப்பனார் தான் அவர். உட்புகும் வழியில் போலீஸ்காரர்களின் அரண் அருகில் நின்று மூப்பனார் என்னருகே நெருக்கியதும் அவருக்கு வணக்கம் சொன்னேன். எனக்கு பதில் வணக்கம் சொல்லி “எப்படி இருக்கீங்க, வாங்க” என்று கூப்பிட்டு விட்டு உள்ளே சென்றார் (என்னைப் போல் முகம் கொண்ட வேறு யாரையோ அவருக்கு நன்கு பழக்கம் போலிருக்கு!). அவ்வளவுதான். அவருக்கு ரொம்ப நெருங்கியவர் என்ற
எண்ணத்தில் என்னை அந்தப் பாதையில் பணிவாக அனுப்பினார்கள். நானும் முன் வரிசையில் அமர்ந்து கொண்டேன்!

ஆராதனையில் இரண்டு மேடைகள் போடப்பட்டிருக்கும். மாற்றி மாற்றி கச்சேரி நடக்கும். வலது புறம் இருந்த மேடையில்தான் எம்.எஸ் பாட்டு. ரேடியோக்காரர்கள் நேரடி ஒலி பரப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இடது பக்கத்தில் மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் பாட்டு. அன்று அவர் பாடிய “அம்ம ராவம்மா” (கல்யாணி) பிரமாதமாக இருந்தது.

சிறிது நேரத்தில் பக்க வாத்தியங்கள் புடை சூழ, சாந்தமான, தெய்வீகக் களை கொண்ட முகத்துடன் எம்.எஸ் மேடைக்கு வந்தார். சிவப்பழமாக சதாசிவமும் வந்து மேடைக்கருகில் அமர்ந்தார். இரவு 9 மணியிருக்கும். அவர் பாடவேண்டிய அரங்கை 2700 சுற்றி ரசிகர்கள் நிரம்பி யிருந்தனர். மைக் முதலியவை சரி செய்யப்பட்டன. நேரடி ஒலி, ஒளி பரப்பாளர்கள் குறுக்கேயும், நெடுக்கேயும் சென்று வந்தனர். ஒரு வழியாக எல்லாம் முடிந்து கச்சேரி ஆரம்பமாகும் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் அது நடந்தது!

திடீரென்று நெற்றியில் வெளேரென்று விபூதிப் பட்டை, அதன் கீழ் அப்பிய அரைக் கிலோ குங்குமம், முகத்தில் மேக்கப், ஆரவாரமான ஜரிகை வேட்டி, அதன் மேல் கண்ணைப் பறிக்கும் பல வண்ணச் சால்வை இவையெல்லாம் தரித்து, ஒரு அரிதாரம் பூசிய கூத்துக்கார கோணங்கி போல் ஒருவர் வந்து எம்.எஸ் பாட இருந்த மேடைக்கருகே நின்று கொண்டு மைக்கை கையில் பிடித்தார். உடனே ரசிகர்கள் தரப்பிலிருந்து பெரிய கூச்சல், “நீ உக்காரு, மறைக்காதே!” என்று. இவர் அதற்கெல்லாம் அசருபவரா என்ன? “நிகழ்ச்சி நடத்துபவன் நான். நேரிடை ஒலிபரப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்க என்னை உதவி செய்ய அழைத்துள்ளார்கள். நான் ஒரிரு வார்த்தைகள் பேசுவேன்” என்று அபினயத்துடன் சொன்னார். ஆனால் ரசிகர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. இன்னும் பலர் சேர்ந்து கொண்டு பெருங்கூச்சலிட்டார்கள். “நீ பேச வேண்டாம். எம்.எஸ் பாட்டைக் கேட்கத்தான் நாங்கள் வெயிட் பண்றோம். நீ போ. மறைக்காதே” இப்படி கூச்சல் வந்த வண்ணம் இருந்தது.

அப்போது நான் மேடைக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்ததால் அந்த மனிதரின் கைகள் நடுங்கியதைக் காண முடிந்தது! தான் எம்.எஸ் போல் (அல்லது அவரைவிட) மிக பாப்புலர் என்ற இருமாப்பில் வந்த அவருக்கு அது பெரிய மூக்குடைப்பு! சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற அவர், மேற்கொண்டு அவமானப்படாமல் அங்கிருந்து போனால்தான் நல்லது என்று நினைத்து சர சரவென்று வெளியேறினார். இந்த comic interlude நடந்த நேரம் முழுவதும் சதாசிவமோ, மூப்பனாரோ, வேறு நிர்வாகிகளோ சிறிதும் சலனம் காட்டவில்லை. எம்.எஸ் அவர்களோ கண்ணை மூடிக் கொண்டார்.

ரசிகர்கள் எரிச்சல் பட்டது நியாயமே. எம்.எஸ் அவர்களின் சிறிய உருவத்தை இரண்டாவது மேடையில் இருந்த மைக்குகள் மறைக்கின்றன என்று அவற்றையே படுக்கையில் போடச்சொன்னார்கள் பல ரசிகர்கள். அவர்களுக்கு எம்.எஸ் தெய்வத்துக்கு நிகரானவர். அவருடைய கானத்தை நேரடியாகக் கேட்கக் கிடைத்த அந்த வாய்ப்பை முழுமையாக அநுபவிக்க ஏங்கும் இசை ரசிகர்களுக்கு இந்த இடைச் செருகல் சகிக்க முடியவில்லை.

அந்த அலம்பல் பேர்வழி யாரென்று உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அவர்தான் கு. வை!!

எம்.எஸ் அவர்கள் அன்றிரவு மிகச் சிறப்பாகப் பாடினார்கள். மேடைக்கு எதிரில் அமர்ந்திருந்த சதாசிவம் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார். சில ஆட்டல்கள் மிகையாக இருந்தன. I felt it was too much of an exhibitionism! அது தவிர, “ஆலாபனை போதும்”, “இன்னொரு ஆவர்த்தனம் ஸ்வரம் பாடணும்” என்பது போன்ற கட்டளைகளை தரையிலிருந்து மேடைக்கு ஒவ்வொறு பாட்டுக்கும் அவர் அனுப்பிக் கொண்டிருந்தது எதோ பொம்மலாட்டம் நடத்துவது போலிருந்தது!

இத்தனையும் தாண்டி எம்.எஸ் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் வழங்கிய இசை வெள்ளம் அன்று எல்லோருக்கும் நிறைவான விருந்தாக இருந்தது. அன்று அந்தக் கச்சேரியை அவ்வளவு அருகாமையில் அமர்ந்து கேட்கக் கிடைத்த excitement-இல் என்னென்ன பாடல்கள் பாடினார் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவில்லை என்பதால் இப்போது கொண்டுவர முடியவில்லை! அக்கப்போர் மட்டும் நினைவில் இருக்கிறதே அது எப்படி என்று கேட்கிறீர்களா? பாழும் மனசு அதையெல்லாம் மட்டும் மறக்க மாட்டேனென்கிறதே! அன்று சங்கராபரணத்தில் “சரோஜ தள நேத்ரி” பாடியதாக நினைவு எட்டிப் பார்க்கிறது! வேறு யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்கள். நானும் Forum Hub, Sangeetham.com போன்ற இடங்களில் கேட்டுப் பார்க்கிறேன்!

இன்னொரு முறை மதுரையில் காந்தி மண்டபத்தில் எம்.ஜி.ஆர் முன்னிலையில் நடந்த ஒரு கச்சேரியை மூன்றாவது வரிசையில்அமர்ந்து கேட்டேன். எம்.ஜி.ஆர் கச்சேரி முடிவில் பேசும்போது அன்று எம்.எஸ் அவர்கள் சொந்த ஊருக்கென்றே மிகச்சிறப்பாகப் பாடியதாகச் சொன்னார்!

இன்று அந்த இசை மேதை நம்மிடையே இல்லை. ஆனால் அவர் முழுமையாக வாழ்ந்தார் என்றே சொல்லலாம். அவர்கள் பகட்டில்லாமல் செய்த தான தருமங்கள் ஏராளம். Royalty தொகையெல்லாவற்றையும் பிறருக்காகவே அர்ப்பணம் செய்தார்கள்.

ஆனால் கடைசி காலத்தில் அவருடைய அந்தரங்கமான விஷயங்களை T.J.S.George எழுதியிருக்க வேண்டாம்.

எம்.எஸ் என்றால் இனிமையான, ஜாஜ்வல்யமான, ரம்மியமான, மனதைத் தொடும் தெய்வீகமான இசை என்பது மட்டும்தான் பொருள்!

“மதுராதிபதேர் அகிலம் மதுரம்”

1 Comment


  1. மிக அற்புதமான பதிவு.

Comments are closed.