இரயில் சிநேகம்-2

பயணங்களில் பிரபலங்கள் அனைவருமே மனம் திறந்து பேச மாட்டார்கள். சிலர் மிகவும் “ரிசர்வ்டாக” இருப்பார்கள். ஆனால் சகஜமாக உரையாடும் எல்லோரிடமும் நான் ஒரு பத்திரிக்கையாளனைப் போல் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவது வழக்கம். அவர்களும் சளைக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் நான் நச்சரிப்பதில்லை. எனக்கென்ன, பொழுது போக வேண்டும். ஏதோ நாட்டு நடப்பு தெரிந்துகொண்டது போலும் அமையவேண்டும், அவ்வளவுதானே!

அதுபோல் என்னுடன் திறந்த மனத்துடன் உரையாடிய இன்னொருவர் திரு. ப. நெடுமாறன் அவர்கள். அவருடன் நெடுநேரம் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டியது. அப்போதுதான் அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சோர்வில் இருந்தார். அதற்கு முன்னால் இந்திரா காந்தியை ஒரு தாக்குதலிலிருந்து காப்பாற்றியதால் “மாவீரன்” என்ற பட்டப்பெயர் பெற்றிருந்தார். அவர் பேசியது கொஞ்சம், ஆனால் படித்துக் கொண்டிருந்தது நிறைய. கையில் எப்போதும் ஒரு புத்தகம் இருந்துகொண்டேயிருந்தது. மதுரையின் சரித்திரத்தைப் பற்றி நிறைய விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டில் பெரிய வல்லமை பெர்ற அரசுகளாகத் திகழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசுகள் ஏன் வீழ்ச்சியடைந்தன, பிற்காலத்தில் நாயக்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள், மற்றும் குறுநில மன்னர்கள் கூறு போட்டு ஆளக்கூடிய நிலை ஏன் ஏற்பட்டது, ஏன் தமிழ் மன்னர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக்கொண்டே காலம் கழித்தனர் – இப்படியெல்லாம் கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டே வந்தேன். எல்லாவற்றிற்கும் பொறுமையுடனும், புன்சிரிப்புடனும் பதில் அளித்தார். நம்மிடையே ஒற்றுமையின்மை, போர்முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வெளிநாடுகளுடன் தொடங்கிய வணிக பாதிப்புகள், பேராசைகள், துரோகங்கள் போன்ற பலவற்றைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். என் கருத்து அவருக்கு உடன்பாடில்லையென்றால் சிரித்துக் கொண்டே மறுத்துவிடுவார். அதனால் உரையாடல் நெருடலில்லாமல் தொடர முடிந்தது.

படிப்பு என்றவுடன் என் நினைவுக்கு வரும் நான் சந்தித்த இன்னொரு பிரபலமானவர் சமீபத்தில் மறைந்த வலம்புரி ஜான் அவர்கள். “திருநெல்வேலி” என்ற தலைப்புடன் கூடிய ஒரு தடித்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். இந்து மதத்தின் பெருமையைப் பற்றியும், தொன்மையைப் பற்றியும் நிறைய மேற்கோள்களுடன் விளக்கினார். நான் அவரிடம் ஒரு கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்து மதத்தைப் பற்றி இவ்வளவு பெருமையாகப் பேசுகிறீர்களே என்று ஆச்சரியப்பட்டேன். அதற்கு அவர், “இந்தக் கேள்வியை என் குருமார்களே கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் அளித்த பதிலில்், “நீங்கள என் பாட்டனாரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நான் என் முப்பாட்டனாரைப் பற்றிப் பேசுகிறேன்” என்று விளக்கினேன்” என்று சொன்னார். அன்று அவர் அந்தக் கருத்தை எடுத்துக் கூறிய சொல்நயம் மிக சிறப்பாக இருந்தது. அவர் கையாண்ட அதே சொற்கள் நினைவுக்கு வரவில்லை. என் சொல்லாட்சிக் குறைவினால் அவர் கூற்று உருவாக்கிய அதே impact-ஐ என்னால் படைக்க இயலவில்லை.் நம் நாட்டின் பழமையான பாரம்பரியத்தைப் பற்றிப் பேச நாம் வெட்கப்படக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினார். அப்போது அவர் “தாய்” இதழின் ஆசிரியராக இருந்தார்.

டில்லியிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணிக்கும்போது நான் சந்தித்த ஒரு விநோதமான நபர் இசை விமரிசகர் சுப்புடு அவர்கள். அந்த நீண்ட பயணம் நெடுகிலும் தொடர்ந்து உரையாடிக்கொண்டு சென்றோம். அவர் கொஞ்சம் வேகவேகமாகப் பேசுவார். வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று எகிரும். அதனாலேயே, அவர் சொல்வதைப் புரிந்துகொண்டு டைப் அடிக்க உதவியாளரை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

பல வித்வான்களைப் பற்றி சுவாரசியமான விஷயங்கள் பலவற்றை அவர் அன்று பகிர்ந்து கொண்டார். குறிப்பாக செம்மங்குடியைப் பற்றித்தான் பெரும்பாலும் பேசினோம். பயங்கர கிண்டல். அவர் “சங்கதி எங்க வருது, சளிதான் வருது” என்று சொன்னதை சுப்புடுதான் சொன்னதாக பலர் எண்ணிக்கொண்டு சண்டைக்கு வந்ததையும்,திருவையாற்றில் நடந்த தகராறு பற்றியும் விவரித்தார். சங்கீதக்காரர்கள் மத்தியில் உள்ள அடிவெட்டுகள், கால்வாரல்கள் போன்ற பாலிடிக்ஸ் பற்றியும், அவர்களின் சேட்டைகள் பற்றியும் பல விவரங்கள் தெரிந்துகொண்டேன். இது தவிர, சில சபாக்கள் மற்றும் நிகழ்ச்சி அரங்கு உரிமையாளர்கள் பிரபல இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்து காசாக்கும் அவலத்தைப் பற்றியும் அறிந்தேன்.

சுப்புடு பர்மா அகதியாக நாடு திரும்பிய கதை மிக சுவாரசியமானது. அது தவிர, அவர் பஜனை நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். விமரிசிப்பதற்காக ஒரு இசை நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு அறைக்குத் திரும்பியவுடன், நிகழ்ச்சியில்் அவர் கேட்ட ஒரு குறிப்பிட்ட ஓசையை மீண்டும் ஹார்மோனியத்தில் கட்டைகளை அமுக்கி ஒப்பிட்டுப் பார்த்து, இசைக் கலைஞர் கையாண்ட ஸ்வரஸ்தானம் சரிதானா என்று உறுதி செய்து கொள்வார். ஹார்மோனியத்தில் ஓசை எழுப்பும் “ரீடு”கள் தனித்தனியாக இருப்பதால் “அனுஸ்வரம்”, “கமகம்”, “ஜாரூ” போன்ற ராக லட்சணங்களை வெளிக்கொணர்வது மிகக் கடினம் என்றாலும் அது அவருக்கு மிகவும் பிடித்த இசைக்கருவி.

அந்த செம்மங்குடி சீனுவாச ஐயருடனேயே ஒருமுறை மதுரையிலிருந்து செங்கோட்டை வரை பயணம் செய்ய நேர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டேன், அவருடைய சங்கீதம் எனக்குப் பிடிக்காது என்று. அதனால் எந்தவிதத் தடையுமின்றி உரையாட முடிந்தது. எங்கள் அறைக்குள் ஒரு கரப்பு நுழைந்தது. அவருக்கு ஒரு கரப்பை சகபயணியாக ஏற்றுக்கொள்ள மனமில்லாததால் அதை விரட்டுவதற்கு என் உதவியை நாடினார். அப்படியே பல வித்வான்களைப் பற்றிய சுவையான விஷயமெல்லாம் கூறினார். எங்கள் ஊருக்கருகிலுள்ள புலியூர் “பதினெட்டு கிரமங்களில்” அடங்குமாதலால் எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டது. வாழ்க்கைத் தத்துவத்திற்கு அவர் ஒரு எடுத்துக் காட்டு. He was an expert on interpersonal relationship.

ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த அரசியல்வாதியைச் சந்திக்க நேர்ந்தது. அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் “இராமகிருஷ்ண விஜயம்”. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று முதலிலேயே கூறியிருந்தபடியால், இது எனக்கு விநோதமாகப் பட்டது. அவர் தான் படித்த பகுதியை என்னையும் வாசிக்கக் கொடுத்தார். அது ஒரு பழைய காலக் கதை.

ஒரு ஊருக்குப் புதிதாக ஒரு மிகுந்த அழகான பெண் வாழ்க்கைப்பட்டு புகுந்த வீட்டுக்கு வந்தாள். அவள் ஒரு கற்புடைய பெண். பொது நீர்நிலைகளில் நீராடச் செல்லும்போது பல ஆண்கள் வெறிக்கப் பார்ப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, விடியற்காலையில் யாரும் எழும் முன்னே சென்று நீராடி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். சிறிது காலம் சென்றபின் அந்த ஊருக்கு இன்னொரு பெண் வந்து சேர்ந்தாள்். அவள் சற்றே நடத்தை பிசகிய பெண். பொது இடங்களுக்குச் சென்றபோதெல்லாம் பலர் அவளை ஏசியவண்ணமிருந்ததால், அவளும் விடியற்காலையில் குளிக்கச் செல்லத் தொடங்கினாள். முதலாமவள் இவளைக் கண்டுவிட்டு, “ஆகா இந்த ஊருக்கு இன்னொரு கற்புடைய பெண் வந்த்திருக்கிறாளே” என்று மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் இரண்டாமவளோ, “தோடா, இங்கே என்னைப் போல் இன்னொரு சிறுக்கியிருக்கிறாளா” என்று இகழ்ச்சியடைந்தாள். இதுதான் கதை. அந்த அரசியல்வாதி இதை எதிர்க்கட்சிக்காரர்களைத் திட்டப் பயன்படுத்துவேன் என்று கூறினார். இராமகிருஷ்ணரின் உபயோகத்தைப் பாருங்கள்!

ஜேப்பியார் கூறிய ஒரு பொன் மொழியை நான் பல இடங்களில் மேற்கோளாகப் பயன்படுத்தியுள்ளேன். பழமையே பேசிக் கொண்டு, “அன்று சொன்னவற்றை அப்படியே கடைப் பிடிக்கவேண்டும்” என்னும் போக்கு, சாலையில் ஊர்தியை ஒட்டும்போது பின்நோக்கும் கன்னாடியைப் பார்த்தபடியே ஓட்டிச்செல்ல முயலுவதுபோலாகும் என்ற கருத்தை அவர் வெளியிட்டார். மூத்தோர் சொல் கேட்க வேண்டியதுதான். அதற்காகஅதையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு காலத்திற்கேற்ப மாறுதலடையாமல் இருப்பது மதியீனம் என்ற கருத்து எனக்கு மிகவும் உடன்பாட்டுடன் அமைந்தது.

தஞ்சைவாணன் என்பவர் தொலைக்காட்சியில் பிரபலமானவர். அவருடன் பயணிக்கும்போது, காம இச்சைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். சென்னையில் கிடைக்கும் இரவு வாழ்க்கையைப் பற்றி அவருடைய விவரணைகள் கேட்க அருவருப்பாயிருந்தாலும், ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்ததென்னவோ நிஜம் 🙂

செட்டிநாட்டரசர் முத்தையா செட்டியார் அவர்கள் மதுரை இரயில் நிலையத்துக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிக்க வருவதே ஒரு கோலாகலமான நிகழ்ச்சியாக இருக்கும். வண்டி கிளம்ப வேண்டிய குறிப்பிட்ட நேரம் கடந்து சிறிது தாமதமாகத்தான் வருவார். நிலைய அதிகாரி முதல் பலர், அவர் பயணிக்க வேண்டிய பெட்டியருகே காத்துக் கொண்டிருப்பார்கள் ஆரவாரமாக அவர் வந்து சேர்ந்தவுடன் ஒருவர் வந்து மாலை அணிவிப்பார். அவர் வண்டியில் ஏறிய பிறகுதான் எக்ஸ்பிரஸ் புரப்படும். இந்த பந்தாவை மதுரையில் பலமுறை கண்டிருக்கிறேன்.

சிலருக்கு இரயில் சிநேகமே நீடித்த உறவாக மாரும் பாக்கியம் கிட்டியிருக்கலாம். அவர்களெல்லாம் புண்ணியம் செய்தவர்களே!

2 Comments


  1. மிகவும் சன்னமான நடையில் நீங்கள் எழுதியிருக்கும் ரயில் சிநேகவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தது.


  2. நன்றி, உதயகுமார்.
    உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.
    தொடர்ந்து எழுத முனைகிறேன்.

Comments are closed.