திண்ணை.காம்

கணிதமேதை வீட்டுத் திண்ணைஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது.

கடைசியில் தமிழ் மொழி என்கிற தனிப்பொருளுக்கு வந்து சேர்ந்தவுடன்தான் இருவருக்குமே உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது. அதுவும் பேட்டிகண்ட அம்மையாருக்குத் தோன்றிய உணர்ச்சி வேகத்தில் அவர் இராஜாராம் அவர்களைப் பேசவிடாமல் இடையிடையே புகுந்து, ஊற்றெடுக்கும் தன் கருத்துக்களை மேலேற்றி முத்தாய்ப்பிடுவதைக் காணமுடிந்தது.

“எப்படி இவ்வளவு தெளிவாக, அழகாக தமிழைப் பேச உங்களால் முடிகிறது?”

“நான் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வெளியே இருந்ததுதான் காரணமோ!”

இப்படித் தொடங்கியது இந்த இழை. சமீப காலத்தில் தமிழுக்கு எதிராகவே ஒரு இயக்கம் நடந்ததாக இராஜாராம் அவர்கள் விசனப்பட்டார். மேலும் வேண்டுமென்றே தேவையில்லாத இடங்களில் கூட ஆங்கிலம் கலந்து உரையாடுவது ஒரு பழக்கமாகி விட்டது என்பதையும், கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் இதுபோல் கிடையாது என்பதையும் வருத்ததுடன் தெரிவித்தார். இது “கமர்ஷியலாக” நடத்தப்படும் பத்திரிக்கைகளின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்றும் கூறி மிக உணர்ச்சிவசப்பட்டார். ஆனால் இருவரும் ஆங்கில மொழிச் சொற்கள் கலக்காமல் பேச எல்லோரும் முயற்சி செய்யவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களறியாமல் சில ஆங்கிலச் சொற்கள் வந்து விழுந்ததைக் காணமுடிந்தது. அந்த அளவுக்கு அதன் தாக்கம் வேரோடிப் போய்விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்!

வேலைக்காக ஆங்கிலம் கற்பது தவறு என்பதும், தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர்கள் வாழமுடியும் என்பதும் அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள்.

கடைசியில் அந்த அம்மையார் தன் அதிர்வுக்குரலில் நேயர்களை தயவு செய்து தமிழை தழைத்தோங்கச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளிட்டு விடை கொடுத்தார்.

2 Comments

Comments are closed.