உங்களைப் பாக்கவே முடியலை!

முதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம்: “இரயில் பயணங்களில் பிரபலமான மனிதர்களை விட சாமான்ய மனிதர்களுடன் நேரும் அனுபவங்கள் இன்னும் சுவாரஸ்யமானவை”. ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் எதிர்வரும் இதழ்களில் எழுதுகிறேன்.

Indian rail passengersஒருநாள் எனக்கு யார் கண்ணிலும் படாமல் திருச்சியிலிருந்து இரவு இரயிலில் சென்னை செல்லவேண்டி நேர்ந்தது. சாதாரண பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்படாத (unreserved) பொதுப் பெட்டியில் ஏறி சாமான்களுக்கான பலகையில் ஏறிப் படுத்தேன். சளசளவென்று கூட்டம், இறைச்சல். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். பரிசோதகர் வந்தால் கையை மட்டும் நீட்டி டிக்கட்டை காண்பித்தால் போகிறது என்றெண்ணி மூக்கை விடுத்து முகத்தையும் மூடிக்கொண்டேன்.

மணி இரவு பதினொன்றைத் தாண்டியவுடன், இடத்துக்குச் சண்டை போட்டவர்கள் கூட ஒருவர்மேல் ஒருவர் முட்டிக் கொண்டும், இடித்துக் கொண்டும் ஆளாளுக்கு கோழித்தூக்கத்தில் ஆட ஆரம்பித்தார்கள். நானும் சற்றுக் கண்ணயரலாமென்றால் காத்தாடி சுற்றவில்லை. இது போன்ற சூழ்நிலையில் எல்லோரும் பயன்படுத்தும் ஆயுதமான “கட் பாக்கெட்” சீப்பை எடுத்து ஃபேன் பிளேடுகளைத் தட்டி உசுப்பிவிட்டபின் ஒரு வழியாக ஏகப்பட்ட சிணுங்களுடன் சுழல ஆரம்பித்தது. சரி, கொஞ்சம் கண்ணை மூடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வண்டி ஏதோ ஒரு ஊரில் நின்றது. யாரோ ஏறினார்கள். இரண்டு மூன்று பேரிருக்கும். ஏறும்போதே சத்தம் போட்டுப் பேசிக்கொண்டே உள்ளே வந்தார்கள். ஏற்கனவே கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஓரிருவர் புதிதாக நுழைந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் போல. ஒருவர் ஒரே சந்தோஷத்துடன் “வாங்க வாங்க, பாத்து எவ்வளவு நாளாச்சு. மறுபடி உங்களைப் பார்க்கவே முடியாம போயிடுமோன்னு நெனைச்சேன். இப்ப திடீர்ன்னு பார்த்தது ரொம்ப சந்தோஷமாயிருக்கு” என்று சத்தம் போட்டு முகமன் கூறியபிறகு பல விஷயங்களைப் பற்றிப் பேசத்தொடங்கினர். பெரும்பாலும் அரசுத் துறைகள் சிலவற்றில் உள்ள குறைபாடுகளைப் பற்றியே பேச்சு சுற்றிச்சுற்றி வந்தது. “நமக்கு வரவேண்டிய போஸ்டெல்லாம் வேற கேடகரீக்கு போகுதே, இதை நம்ப விடக்கூடாதுங்க” என்றும் இன்னும் சில செயல்பாடுகளைப் பற்றிய அவர்களின் புகார்கள், குறைகள் போன்றவற்றைப் பற்றிப் பேச்சு, பேச்சு, ஓயாத பேச்சு. சிறிது நேரத்தில் வண்டியின் “க்ளிக்கட்டீ கிளிக்”குடன் இந்த இரைச்சலும் சேர்ந்துகொள்ளவே, இதற்கு காது பழக்கமாகி, லேசாக தூக்கம் பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் பேசும் சத்தம் ஏற்ற இறக்கமாக இருந்தபடியால், அடிக்கடி விழிப்பு வந்தவண்ணம் இருந்தது.

“மெட்ராஸிலே எங்க தங்கப் போறீங்க, மாரிமுத்து கூடவா?”

“மறுபடி எப்போ பாக்கலாம்?”

சரி, இதுக்குமேல் தாக்குப் பிடிக்கமுடியாது. இறங்கிப் போய் அவர்களை ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான். “ஏன் இப்படி இறைஞ்சு கத்தறீங்க. மெதுவாகப் பேசக்கூடாதா” என்று சூடாகக் கேட்டுவிடவேண்டியதுதான் என்று கருவிக்கொண்டு கோபத்துடன் இறங்கி, யாரையும் மிதித்துவிடாதபடி கவனமாகத் தாண்டி, கதவுப் பக்கம் வந்தேன்.

அப்படியே உறைந்து நின்றேன். ஆம், நான் செய்ய நினைத்த செயலை என்ணி வெட்கப்பட்டு நின்றேன்.

அவர்கள் எல்லோரும் கண் பார்வை இல்லாதவர்கள்!