பேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது.
பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் பல பாதிக்கப் பட்ட நாடுகளில் நடந்திருக்கின்றன. பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த சிறுமிகள் இலங்கையில் கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும், அவர்களுக்கு வழங்கப் படுவதற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் பல இடங்களில் திருடப்பட்ட கதைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தாய்லாந்தில் ஹோட்டல் அறைகள் சூறையாடப்பட்டன. ஸ்வீடன் நாட்டின் மக்கள் பலர் இந்த ஊழ் அலைகளால் மாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களின் உடைமைகள் திருடப்படுவது அந்நாட்டில் நிகழ்வதால், உயிர்ச் சேதம் பற்றிய முழுத்தகவல்களையும் அந்நாட்டு அரசு வெளியிடாமல் வைத்திருக்கிறது. அதன் அண்டை நாடான நார்வேயிலும் இதே நிலை தான்.
மேலும் சில வக்ர புத்திக் காரர்கள் உதவி நிறுவனக்கள் போலவே பொய் ஈமெயில்கள் மூலம் பணம் திரட்டுகிறார்கள். இறந்தவர்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். வங்கி சேமிப்புகள், காப்பீட்டுத் தொகை முதலியவற்றை ஏமாற்றி அள்ளிக் கொண்டுபோக இது போன்ற முயற்சிகள் நடக்கின்றன. இன்னும் பலர் தங்கள் பெயரை பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலில் எப்படியாவது நுழைத்து விட்டு, அரசும், வேறு பல தொண்டு நிறுவனங்களும் அளிக்கும் ரொக்கம் மற்றும் வேறுவகை நிவாரணங்களையும் கொள்ளை கொண்டுபோகும் பலே பேர்வழிகளும் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிகிறோம்.
இது போன்ற மனிதர்கள் பிறக்காமலிருக்க Genome project முடிவுறும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்!
சமீபத்தில் நாகை சென்று வந்துள்ள என் நண்பர் அங்குள்ள நிலவரத்தைக் கூறினார். மீனவர்கள் தங்கள் முயற்சியால் பெரும் பொருள் ஈட்ட முடிந்தவர்களாக விளங்கினார்கள் என்பதை அவர்களே பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். தேவைகளுக்குப் போக மிஞ்சிய செல்வத்தை மீனவக் குடும்பப் பெண்கள் தங்க நகைகளாக கழுத்திலும் காதிலும் அணிந்து கொண்டிருப்பார்கள். இதை நன்கு அறிந்திருந்த பாவிகள் பலர் நிவாரணம் செய்கிறேன் என்கிற போர்வையில் பல மீனவ கிராமங்களில் புகுந்து தாம்புக்கயிறு சங்கிலிகள் பலவற்றை களவாடி விட்டனராம். பாதுகாப்பில்லாத நிலையிலிருந்த பெண்களின் தோடுகளைக் கூட விட்டுவைக்க வில்லையாம் இவர்கள்.
இது தவிர, நாகப்பட்டிணம் பக்கம் மூடப்பட்டுள்ள கடைகளையும் வீடுகளையும் உடைத்து சூறையாடியிருக்கிறார்கள். இதனால் அங்கு கடைகளைத் திறக்க பலர் தயங்குகிறார்கள். வெளியூரிலிருந்து லாரிகளில் பொருட்கள் பலர் ஏற்றி வருவதைக் கண்டு, அவற்றை வழியிலேயே மடக்கி, பொருட்களை சுட்டு விடுகிறார்களாம்.
வேளாங்கண்ணிப் பகுதியில் ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் பாதிக்கப்பட்ட இன்னொரு ஊராகிய நாகூரில் உயிரிழப்பு இருந்ததா இல்லையா என்பது பற்றி எந்த வித செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இரெயில் நிலையம் தாண்டி தர்கா அருகாமை வரை கடல் நீர் வந்திருக்கிறது. அங்கும் சுற்றுலாப் பயணிகள் அந்த நேரத்தில் இருந்திருக்கிறார்கள். அங்கு உயிழப்பு ஒன்றும் ஏற்படாமலிருந்தால் நிம்மதிதான்!