நம் கண்ணிலும் கருத்திலும் அடிக்கடி தென்படாத விஷயங்கள் சரியான தருணத்தில் நினைவுக்கு வராமல் போய்விடும். ஆகையால்தான் எல்லோரும் நன்கறிந்த ஹார்லிக்ஸ் முதலானவற்றை மீண்டும் மீண்டும் உரக்க விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுபோல, நம் வாழ்வின் அடிப்படையான பல பொருட்களில்கூட அலட்சியமாக இருக்கிறோம்.
இத்தகைய எண்ணப்போக்குக்கு எடுத்துக்காட்டாக நாம் உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியத் தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்வோம். பல நேரங்களில் இது தேவையென்பதையே பலர் கருத்தில் கொள்வதில்லை. இல்லாவிட்டால் எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிக்கொண்டு புகை பிடிப்பார்களா?
எனக்கு ஒரு மேலதிகாரி இருந்தார். அவருடைய அறையில் இருபிரிவு குளிர்சாதன அமைப்பு பொருத்தப் பட்டிருந்தது. ஆகையால் வெளிக்காற்று உட்புக வாய்ப்பேயில்லை – கதவைத் திறக்கும் நேரம் தவிர. அவர் சிகரெட் கம்பெனிகளை அதிக லாபம் ஈட்ட வைப்பதே தன் வாழ்வின் முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டவர். அவர் விடும் “குப் குப்”கள் அறையைச் சுற்றி சுற்றி வந்து, உடன் அமர்ந்திருப்பவர்களின் மூச்சுக்காற்றில் கலந்து அவர்களை தவிர்க்க இயலாத (துணைவினை) புகையிழுப்பாளர்களாக ஆக்கிவிடும். ஒருமுறை அவருடன் ஒரு உரையாடலுக்காக சென்றிருந்த போது, அவரிடம், புகை பிடிப்பதை நிறுத்தும்வரை அவருடைய அறைக்குள் வர முடியாது என்று தீர்மானமாக சொல்லவேண்டி வந்தது. “நான் உள்ளிழுக்கும் காற்றை மாசுபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை” என்பதை உறுதியாக அவர் மனதிலாழ்த்தியபின் தான் அந்தப் அப்பழக்கத்தை நிறுத்தினார்.
ஒருமுறை மைசூரிலிருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. இரவு நேரம். காற்று பலமாக இருந்தது. மக்கள் எல்லோரும் அனைத்து ஜன்னல்களையும் திறைபோட்டு மூடிவிட்டார்கள். பிறகு பார்த்தால் பஸ் முழுவதும் “மூட்டம்” போட்டது போன்ற புகை மண்டலம். என்னவென்று பார்த்தால், நான்கைந்துபேர் சுமார் அரை அடி நீளமான சுருட்டை பிடித்துக் கொண்டு கரிவண்டி போல் புகையைக் கக்கிக் கொண்டிருந்தனர். கண்டக்டர் கண்டுகொள்ளவேயில்லை. நான் எவ்வளவு முறை கேட்டுக் கொண்டும் அவர்கள் புகைவிடுவதை நிறுத்துவதாக இல்லை. நாம் உள்வாங்கும் மூச்சுக் காற்று சுத்தமாக இருக்கவேண்டும். உயிர்வாழ ஆக்ஸிஜன் வேண்டும் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஒன்றும் பயனில்லை. பயணிகள் பெரும்பாலோரும்கூட இதனை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. அவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் அறிவு புகட்டும் ஆசானான திரைப்படங்களில் இதுபோல் ஏதும் சொல்லவேயில்லையே, இந்தக் கிறுக்கன் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பிதற்றுகிறானே, என்று எண்ணினார்கள்போலும்! பிறகு, என் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளைஞனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, அந்த புகை வண்டிகளில் (நோஞ்சானாக) ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் வாயிலிருந்து சுருட்டைப் பிடுங்கி அணைத்து வெளியே எறிந்துவிட்டு, ஓட்டுனரை காவல்நிலையத்துக்கு வண்டியை விடச் சொன்னேன். பிறகு “காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றம். சிறைவாசம் நிச்சயம்” என்று உரக்கக் கூறியபின், ஏனையோர் சற்றே சுணக்கதுடன் சுருட்டை “அமித்தி” காதில் சொருகிக் கொண்டார்கள்.
இதே உளப்பாங்கு பொதுவாக நிரம்பி இருப்பதால்தான், ஒருமுறை பெரிய அறை ஒன்றில் தங்க வைக்கப் பட்டிருந்த யாத்திரிகள் பலர் குளிராக இருந்ததன் காரணமாக எல்லா கதவுகளையும் மூடிவைத்துவிட்டு சூட்டுக்காக “கணப்பு” ஏற்றிவைத்து தூங்கப் போனார்கள். காலையில் எழுந்தால் பாதி பேர் மூச்சுவிட மறந்துபோனார்கள். சமீபத்தில்கூட இத்தகைய நிகழ்வு நடந்திருக்கிறது.
இதனால் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் அவசியம் வாழ்வியல் பற்றிய கல்வி, சமுதாயக் கண்ணோட்டத்துடன் எவ்வாறு ஒழுகுதல் போன்றவை போதிக்கப்பட வேண்டும். தவிர, எல்லா ஊடகங்களும் இத்தகைய உண்மைகளை அடிக்கடி வலியுறுத்தும் தொண்டினை ஆற்றவேண்டும். நம்மில் பலருக்கு சாலையை எவ்வாறு (சரியான முறையில்) கடக்க வேண்டும் என்பது போன்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சாலையில் செல்லும்போது எச்சில் துப்பினால் என்ன தவறு என்று வினவும் பலரைக் கண்டிருக்கிறேன். இத்தகை நடத்தைகளைப் பற்றி இவ்வலைப்பதிவின் தொடக்கத்திலேயே என் எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
எப்படி வேண்டுமானால் வாழலாம் என்கிற மனப்பான்மைதான் நம் சமுதாயத்தில் மேலோங்கி நிற்கிறது. நாம் மீண்டும் பழைய கற்காலத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது!
Permalink
“ஊட்டம்” நுழைய மாட்டேங்குதுன்னு கவிதாயினி சொல்றாங்க.
அதனால “நோட்டம்” பாக்கறேன்!
Permalink
சோதனை மேல் சோதனை!
Permalink
http://madhumithaa.blogspot.com/2006/01/blog-post_13.html
இப்படிதான் ‘எங்கே எந்தன் காற்று’-ன்னு
பாட வேண்டியதுதான்
Permalink
கடைசியில் வைக்க வேண்டிய
கொள்ளி
இப்போதே தானே தன் வாயில்
கலிகாலம்