"பிரபாகரன் உயிருடன் உள்ளார். அவரது குரல் எப்போது ஒலிக்க வேண்டுமோ அப்போது அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார்."
மதிமுக தலைவர் வைகோ திருப்பரங்குன்றத்தில் பிரபாகரனைப் பற்றி இவ்வாறு பேசியுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப் படித்த உடனே, “இந்த ஆள் சும்மா கதை உடராறய்யா. உயிரோட இருந்தா வெளியில வரவேண்டியதுதானே. சரி, உயிரோடு இருப்பது இவருக்குத் தெரிந்திருந்தால் அவர் எப்போது வருவார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதுதானே?” என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
அதற்குப் பதிலாக வைகோ அவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டு, அவைகளுக்கு எப்போது பதில் கிட்டுகிறதோ அப்போது பிரபாகரன் எப்போது வெளியே வருவார் என்னும் உங்கள் கேள்விக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்!
இதோ அந்தக் கேள்விகள்:-
- போஃபோர்ஸ் ஊழலில் தொடர்புள்ளவராகக் கருதப்படும் இத்தாலிய தொழிலதிபர் ஓட்டோவியோ குவாட்ரோக்கி எப்போது பிடிபடுவார்?
- பார்லிமெண்ட் கட்டிடத்தில் குண்டு வைத்ததற்காக தூக்கு தண்டனை பெற்றிருக்கும் அஃப்ஸல் குரு எப்போது தூக்கிலிடப்படுவார்?
- மும்பையில் பல அப்பாவி மக்களை சரமாறியாக சுட்டுக் கொன்ற கசாபின் வழக்கு எப்போது முடிவடையும்?
- ராஜீவ் காந்தி கொலையில் அரசியல் பின்னணி மற்றும் சதி பற்றிய உண்மைகள் எப்போது வெளிவரும்?
- ரஜனிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்?
- காளான்களைப் போல் தோன்றியுள்ள செய்தி டிவி சானல்களில் பெண் அறிவிப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பவர்கள் பேசும் மொழி என்ன?
- கென்னடியைக் கொன்றது யார்?


![Validate my RSS feed [Valid RSS]](/wp-images/valid-rss.png)
சமீபத்திய மறுமொழிகள்