‘என்ன நடக்குது இங்கே’ வகைசார்ந்த இடுகைகள்

திரை விலகுமா?

என்ன நடக்குது இங்கே :: 5 மறுமொழிகள் »

சென்ற வாரம் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தலைமை தாங்கியவர் ஒரு மூத்த அரசுத்துறை அதிகாரி. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? நடிகர் விவேக். நிகழ்ச்சி தொடங்கி வெகு நேரம் கழித்து, வரவேற்புரையெல்லாம் கடந்து, அந்த அரசு அதிகாரி தன் உரையை வாசித்துக் கொண்டிருந்தபோது மிகவும் ஆர்ப்பாட்டமாக வந்தார் விவேக் - ஒரு கசமுசா சட்டை, குள்ளமான உருவம், முழு மேக்கப், மேடையில் ஏறியபின் ஒரு பெரிய கும்பிடு!

அந்த அதிகாரி பாவம். அவர் தயாரித்து வந்திருந்த உரையை ஏராளமான புள்ளி விவரங்களுடன் படித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்வையாளர் மத்தியிலிருந்து தொடர்ந்து கைதட்டல்கள். "ஓ" என்ற இரைச்சல். அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் பேச்சில்தான் ஏதோ குறை என்றெண்ணி "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். புள்ளிவிவரங்கள் அவ்வளவாக சுவாரஸியமாக இருக்காதுதான். ஆனாலும் என் கடமையைச் செய்யவேண்டாமா" என்று கூறிவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மீண்டும் கைதட்டல், கூச்சல், "விவேக் பேசட்டும்".

ஆச்சு, அந்த ஆளை விரட்டியாயிற்று. அவரும் "கிரைண்ட்" பண்ணிக் கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம். விவேக் மைக்கைப் பிடித்தார். "என்னை வாழவைக்கும் ரசிகப் பெருமக்களே!" - பெருத்த கரகோஷம். முதலில் தனக்குமுன் பேசியவரை மறைமுகமாக கிண்டலடித்தார், "என்ன, ரொம்ப நொந்து போயிருக்கீங்களா? அன்ரிஸர்வ்டுல பிரயாணம் பண்ணினவங்க மாதிரி களைச்சுப் போயிருக்கீங்க". பிறகு அரதப் பழசு இரெயில்வே சம்பந்தமான ஜோக்குகள் சிலவற்றை தட்டுத் தடுமாறி உதிர்த்தார். பிறகு எங்கே விட்டுவிடுவாரோ என்று நினைத்த "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" அயிட்டத்தையும் அவிழ்த்து விட்டார். பிறகு? பிறகென்ன, கைவசம் சரக்கு அவ்வளவுதான். "எனக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள், நல்ல உள்ளங்களே" என்று விளம்பரம் வைத்தார். சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லி, ஒரே சொதப்பல்தான்.

இதிலிருந்து நம் மக்களுக்கு தெளிவாக ஒன்று புரிதல் வேண்டும். நடிகர்களுக்கு வரும் புகழுக்கு முக்கிய காரணம், வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களின் முக்கிய பங்களிப்புதான். அவர்கள் இல்லையெனில் இவர்கள் வெறும் ஓட்டைக் காலணாதான்! ஆனால் நம் மக்கள்தான் சினிமா நடிகர்களின்மேல் உள்ள மோகத்தில் மயங்கியிருக்கிறார்களே! அன்று பல சின்னஞ்சிறிசுகள் விவேக் என்ன உளறினாலும் சிரிப்பு என்று மயங்கி நின்றதைக் கண்டேன். அவரைக் "கண்ணால் காண்பதே எங்கள் பாக்கியம்" என்று முண்டியடித்துக் கொண்டு ஓடினார்கள் பலர்.

என்று வரும் இவர்களுக்கு விவேகம்?

:: (பார்வை 1014 முறை) ::

மாறினேன், மாறினேன்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

அப்பாடா!
ஒரு வழியாக b2Evolution-லிருந்து Wordpress-க்கு உஜாலாயிட்டேன்!

முதலிலேயே Wordpress-க்கு போய் குடியேறியிருக்கலாம். ஆனால் ஒரு வீம்புக்காக b2Evo-வுக்குத் தாவினேன். ஆனால் Wordpress செயலியின் வளர்ச்சி மின்னல் வேகம்! அதை பல மென்பொருள் வல்லுனர்கள் தினமும் அமுலும், சத்துணவும் போட்டு போஷாக்களித்து வருகிறார்கள். இந்த நிமிடம் வரை அந்த திறந்த நிரல் செயலியின் சமீபத்திய 1.5-என்ற பதிப்பினை 76,551 தடவை தரவிறக்கியுள்ளனர். பலவித plugins, themes, hacks இது போன்றவற்றை மென்பொருள் ஆர்வலர் பலர் உருவாக்கி அளித்து வருகின்றனர். ஆகையால் நானும் குதித்துவிட்டேன். முதலில் ஆங்கிலத்தில், இப்போது தமிழிலும்!

முதலில் அந்த செயலியின் முகப்புச் சொற்களை தமிழில் மொழியாக்கம் செய்ய முற்பட்டேன். l10n, .pot, .po, .mo, poedit என்று புகுந்து புறப்பட்டு, ஒரு வழியாக "தமிழ்(+ஐ)ப் படுத்தி"விட்டேன்! இனிமேல் உங்கள் பாடு!

இது தவிர, b2evo-வில் குடியிருந்த பதிவுகளின் சேர்க்கையை Wordpress-ன் database-க்கு கொண்டுசெல்வது ஒரு பிரசவ வேதனை. அதோடு சேர்ந்து css வேறு சதி செய்தது. "இடது மிதவை", "வலது தொங்கல்" (float: left, float: right) போன்ற குட்டிச் சாத்தான்களின் விஷமம் தாங்க முடியவில்லை. எழுத்துருக்களின் அளவை கொஞ்சம் பெருக்கினால், வலது ஓரத்தில் சமத்தாக ஒண்டுக் குடித்தனம் இருக்க வேண்டியவை யெல்லாம், "பப்பரக்கா"வென்று பாதாளத்தில் விரித்துக் கொண்டு கிடந்தன! "தணல் நரி"யில் நேராகத் தெரிகிறதே என்று பெருமூச்சு விட்டால் அண்ணன் ஐ.ஈ-யில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறிவிடுகிறது. ஏதேனுமொரு் பிற்சேர்க்கையைச் சேர்த்தால் வேறொன்று பிணங்கிக் கொள்கிறது - "சுருட்டுப் பாயும், முரட்டுப் பெண்ணும்" என்பது போல ;)

ஒருபாடாக எல்லாவற்றையும் தட்டிக்கொட்டி சரி செய்து உங்கள்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறேன்.
இந்த முயற்சியில் எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் காசி, நவன் பகவதி இருவருக்கும் நன்றி!

:: (பார்வை 931 முறை) ::

அரியின் அனுமன் அறிமுகம்

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

அரிய முகங்களின் அறிமுகம் எனக்குக் கிட்டிய அருமையான மாலைப் பொழுது!

ஆம், கிழக்குக் கடலோர மணற்பரப்பில், கிழக்குப் பதிப்பகத்தார் சார்பில் நிகழ்ந்த "அனுமன் வார்ப்பும் வனப்பும்" என்ற நூலின் அறிமுகக் கூட்டம் நடந்தேறியது.
புத்தக அசிரியர், "இணையத் தமிழ் ஆசான்", "மரபுக் கவிதை மாவீரர்", "ஹரியண்ணா" என்று அன்புடன் அழைக்கப்படும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுடன் கலந்துரையாடலும் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து எனக்கு இரண்டு மடல்கள் அனுப்பினார் பாரா அவர்கள். ஆனால் அவற்றிற்கு பதில் எழுதாமல் இருந்து விட்டேன். நிச்சயமாகச் செல்வது என்று முடிவு செய்து விட்டதால், பதில் எழுதத் தோன்றவில்லை. ஆனால் அது பெரிய தவறு என்பது அவரைச் சந்தித்த பின் தான் தென்பட்டது. அவர் என் வலைத் தளத்தினுள் புகுந்து எல்லாப் பகுதிகளையும் முழுமையாகப் படித்து விட்டு வந்து என்னை மனம்விட்டுப் பாராட்டினார். நான் அந்த அறிமுகத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பி அழைத்திருந்தார். மணிக்கணக்காக வலையில் மேய்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு இரண்டு வரி எழுதி அனுப்பியிருக்கலாம். இனி கண்ணியம் காக்க வேண்டும் (Netiquette - 'Thou shalt reply all emails sans spam') என்று மெரீனா கடற்கரையில் தீர்மானம் செய்துகொண்டேன். இது கடற்காற்றிலோ, கடல் நீரிலோ கரைந்து போவதல்ல - ஹும்ம்ம்!

காந்தி சிலை அருகே மற்றவர்க்காகக் காத்திருந்த நேரத்தில் பத்ரியும் மதுரபாரதியும் இன்டெர்னெட்டின் தாக்கத்தையும், மற்றும் அதன் நீட்சியின் தேக்கத்தையும் பற்றி உரையாடினர்.

பின் மணற்பரப்புக்குச் சென்று சுண்டல், பஜ்ஜி வகயறா மற்றும் பலவகை கூச்சல்கள், இரைச்சல்கள் நடுவே வட்டம் போட்டு அமர்ந்து வாசகர் வட்டம் அமைத்தோம். ஆனால் சுண்டல் பையன்கள் எங்களை வட்டமிடுவதைத் தடுக்க முடியவில்லை. முருகன் அவர்கள் தன் பேச்சிடையே இவ்வளவு சிறிய பையன் சுண்டல் விற்று வயிர் வளர்க்க வேண்டியிருக்கிறதே என்று விசனப் பட்டார்.

இரா, முருகன் அவர்களும் மதுர பாரதி அவரகளும் நூலைப் பற்றியும், ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் கருத்துச் செரிவுடன் பேசினார்கள். ஆங்காங்கே ஹரியும் விளக்கங்கள் கூறினார்.

முருகனும், மதுரபாரதியும் ஹரியின் நூலின் நடையைப் பற்றிக் குறிப்பிட்டு, அது மிக எளிமையாக இருக்கிறது, இலக்கியமே தெரியாத பாமரனுக்குக் கூட தெளிவாகப் புரியும்படி அமைந்திருக்கிறது என்று கூறினார்கள். அப்போதுதான் புரிந்தது என்னை ஏன் அங்கு அழைத்திருந்தார்கள் என்பது!

வால்மீகியை விட கம்பன் இன்னும் ஆழமாக பாத்திரங்களின் பரிமாணத்தை விரிவு செய்திருக்கிறார் என்றும், அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வரும்போது கால மாறுபாட்டை (change of time zone) கம்பன் விவரித்திருப்பது அவனுடைய அறிவியல் கண்ணோட்டத்தை காண்பிக்கிறது என்பதையும் ஹரி உணர்ச்சியுடன் விளக்கினார். இலங்கைத் தீவும் இமைய மலையும் ஒரே நேர்க் கோட்டில் இருப்பதால், அவற்றின் longitude ஒன்றாக இருக்கும் என்று வாஞ்சிநாதன் எடுத்துக் காட்டினார் என்றும், அதனால் ஹரி, நம் கூகிள்நாதனின் உதவியுடன் "மேரு மலை" ஆப்பிரிக்காவின் "கிளி மாஞ்சாரோ" மலைத் தொடரில் இருக்கக் கூடும் என்று அறிந்ததாகவும் விளக்கினார்.

முருகன் அந்த நூலை முழுதும் படித்திருந்தார். நிறைய மேற்கோள்கள் காட்டிப் பேசினார். மதுரபாரதி தனக்கும், ஹரி அவர்களுக்கும் உள்ள வெகுநாள் நட்பையும் ஆதி நாட்களில் இலக்கியம் கற்ற சிறப்புக்களைப் பற்றியும், அவர் ஹரியை எழுதத் தூண்டியதையும் நினைவு கூர்ந்தார்.

அனுமனைப் பற்றி நான் சிந்திப்பது, பெருமாள் கோயில் செல்லும் போதும் communication பற்றி கூட்டங்களில் பேச முற்படும்போதும் தான். அனுமன் ஒரு communication expert. எனக்குத் தெரிந்த ஒரே வரி கம்ப இராமயணத்தில் இதுதான் - "கண்டேன், கற்பினுக்கரசியைக் கண்டேன்". இதற்கு பலவிதமான விளக்கங்களையும் அவ்வப்போது கொடுத்து வந்திருக்கிறேன். (அது இப்போ வேண்டாமே!)

ஆனால் சாதாரணமாக மற்ற கடவுளர்களைப் பற்றி கொஞ்சம் கொச்சையாக விமரிசிப்பவர்கள் கூட அனுமனிடம் சிறிது ஜாக்கிரதையாகப் பேசுவர். அனுமன், இராகு, சனி போன்ற கடவுட்களிடம் பொதுவாக மக்கள் பயத்துடன் இருப்பர்.

இராமாயண கதா பாத்திரங்களில் அனுமனைத் தொடர்ந்து மற்றவர்களைப் பற்றியும் ஹரி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்; அவற்றை கிழக்குப் பதிப்பகதார் வெளியிட வேண்டும் என்று அன்பர் அனைவரும் வேண்டிக் கொண்டனர்.

முடிவாக பத்ரி அவர்கள், தான் எப்படி ரா.கா.கி-யின் அறிமுகத்தால் தமிழ்ப் புத்தக பதிப்புத் தொழிலில் இறங்கினார் என்பதையும் தங்கள் எதிர்காலத் திட்டங்களையும் பட்டியலிட்டார். கிழக்குப் பதிப்பகத்தார், நல்ல content மற்றும் packing - உடன் நூல்களை வெளியிடுகிறார்கள், எழுத்தளர்களுக்கு ராயல்டியை தவறாமல் வழங்குகிறார்கள் என்பதையும் பலர் பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.

அனுமனின் துதியில் நாம் வேண்டிக் கொள்வது, புத்தி, பலம், யஸஸ்(செல்வம்), தைரியம், பயமின்மை, உடல் நலம், மனத் திண்மை, சொல்வன்மை இவையெல்லாம் அனுமன் நமக்கு அருளட்டும் என்பதுதான். அவை அனைத்தும் ஹரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வீடு திரும்பினேன். வரும் வழியில் மதுரபாரதியுடன் உரையாட வாய்ப்புக் கிடைத்தது ஒரு போனஸ்.

இகாரஸ் பிரகாஷ், வள்ளியப்பன், இரு பெண் கவிஞர்கள், சுவடு சங்கர், தேசிகன், அருட் செல்வன், அரவக்கோன், சந்த வசந்தம் அதிபர்,……… முக்கியமான யாரையாவது விட்டு விட்டேனா? மன்னியுங்கள். இப்போது மணி நள்ளிரவு 12.

ரோல்காலுடன் போட்டோக்களும் பத்ரி போட்டுவிடுவாரே. பார்க்கலாம்.

:: (பார்வை 820 முறை) ::

வோர்ட்பிரஸ் 1.5 ஒரு ஜாக்பாட்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

வோர்ட்பிரஸ்
Wordpress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது.

ப்ளாக்கர் போன்ற சேவைகளை பாவிக்காமல் நீங்களே உங்கள் வலைத்தளத்தை குடியேற்றி நிரல்களின் செயல்படுத்த இயலுமானால் இந்த வோர்ட்பிரஸ் ஒரு வரப்பிரசாதம்.

நவன் பகவதியின் வலைப்பூ மற்றும் என் ஆங்கில சோம்பேரிப் பின்னல்கள்முதலியன இந்தக் கோப்பின் மூலம் இயக்கப் படுபவை.

மேல்விவரம் வேண்டுமானால் ஒரு கூச்சல் போடுங்கள்!

:: (பார்வை 789 முறை) ::

வலையில் சுட்ட பழம்

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

என் நண்பரொருவர் தன் வலைப்பூவில் ஒரு புகைப் படத்தை இன்னொரு வலைத் தளத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தார். அதில் ஒரு சைக்கிள் போட்டி வீரரின் படம் இருந்தது. அவருடைய கைத் தசைகள் முறுக்கேறி நிற்பதைத் துல்லியமாக அந்தப் படம் காண்பித்தது. அந்தப் படத்தை எடுத்தவரின் திறமையைப் பாராட்டி இரண்டு வரி எழுதி அந்தப் படத்தைத் தன் பதிவில் இட்டிருந்தார் என் நண்பர். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் சம்பந்தப்பட்ட புகைப்பட நிபுணர். "என் படத்தை உங்கள் பதிவில் போடாதீர்கள், எடுத்து விடுங்கள் - ஏனென்றால் அதனைப் போடுமுன் என் ஒப்புதலை நீங்கள் பெறவில்லை" என்றார். என் நண்பர் உடனே அதை எடுக்காமல், "என் தளம் வணிகம் சார்ந்தது அல்லவே. வெறும் வலைப்பூதானே, அதில் போட்டாலென்ன" என்று பதிலுரைத்தார். ஆனால் அந்த படக்காரரோ, "முதல் தவறு, என்னிடம் உரிமை பெறாமல் எடுத்துப் போட்டது. இரண்டாவது அதனை எடுக்கச் சொல்லியும் எடுக்காதது. மூன்றாவது ஒரு பொய் - உங்கள் தளத்தில் கூகிள் விளம்பரங்கள் வருகின்றன; அதனால் அது வணிகம் சார்ந்ததாகிறது. உடனே அந்தப் படத்தை எடுக்காவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" என்று எச்சரிக்கை விடுத்தார். அந்தப் படமும் "டாடா" சொல்லி விட்டது.

சமீபத்தில்கூட தமிழ் வலைப் பதிவுகளில் எழுந்த ஒரு சலசலப்பைப் பற்றிப் படித்தேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அருங்கலைகளைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் அது. அவரே பதிப்பித்துள்ளார். அதில் முதலிரண்டு பக்கங்களிலேயே (முன்னுரை, முகவுரை முதலியன) தெளிவாக ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து விட்டார், "இந்தப் புத்தகத்தில் அடங்கிய அனைத்து விஷயங்களும் பல இணைய தளங்களிலிருந்து எடுக்கப் பட்டன" என்று!

அந்தப் புத்தகம் விலைக்கு விற்கப் படுகிறது. It is a commercial venture. அதனால் நான் அவரிடம், "இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் யாரேனும் அந்த வலைத்தள உரிமையாளர்களிடம் போய்ச் சொன்னால் அதனால் பிரச்னை வராதா" என்று கேட்டேன். அதற்கு அவர், "எப்போ இண்டெர்னெட்டில் போட்டார்களோ அதிலிருந்து அவை public domain-ஐச் சேர்ந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்து ஆளலாம்" என்றார். அவரின் கூற்று சரியல்ல என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மேற்கொண்டு வாதம் செய்யவில்லை. இணையத்தில் ஒரு வலைப் பக்கத்தின் வரைவைக் காப்பியடித்ததற்கே பலர் நீதிமன்றம் சென்றிருக்கும் கதைகள் தெரியும். Copyright மற்றும் IPR விஷயத்தில் மேலை நாடுகளில் மிகவும் விழிப்புடனும் வேகத்துடனும் இருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். சாதரணமாக எல்லோரும் பாடும் பிறந்த நாள் வாழ்த்தான "Happy Birhthday to you" பாட்டை commercial-ஆகப் பாட வேண்டுமானால் அதன் பதிப்புரிமை வைத்திருப்பவர்களிடம் $500 செலுத்தி ஒப்புதல் பெறவேண்டும் என்பார்கள்!

இந்தப் புத்தக விஷயத்தில் இனிமேல் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன். அவருக்கு உதவியாயிருக்கும்!

:: (பார்வை 870 முறை) ::

தோலினுள் நுழைந்தது துகள், தொலைந்தது இவ்வுலகம்!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

"சிக்"கென்ற "சிப்"! "வெரிசிப்" என்று அழைக்கப்படும் ஒரு சில் துகளை ("VeriChip", a miniaturised, implantable radio frequency identification device (RFID) about the size of a grain of rice, that has the potential to be used in a variety of personal identification, security, financial, and potential healthcare applications.) மனிதத் தோலினடியில் செலுத்தி அந்த மனிதனின் செயல்பாடுகள், அவனுடைய உடல்நிலை மாறுதல்கள் போன்றவற்றை கணினி மூலம் கண்காணிக்கும் செயல் பாட்டினை அமெரிக்க அரசாங்கம் (America's Food and Drug Administration) ஏற்பாடு செய்திருக்கிறது.

வெறி பிடிக்காமலிருந்தால் சரி! அந்த நுண்துகளை ($200) ஊசிமூலமாக தோலினடியில் செலுத்தியபின், அது தொடர்ந்து அதன் தனிப்பட்ட முகவரியினை ரேடியோ அலைகளாக வெளிப்படுத்தியபடி இருக்கும். இந்த செய்திகளைப் பெருவதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்புக் கருவி இந்த அலைகளை உள்வாங்கி கணினி மூலமாக பலவித செயல்பாடுகளுக்கு பயன் படுத்தப் படும் என்கிறார்கள்.

இப்போது மருத்துவ ஆய்வுக்காக மட்டும் இந்த technology பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும், இந்த சிப் முறையை அமல் படுத்தியபின் தனிமனிதன் இனிமேல் தன்னிச்சையாக செயல்படவே முடியாது, அவனுடைய் சுதந்திரம் பறிபோய்விடும் (privacy-threatening) என்ற எதிர்க்குறலகள் உரக்கவே ஒலிக்க ஆரம்பித்து விட்டன. அந்தச் சில் பொருத்தப்பட்ட மனிதனின் என்ணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் இன்னொருவர் முழுமையாக கண்டறிவது மட்டுமல்லாமல் அந்த மனிதனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சாத்தியம் இருப்பதால், இந்த முடிவை பலர் எதிர்க்கிறார்கள்.

இது தவிர பல உடல்நிலைக் கோளாறுகளை இந்தக் கருவி உண்டாக்கக் கூடும் என்றும், இதனைச் செலுத்துவதுதான் சுலபமே தவிர வெளியெடுப்பது மிகவும் கடினம், அதற்காக பெரியதொரு அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும், அதனால் பல பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது போன்ற கருத்துக்கள் பல விஞ்ஞானிகள் மூலமாக வெளிவந்த வன்ணம் இருக்கின்றன.

ஆனால் இந்தத் துகள் செலுத்தப்பட்ட நபர் எங்கிருந்தாலும் அவரை கண்டுகொள்ள முடியும் (trackability) என்பதால், பிணைக்கைதிகளாக கடத்தப்படுவோமோ என்று அஞ்சும் பலர் இந்தத் துகளை உட்செலுத்திக் கொள்ள மிக ஆவலாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மெப்ஸிகோ நாட்டில் இந்தக் காரணத்திற்காகவே பலர் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்று தெரிகிறது. நம் நாட்டிலும் இன்றைய நிலைமையைக் கருத்தில் கொண்டு பீகாரில் பலர் இதனை வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்!

பிரச்னை இப்போது வேறு பாதையில் திசை திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பைபிளில் சொல்லியுள்ளபடி நெற்றியிலோ வலது கையிலோ ஒரு குறி ஏற்படும்போது சைத்தானின் ஆதிக்கம் அதிகமாகி உலகம் அழிந்துவிடும் (Apocalypse) என்கிற நம்பிக்கையில் அதில் குறிப்பிட்டுள்ள "குறி" இந்த வெரிசிப்தான் என்று சொல்கிறார்கள் சிலர். அதனால் இந்த வெரிசிப்பை சைத்தானின் குறியீட்டு என்ணான "666"-உடன் ஒப்பிடுகிறார்கள் (mark of the beast).

தோன்றுவது எல்லாமே ஒரு நாள் அழியவேண்டியவைதானே என்ற கருத்தில், இதற்கெல்லாம் கவலைப் படாமல் வெரிசிப் இப்போது போடு போடென்று போடுகிறது. சீக்கிறத்திலேயே கடைகளுக்குச் சென்று சமான்களை எடுத்துப் போட்டுக் கொண்டு பணம் கொடுக்காமலேயே "ஹாயா"க கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம் - ஆமாம், கையில் தான் பை இருக்குமே, எப்படி வீசுவது என்று கேட்கலாம் (உங்கள் பெயர் மூர்த்தியா?), சரி பையை தோள்பட்டையில் மாட்டிக் கொள்ளுங்களேன்! அவற்றின் மதிப்பு உங்கள் வங்கிக் கணக்கில் கழிக்கப் படும். அதான் உங்கள் ஜாதகம் முழுவதையும் உங்கள் புறங்கை சில்லு அதன் அண்ணனிடம் ஒப்பித்துவிட்டதே!

:: (பார்வை 960 முறை) ::

தோடா !

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

இந்த வருடத்திய குடியரசு தினத்தன்று எனக்கு ஒரு புதிய அனுபவம்!

தன்னோ ஹம்ஸப் ப்ரசோதயாத்சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் இராமகிருஷ்ண மாணவரில்லத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியேற்றி சொற்பொழிவு (!) ஆற்றவேண்டும் என்று அங்கு நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் ஸ்வாமிஜி என்னிடம் ஒரு அன்புக் கட்டளையிட்டார். நான் படித்த பள்ளி என்பதாலும் அந்த நிறுவனம் ஆற்றும் தொண்டின் சிறப்பை நன்கு அறிந்தவன்என்பதாலும் இது எனக்குக் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் எனக் கொண்டேன். இதை என் மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட போது, கிடைத எதிர்வினை இது:

"இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு யாராவது பெரிய மனிதர்களைத்தானே கூப்பிடுவார்கள். ம்ம்ம்!"

சரி, தாமஸ் கார்லைல் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஒரு மனிதன் தனக்கு மிக அருகாமையிலேயே இருக்கும் எவருக்கும் ஒரு ஹீரோவாக இருக்க முடியாது என்பதால், தூரத்தில் இருப்பவர்களை ஏமாற்றுவதே சுலபம் என்று எண்ணி மனைவியை மன்னித்து விட்டேன்.

ஒரு தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் கொடியேற்றி விட்டு வந்த பிறகு மையமாக மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் விழா நடந்தது. இரண்டு பாண்டு குழுக்கள் இசைத்துக் கொண்டு முன்னே செல்ல, ஒரு ஊர்வலம் போல் விழா நடந்த மைதானத்திற்கு அழைத்துச் சென்றதுதான் மிக்க கூச்சமாக இருந்தது.

மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள். அதிலும் தபேலா வாசித்த பையன் தேர்ந்த வித்துவான் போல் தன் கைவண்ணத்தைக் காண்பித்து எல்லோர் மனத்தையும் கவர்ந்தான். இரு மாணவர்கள் திருப்பூர் குமரன் மற்றும் நேதாஜி ஆகியவர்களின் தியாகத்தைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்கள்.

பிறகு நான் மைக்கப் பிடிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 850 முறை) ::

புத்தக உலகம்!

என்ன நடக்குது இங்கே :: 8 மறுமொழிகள் »

இன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்" - அசரீரி!) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்!) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் வேண்டாமா?

C.1935 காலத்திய பதிப்புகள் சிலவற்றில் வாசம் செய்த ராம பாணங்கள் என்னிடம், "என்னதான் புத்தகங்கள், நூல்கள், இரத்தினங்கள் என்று பல பெயர்களில் நீ அழைத்தாலும் அடிப்படையில் அவை cellulosic material - தான்" என்று கூறிவிட்டுச் சென்றன. என் attic-ஐ அலங்கரிக்கும் இது போன்ற antic-களைப் பற்றி பிரிதொரு நாள் பேசுவோம்!

புது புத்தகங்களை வாங்கி அவற்றின் வாசனையை முகர்ந்து விட்டு, "நம்பளோடதுதானே, எங்க ஓடிடப் போவது; பிற்பாடு சாவகாசமா படிச்சுக்கலாம்" என்று எல்லாவற்றையும் போல் இதனையும் procrastination list-ல் சேர்த்து விட்டு நிம்மதியாக மனதுக்குப் பிடித்தமான வேறு தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டு சென்றதால், புத்தகங்கள்தான் சேர்ந்தன - அறிவு கூடவில்லை! இதற்கிடையில், காலண்டர்கள் புதிது புதிதாய் ஆணியில் மாறிக்கொண்டு செல்வதைத் தடுக்க இயலவில்லையே! காலத்தை rewind செய்யமுடியாவிட்டலும், குறைந்த பட்சம் "Pause" செய்யவாவது இயலவேண்டும். அதற்கான Time Machine யாராவது கண்டு பிடிப்பார்களா? இல்லாவிட்டால் யயாதி கதை தான்! ஐயகோ, அநுபவிக்க வேண்டியது எவ்வளவு இருக்கு - அத்தனையும் கொள்ளை போகிறதே? ஆமாம், "அநுபவிப்பது" என்றால் என்ன? அது species களுக்குத் தகுந்தாற்போல் வேறுபடும். இதைப் பற்றி ஒரு கதை இருக்கு - அது அப்புறம். "Stop it!". Ok, I am drivelling!

ஓன்று மட்டும் நிச்சயம். விற்கும் நூல்கள் எல்லாம் படிக்கச் சுவையாயிருக்க வேண்டிய கட்டாய மில்லை. Books sell mostly through hype, promotion campaigns, reviews serving as surrogate ads, just plain ad's and also the snob value associated with ownership. சில பிரபலங்களின் பேட்டிகளை டி.வி-யில் பார்த்தால் backdrop-ல் பல புத்தகங்கள் பளபள வென்று அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அவ்வளவு படிப்பாளி என்று பார்ப்பவர்கள் மதிப்பீட்டுக்காக! அந்த டைட்டில்கள் எல்லாம் அவர்கள் பெரிய அறிவு ஜீவி எனக் காண்பிக்கக் கூடிய அளவில் இருக்கும். மைசூரில் பணியாற்றும்போது ஒருவர் வீட்டில் விசேஷம், செல்ல வேண்டிய கட்டாயம். அவர் வீட்டின் டீபாய் மேல் ஒரு கட்டு Readers' Digest, ஒரு கட்டு National Geographic கருக்கழியாமல் அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் யாரும் அவைகளைப் படிக்கும் நிலையிலோ, வயதிலோ இல்லை. எல்லாம் ஒரு "இது"தான். ஆமாம், இவ்வளவு பேர் புக் பேஃரில் அள்ளிச் செல்கிறார்களே, அவற்றில் எத்தனை சதம் முழுவதாகப் படிக்கப்படும்? ஏனென்றால், முழுமையாக ஒருமுறை கூடப் படிக்காமல் ஒரு புத்தகத்தையே தடை செய்தவர்களாயிற்றே நாம்!

2005 புத்தகக் கண்காட்சியில் மேற்கொண்டு வாங்கியவை:-

  • எம்.எஸ் ஞாபகார்த்தமாக "மீரா" VCD (ஒரிஜினல்! ஹிஹி, ஒரு மாறுதலுக்குத்தான்!)
  • மாம்பலம் சிஸ்டர்ஸ் - ஸ்தோத்திரங்கள் - MP3
  • அபுல் கலாம் ஆசாத் - கானா
  • இரா. முருகன் - அரசூர் வம்சம் + சைக்கிள் முனி
  • பி.ஜி.வுட்ஹௌஸ் - 4 (நடைபாதை பேரம்)
  • Edward de Bono - 2 (………. do ………)
  • ஸதாசாரம்
  • கல்கியின் 3 கதைகள்
  • சமையல் சமாசாரங்கள் - 4 (ரோக்கா படி)
  • ஜெயகாந்தனின் ஹரஹர சங்கரா (இதன் வாயைத் தைத்து சிரமப் பட்டிருக்க வேண்டாம்! திராபை!)

இன்னும் சில, பட்டியலிடுமுன் பரண் ஏறிவிட்டன!!

அங்கே நுழைந்தவுடன் ஒரு கொஞ்ச வயசு சாமியார் என்னமா போஸ் கொடுக்கறார்ங்கிறீங்க - ரமேஷ் பிரபா எல்லாம் சும்மா ஜுஜூபி! அந்த சாமியார் பேசாம Fashion TV - லே சேரலாம். மூஞ்சி கொஞ்சம் effeminate-ஆ பட்டது! வோணாம்ப்பா!! Nay, I'm not one of those!!

தெரிந்தவர்கள் தயவுசெய்து சீக்கிரம் சொல்லுங்களேன், தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகம் பிரசுரித்துள்ள அகராதி வாங்கலாமா? ரூ.600 விலையுள்ள அந்த ஆ-த அகராதியை ரூ.450-க்குக் கொடுக்கிறார்கள். நன்றி.

:: (பார்வை 796 முறை) ::

புத்தகக் கண்(கொள்ளாக்) காட்சி!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

ஜனவரி 8, சனிக்கிழமை

புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று "கிரௌண்டில்" விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று நிதானமாக் கேட்டுக் கொள்ளலாம் என்று நிறுத்தினால் (நான் கொஞ்சம் "மெற்குரி வேபர்" லைட்), மொபைல் பார்ட்டியின், "ரோட்டிலே நிறுத்தாதீங்க" அறிவுருத்தல் - (ஆனால் உண்மையில் நான் எங்கு வண்டியை பார்க் பண்ணினேன் என்பது வேறு விஷயம்!). சென்றமுறை நடு புல்வெளி மைதானத்தில் பார்க்கிங் இருந்தது. இப்போது அங்கே அரங்கு அமைத்திருப்பதால் இந்த ஏற்பாடு என்று தோன்றுகிறது.

கண்காட்சி என்றாலே கட்டாயம் இடம்பெற வேண்டிய பொருள் மெகா சைஸ் அப்பளாம்! மண்ணோடு கலந்த இந்த வஸ்துவுக்கு அங்கும் இடம் இருந்தது. அந்த பூகோளப் புத்தக அப்பளத்தில் edible ink-ஐ பயன் படுத்தி ஏதேனும் சுவையான செய்தியை அச்சடிக்கலாமே என்று தோன்றியது (ஜெயேந்திரரின் காம லீலைகள் - போன்றவையாக இருந்தால் மக்களுக்கு
சுவாரஸியமாக இருக்கும்!)

இட்லி, வடை, பிஸ்கெட், காப்பிகளைத் தாண்டி நுழைவாயில் நோக்கிச் சென்றால் அனுமதிச் சீட்டு வாங்குமிடத்தில் நம்
கண்ணைக் கவரும் வண்ணம் கிழக்குப் பதிப்பகத்தார் அமைத்துள்ள விளம்பர வளைவு, அந்த ஸ்டாலுக்குள்ளேயே நுழைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

நுழைந்தவுடன் தென்படுவது கேண்டீன். இசை விழாவின் போது ஏற்பட்ட பழக்கத்தால் என் கால்கள் தன்னையறியாமல் அதை
நோக்கிச் சென்றதை மனைவி தடுத்து நிறுத்தி விட்டார், "எப்பப் பார்த்தாலும் சாப்பிடற நினப்புத்தானா" என்ற கேள்வியுடன்.
மேற்கொண்டு இது பற்றியும், எங்கள் குடும்பத்தார்களின் அடிப்படை குண இயல்புகளைப் பற்றியும் நாங்கள் sotto voce-ல் பரிமாறிக்கொண்ட டயலாகுகள் வாசிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்காது என்பதால் அவற்றிற்கு இங்கு இடம்
கொடுக்கவில்லை.

நிறைய ஸ்டால்கள். பரவலாகப் பட்ட இடவசதி. இன்னொரு நிறைவான விஷயம், நிறைய தமிழ்! ஆனால் ஸ்பீக்கரில் ஒரு
பெண் தவறான ஆங்கிலத்தில் (வேடிககையான உச்சரிப்புடன்), மறுநாள் நடக்கப் போகும் பேச்சுப் போட்டியைப் பற்றி
அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரே அதைத் தமிழில் சொல்லியிருந்தால், எவ்வளவு கொலை செய்திருப்பார் என்று
எண்ணிப் பார்த்ததில், "போட்டுத் தாக்கு ஆங்கிலத்தை" என்று விட்டு விட்டேன்!

மேலும், கார்பெண்டர், காண்டிராக்டர், வேலுசாமி, கன்னிகா பரமேஸ்வரி என்று யார் யாரையோ கூவி அழைத்துக்
கொண்டிருந்தார்கள். "என்னை இல்லைப்பா" என்று மகிழ்ச்சியுடன் கடைகளை மேய ஆரம்பித்தேன்.

அநேகமாக எல்லா ஸ்டாலிலும் முகப்பிலேயே தென்படுவது கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்"
போன்றவற்றின் மலிவுப் பதிப்புகள்தான். அவைகள் சிரஞ்சீவியாக நிறையவே விற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோன்ற நீண்ட நெடிய நாவல்கள் அதற்கப்புறம் மக்களைக் கவரும் வண்ணம் தமிழில் வரவில்லையோ என்று எண்ணுகிறேன். ஆனால் அப்படியும் மற்றவர்களிடமிருந்து தன்னை தனிப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், "கல்கியின் எழுத்துக்கள் எனக்குப் பிடிப்பதில்லை" என்று சொல்லிக்கொள்ளும் மேதாவிகளும் இருக்கிறார்கள். Each one to his cup of tea!

Topical-ஆக ஜெயேந்திரரையும் சிறுபதிப்புக்கள் மூலம் காசக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்! பெரும்பாலும் சுற்றி வளைத்து அவரையும், அதைச் சாக்கிட்டு பார்ப்பனர்களையும் திட்டி எழுதப்ட்டிருந்ததைப் பார்த்தேன். ஆனால் ஜெயகாந்தன்
எழுதியுள்ள "ஹரஹர சங்கர"வைப் பற்றி பத்ரி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தபின் அதை வாங்கிப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் தோன்றியுள்ளது.

மற்றபடி வகை வகையான சமையல், சுய முன்னேற்றம், கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி, ஜோக்குகள், ஆன்மீகம்,
கையடக்க நூல்கள் ஆகியவைகள் பில் போடப்படுவதைப் பார்த்தேன்.

கையில் ஒரு பெரிய பையாக எடுத்துச் செல்லல் நலம். முடிச்சு முடிச்சாக சிறு பைகளை சுமந்து "இடி"பாடுகளில் செல்வது
சிரமமாக இருந்தது! தண்ணீர் ஒரு பாட்டில் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.

நான் வாங்கியவை:-

திருக்குறள் (விளக்கமான உரை)
லிஃப்கோவின் விட்டுப் போன Great Little Books
தனிப்பாடல் திரட்டு
சித்தர் பாடல்கள்
சிலேடைகள்
காளமேகப் புலவர் பாடல்கள்
திருமண சடங்குகளின் விளக்கம்
தெனாலி ராமன், முல்லா, பரமார்த்த குரு, விக்கிரமாதித்தியன் கதைகள் (குழந்தைகளை தூங்கச் செய்ய!)
ஈவேராவின் மறுபக்கம் - ம. வெங்கடேசன்
ஹிந்துத்வா - ஒரு அறிவியல் கண்ணோட்டம்
வெறுக்கத்தக்க பிராமணீயம்
Chidrens' Book Trust பதிப்புகள் - மலிவு விலையில் இரத்தினங்கள்

எந்த ஒரு திட்டத்துடனும் செல்ல வில்லை என்பதால், ஒவ்வொரு ஸ்டாலாக ஏறி இறங்கி, பலருடைய பிருஷ்ட பாகங்களால் இடி பட்டு நீந்திச் சென்றதில் நேரமாகி விட்டது. பார்க்க வேண்டியவை பாதிக்குமேல் பாக்கி. "திறையை மூடுங்கள்" என்ற ஆணை வந்துவிட்டது. வெளியே செல்லலாமென்றால் அங்கு "பரிசு விழுமா" என்று சீட்டின் அடிக்கட்டையை கையில் பிடித்து நிற்கும் கூட்டம். நமக்கு அதுபோல் ஏதும் விழுந்த சரித்திரம் இல்லையென்பதால், நாங்கள் கீழே விழாமல், நெளிந்து நெளிந்து வெளியே வந்து விட்டோம்.

ஏற்கனவே லாஃப்ட்களில் அடுக்கி வைக்கப்பட்டு, அந்துருண்டைகளை வெற்றி கொண்ட அம்புப் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் என் வாழ்நாளுக்குள் என்று வாசித்து முடிக்கப் போகிறேனோ தெரியவில்லை. ஆனால் மறைந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்கள் கூறியிருந்தது போல, மேன் மேலும் வாங்கி அடிக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்! கையெட்டும் இடத்தில் வைத்தால் படிக்கத் தோன்றும் என்றால் அவை காற்றை சுத்தம் செய்யும் புனித சேவையில் ஈடுபடுகின்றன.
ஒரு Murphy's law நினைவுக்கு வருகிறது:-

Law of conservation of Filth

For making something cleaner, you have to make something else dirtier!

Corollary to this law

You can still make everything dirtier without making anything cleaner!

இன்றைய Wish List:-

அபிதான சிந்தாமணி
கல்கி, தேவன், எஸ்.வி,வி - இவர்களின் படைப்புக்களில் என்னிடம் இல்லாதவை
Rare Books - ல் முத்துக் குளித்து அள்ள வேண்டிய antics
முன்னே குறிப்பிட்ட ஜெயகாந்தனின் படைப்பு
இன்னும் கொஞ்சம் காரக் கடலை!

வரட்டுமா!

:: (பார்வை 790 முறை) ::

மனித சுனாமி

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

பேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது.

பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் பல பாதிக்கப் பட்ட நாடுகளில் நடந்திருக்கின்றன. பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த சிறுமிகள் இலங்கையில் கற்பழிக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும், அவர்களுக்கு வழங்கப் படுவதற்காக கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் பல இடங்களில் திருடப்பட்ட கதைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தாய்லாந்தில் ஹோட்டல் அறைகள் சூறையாடப்பட்டன. ஸ்வீடன் நாட்டின் மக்கள் பலர் இந்த ஊழ் அலைகளால் மாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொண்டு, அவர்களின் உடைமைகள் திருடப்படுவது அந்நாட்டில் நிகழ்வதால், உயிர்ச் சேதம் பற்றிய முழுத்தகவல்களையும் அந்நாட்டு அரசு வெளியிடாமல் வைத்திருக்கிறது. அதன் அண்டை நாடான நார்வேயிலும் இதே நிலை தான்.

மேலும் சில வக்ர புத்திக் காரர்கள் உதவி நிறுவனக்கள் போலவே பொய் ஈமெயில்கள் மூலம் பணம் திரட்டுகிறார்கள். இறந்தவர்கள் பற்றிய முக்கிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். வங்கி சேமிப்புகள், காப்பீட்டுத் தொகை முதலியவற்றை ஏமாற்றி அள்ளிக் கொண்டுபோக இது போன்ற முயற்சிகள் நடக்கின்றன. இன்னும் பலர் தங்கள் பெயரை பாதிக்கப் பட்டவர்களின் பட்டியலில் எப்படியாவது நுழைத்து விட்டு, அரசும், வேறு பல தொண்டு நிறுவனங்களும் அளிக்கும் ரொக்கம் மற்றும் வேறுவகை நிவாரணங்களையும் கொள்ளை கொண்டுபோகும் பலே பேர்வழிகளும் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிகிறோம்.

இது போன்ற மனிதர்கள் பிறக்காமலிருக்க Genome project முடிவுறும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்!

சமீபத்தில் நாகை சென்று வந்துள்ள என் நண்பர் அங்குள்ள நிலவரத்தைக் கூறினார். மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 749 முறை) ::

 

5-ல் இது-3«12345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in