ஜோஸ்யம், ஜாதகம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இதைப்பற்றி முன்னமையே ஒரு இடுகை இட்டுள்ளேன். ஆனால் நம்மால் முழுதும் புரிந்துகொள்ள முடியாத சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியவில்லை.
இது பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்ததில் இவை இயற்கை நமக்களித்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே தோன்றுகிறது. பின்னால் நடக்கப் போவதை சூசகமாக நமக்குத் தெரியப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. இத்தகைய நிகழ்வுகள் பலவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். ஒரு செயலைத் தொடங்குமுன் தற்செயலாகத் தோன்றும் இடர்கள், தொலைபேசியில் தொடர்புகொள்ள முற்படும்போது தொடர்ந்து கைதவறித் தட்டும் ராங் நம்பர், ஒரு அவையில் நீங்கள் ஏதாவது சொல்ல முயலும்போது எற்படும் தடங்கல்கள் இது போன்ற பல நிகழ்ச்சிகள் நமக்கு அவ்வப்போது உங்கள் முயற்சிகளின் பயனின்மையை தெரியப் படுத்துகின்றன.
வெளிப்படையான இதுபோன்ற நிகழ்ச்சிகள் தவிர, நம் உள்ளுணர்வே பல முறை ஒரு "வருமுன் உரைப்பானா"க செயல்படுகிறது. இதனை hunch என்பார்கள். இத்தகைய எச்சரிக்கைகளுக்கு நாம் கட்டாயம் மதிப்புக் கொடுத்து அதற்குத் தக்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.
இயற்கையாக நிகழும் இத்தகைய செயல்பாட்டை "நிமித்தம்" என்று அழைப்பார்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் கிடையாது. கைம்பெண்கள் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும் என்பது போன்ற முட்டாள்தனமான நம்பிக்கைகளை நான் குறிப்பிடவில்லை.
முன் காலத்தில் அரசவைகளில் "நிமித்திகன்" என்று ஒருவர் இருப்பார். அரசர் முக்கிய செயல்களில் இறங்குமுன் அவர் தனக்குத் தோன்றும் உணர்வுகள் அடிப்படையில் அரசருக்கு ஆலோசனை வழங்குவார்.
இது பற்றி நண்பர்கள் யாருக்கேனும் மேல்விவரம் தெரியுமானால் பகிர்ந்து கொள்ளலாமே!
அது தொலைக் காட்சி இங்கு வராத காலம். வானொலிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தது. சும்மா திருகிக் கொண்டிருந்தபோது, இப்போது "அவதானம்" என்னும் நிகழ்ச்சி கேட்கப் போகிறீர்கள் என்ற அறிவிப்பு வந்தது. அது அஷ்டாவதானமா, தசாவதானமா என்று நினைவில்லை. இராமையா என்பவர் நிகழ்த்தினார். தொடர்ச்சியாக ஒன்றுக்கும் இன்னொனற்றுக்கும் தொடர்பு இல்லாத பல செயல்களில் அவரை ஈடுபடச் செய்கிறார்கள். அவர் அவற்றை கோர்வையாக நினைவில் இருத்தி பதிலளிக்கிறார்.
ஒருவர் அவருடைய முதுகில் ஒரு பூவை ஒத்தி ஒத்தி எடுக்கிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளின் முதலடி கூறிவிட்டு ஈற்றடி என்னவென்று வினவுகிறார். இன்னொருவர் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் கேட்கிறார். இதுபோல் பல செயல்கள். இதெல்லாம் முடிந்த பிறகு அவர் வரிசையாக பதிலளிக்கிறார். அடுத்த முறை அந்த வரிசைக் கிரமத்தை மாற்றுவார்கள்.
இத்தனைக்கும் அவர் கண் பார்வை இல்லாதவர். பிறவியிலிருந்தல்ல - இடையில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தால். அவருடைய மனைவியும் வந்திருந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கண்பார்வை இழப்பதற்கு முன்னால் அவர் தன்னுடைய மனைவியின் முகத்தைப் பார்த்ததை நினைவில் கொண்டு, அந்த முகத்துடனேயே அவரை இன்னமும் காண்கிறேன் என்று இராமையா அவர்கள் கூறியபோது அதனைக் கேட்டவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது.
முன் காலத்தில் அரசர்கள் இந்த அவதானக் கலையைப் போற்றி வளர்த்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தற்காலத்தில் நினைவாற்றலை அதிகப்படுத்த மாத்திரைகள் வந்துவிட்டன! ஆனால் இதற்கான பிரத்யேக பயிற்சிகளை சிலர் நடத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; விவரம் தெரியாது.
"வைGo" மருவி "வைKo" ஆனதுபோல, காஃபி, "காப்பி"யாகி "சூப்பர்" மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், "சூப்பர்" என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ? பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் அகழ்வாராய்ச்சி செய்து, பழைய இலக்கியங்கள் எதிலாவது ஒரு புலவர் தன் ("போத்தீஸ்" என்று 200 சைஸ் ஃபாண்டில் எழுதப்பட்ட) பிக் ஷாப்பர் பை சகிதம் வந்து, "மன்னா, உங்கள் அழகைப் பற்றி ஒரு 'சூப்பர்' பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். கட்டாயம் 25 பொற்காசுக்குக் குறையாமல் கொடுக்காவிட்டால், எதிரி மன்னன் அணியில் சேர்ந்து விடுவேன்" என்று மிரட்டும் வெண்பா எதாவது கண்டுபிடிக்கலாம். சரி நேயர்களே (அந்தக் காலத்தில் "ரேடியோ சிலோனி"ல் 'ராஜகுரு சேனாதிபதி கனகரெத்தினம்' இப்படித்தான் அடிக்கடி சொல்வார்!), இப்போது நாம் கதைப்பது காப்பியைப் பற்றியல்லவா!
காப்பி என்பது "கொட்டை வடிநீர் குளம்பி"யைப் பற்றி மட்டும் குறிப்பிடும் சொல் என்றா நினைத்தீர்கள்? அது பிசகு. தேர்வுகளில் நம் மக்கள் அடிப்பது காப்பி. கையெழுத்து படிய வைக்க கையை ஒடித்ததும் காப்பி (நோட்டு)தான். விளம்பரங்களில் வரும் "நறுக்"கென்ற வாசகங்களை எழுதுபவர்களுக்குப் பெயர் "காபி ரைட்டர்கள்". ஹிந்தியில் எல்லா நோட்டுப் புத்தகங்களையுமே "காபி" என்றுதான் அழைக்கிறார்கள். அடடா, மறந்துவிட்டேனே, கர்நாடக சங்கீதத்தில் "காப்பி" ராகம் மிகப் பிரபலமானது. "ஜகத்தோத்தாரணா" என்று கணீரென ஒலிக்கும் புரந்தரதாஸர் சாகித்யம் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இதே காப்பி ராகத்தில் பாபநாசம் சிவன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை மறைந்த இசைமேதை ஜி.என்.பி அவர்களின் குரலில் கேட்போமா!
நியூ யார்க் அரசு அலுவலத்தில் பணி புரிந்து (!) வந்த எட்வர்ட் கிரீன்வுட் என்பவர் பாவம் தன் அலுவலக கணினியில் கொஞ்ச நேரம் Solitair சீட்டு விளையாடினார். என்னாங்க இது ஒரு பெரிய குத்தமா? அதை மேயர் ப்ளூம்பெர்க் பார்த்தூட்டார். அவ்வளவுதான். சீட்டைக் கிழிச்சூட்டார். நம்மூர்ல ஆப்பீஸ் கம்ப்யூட்டர்ல என்னென்னமோ (வெளையாட்டெல்லாம்) பாக்கறாங்க - சாலிடேர் வெளையாண்டது பெரிய தப்பா?
நேற்றிரவு கே.வி.ராஜா அவர்கள் என்னிடம் "டி.வி.டி"க்கு நேரான தமிழ்ச்சொல் என்னவென்று கேட்டார். கொஞ்சம் பொறுங்கள், கண்டுபிடித்துச் சொல்கிறேன் என்று வாய்தா வாங்கிக் கொண்டேன். நம் வலைத்தோட்டத்தில் ஒருவர் கையாண்ட DVD-யின் ஒருவித தமிழாக்கத்தை வாசித்த நினைவு லேசாக இருந்ததேயன்றி, அதனை மீண்டும் வெளியே கொண்டுவர இயலவில்லை.
என்னைவிட பன்மடங்கு தமிழறிவு மிக்க நண்பர்களை விளித்து அவர்களையும் இந்தத் தேடலில் புகுத்தினேன். அவர்கள் பல சொற்றொடர்களை "தகடு" சேர்த்து முன்மொழிந்தாலும், அவர்களுக்கே முழுமையாக இன்னும் திருப்தி ஏற்படாததால், இந்தத் தேடுதல் தொடர்கிறது. இதற்கிடையே ராஜா தன் இடுகையில் "மின்னிலக்கக் குறுந்தகடு" எனும் மொழிபெயர்ப்பை பயன்படுத்தியுள்ளார். அது Digital, Disk இரண்டு சொற்களுக்கும் பொருந்துகிறதேயன்றி, "versatile" மட்டும் பாவம்போல தொங்கி நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இந்த இடுகையை வாசிக்கும் தோழர்கள் எவருக்கேனும் வேறு தகடுகள் தோன்றினால் தெரிவியுங்கள். "நச்"சென்று மனதில் அறையும் மொழியாக்கத்துடன் "தக்க பொருள் உரைத்திடுஞ்சொல்" அளிப்போருக்கு, "தகடு தத்தர்" ("தத்தர்" = அளித்தவர்) என்கிற சிறப்புப் பட்டமும், குலுக்கல் முறையில் விழாத பரிசு ஒன்றும் கிட்ட வாய்ப்பிருக்கிறது!
You tube, ஆப்பிள் ஐட்யூன் வீடியோ இவைகளுக்குப் போட்டியாக கூகிள் வீடியோ சேவை கிளுகிளுப்பாகத் தொடங்கியுள்ளது. பார்த்து, கேட்டு, பின் உங்கள் சொந்தத் தயாரிப்புகளையும் வலையேற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளலாம். சிறிது பெயர் வாங்கிய பின் அங்கே கடையும் போடலாம்!
ஆமாம். இட்லிதான் சிற்றுண்டிகளின் "ராணி", முக்கியமாக காலை உணவுகளில். அதனை சரியான பக்குவத்தில் செய்து, அதன் உடன் செல்லும் பதார்த்தங்களும் சரியாக அமைந்தால் அது அமிர்தத்துக்குச் சமம். எல்லா வயதினருக்கும், எத்தகைய நோயிருந்தாலும், எளிதில் செரிமானமாகி தெம்பளிக்கும் சீருணவு இட்லியே!
"பட்டனைத் தட்டிவிட்டா, ரெண்டு இட்டலி தட்டில விழவோணும்; சட்டினி சாம்பாரும் விழவோணும்" என்று டி.ஏ.மதுரம் அவர்கள் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வெளியிட்ட ஆசை நிறைவேறும் நாள் இன்னும் வரவில்லையென்றே எண்ணுகிறேன். அவர் எதிர்பார்த்ததுபோன்ற ஒரு "இட்டலி மெஷினு" இன்னும் பொதுஜன உபயோகத்துக்கு வரவில்லை. ஆனாலும் இட்லி செய்முறை சிறிது எளிதாக்கப்பட்டு, பெருமளவில் உற்பத்தி செய்யும் (mass production) நிலைக்கு வந்துவிட்டது. வணிகமுறை உணவகங்களிலும், கேண்டீன்களிலும் கொதிகலனில் உற்பத்தியாகும் நீராவி மூலம் இட்லி வேகும் முறை தொடங்கி பல வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அதற்குமேல் அந்தத் துறையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை என்றே சொல்லலாம்.
எங்களூரில் முதன்முதலாக எங்களுடைய அறவை மில்லில், இட்லிக்கு மாவு அறைக்கும் இயந்திரம் இயக்கப்பட்டபோது யாரும் அறைக்க வரவில்லை. வீட்டில் ஆட்டுக்கல்லில் மணிக்கணக்காக மாவறைப்பதற்காக மனித இயந்திரங்கள் இருந்தபோது "இதுவேறு எதற்கு" என்பது ஒரு காரணமாக இருந்தாலும், மின்சாரம் மூலம் இயங்கும் இயந்திரத்தில் அரைத்தால் மாவு சூடாகிவிடும்; அதனால் உடல்நலத்துக்கு கேடு என்கிற என்ணப்பாங்கும் வேறொரு காரணம். மின் விளக்கு பாவித்தால் ஆயுள் குறையும் என்கிற நம்பிக்கை இருந்த ஊர் அது!
ஆனால் ஒருவார காலத்துக்குள் எங்கள் இயந்திரம் இரண்டு ஷிஃப்டு வேலை செய்யவேண்டியதாயிற்று. அதுவும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் 24 மணிநேரமும் தொடர்ந்து ஓடியது. வாடிக்கையாளர்களிடையே, "என்னோடது முதல்ல போடு" என்று சண்டைகள் மூண்டன. ஆகையால் நாங்கள் அவசரமாக இன்னொரு மெஷின் பூட்டவேண்டியதாயிற்று.
இட்லியின் முதன்மையான வரையறை அது மென்மையாக இருத்தல் வேண்டும். இட்லியில் கல் இருக்கலாம். ஆனால் இட்லியே கல்லாக இருக்கக் கூடாது!
அவ்வாறு இட்லி மெதுமெதுவென்று (ஒரு அழகிய இளம்பெண்ணின் மென்பாதங்கள் போன்று) இருக்கவேண்டுமானால், இட்லிமாவு "புசுபுசு"வென்று பொங்கி யிருக்கவேண்டும்.
மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். மாணவர்களும் அதே முறையில் பதிலளிக்கிறார்கள். இத்தகைய கணினிப் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு காகிதம், எழுதுகோல் கொண்டு, மனத்தின் எண்ணங்களை கோர்வையாக்கி, முழுமையான, இலக்கனத்திற்கு உட்பட்ட வாக்கியங்களை பிழையில்லாமல் அமைத்து, நீண்ட கட்டுரைகளை எழுதும் திறன் குறைந்து விட்டதாக பலர் வருத்தப் படுகிறார்கள். "எஸெமெஸ்" மற்றும் "சாட்" செய்யும் வகையிலேயே பாடங்களிலும் வார்த்தைகளைக் கீறி, துண்டுபோட்டு துப்பிக் கொண்டிருக்கிறார்கள். மிகுதியையும் வாசிக்க »
சமீபத்திய மறுமொழிகள்