கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். "லைனக்ஸ்"/"லினக்ஸ்" என்னும் இயங்குதளத்தின் (Operating System) பயன்பாடு தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக:
இலவச மென்பொருள் (Free Software)
தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)
மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)
மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)
திறந்த மூல மென்பொருள் (Open Source Software)
திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)
கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)
கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS - Free and Open Source Software)
மேற்சொன்னவை அனைத்தும் மிகுந்த தத்துவ, கோட்பாட்டு சார்ந்த பொருளுடையவைகளாகவும், அவற்றைக் கையாளும்போது ஏதேனும் தவறான சொல்லாட்சியை அமைக்க நேர்ந்தால் அது பலர் மனங்களில் பெருங்குழப்பம் விளைவிக்கும் தாக்கம் கொண்டவையாகவும் அமைவது ஒரு நிதர்சனமான உண்மை. இத்தகைய சொற்பயன்பாடு குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்க் கணினி அமைப்பில் பெருந்தொண்டாற்றிவரும் திரு. மு.மயூரனின் பதிவில் வாசித்து இதுகுறித்த தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவர், "GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!" என்னும் தூக்கிவாரிப்போடும் தடாலடி தலைப்புடன் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.
இதைப் படித்தபின்னும் என்ன, தலை சுற்றுகிறதா? முதலில் அப்படித்தான் இருக்கும். இங்கேயே சற்று கைநனைத்து, சிறிது பங்களியுங்கள். நாளடைவில் நீங்களே இத்தகைய பரிபாஷையில் வல்லுனராகிவிடுவீர்கள்! ஆனால் இதனைத் தாண்டி அடுத்த திறக்கில் லைசன்ஸ், GPL, CC, Linus Torvalds vs Richard Stallman - இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி அல்லுசில்லாகி சுருண்டு மடங்கினால் நான் ஜவாப்தாரியல்ல!
இணையத்தில் தமிழின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தமிழ் வலைப்பதிவுகள் (Blogs) மற்றும் தமிழ் இணைய வார இதழ்களும் தோன்றி நிறைய பிரபலமாகிக் கொண்டு வருகின்றன (திண்ணை, தமிழ் சிஃபி போன்றவை). தவிர, அநேகமாக எல்லா தமிழ் தினசரி மற்றும் வார இதழ்களும் தங்கள் இணையைப் பதிப்புகளை உலவ விட்டிருக்கின்றன. தினமலர், தினமணி போன்ற தினசரிகள், குமுதம் குழும இதழ்கள் போன்றவற்றை இலவசமாகவும், விகடன் போன்றவை பர்ஸைத் திறக்கச் சொல்லியும் தங்கள் முழு அச்சு இதழ்களுடன் கூடவே, அவ்வப்போது நம் நாட்டிலும், உலகிலும் நிகழும் செய்திகளையும் உடனுக்குடன் இணையத்தின் மூலம் தருகின்றன.
இவ்வாறு மிகப் பிரபலமாகியுள்ள தமிழ் இணையம், அனைத்து மக்களின் பங்கெடுப்பும் இல்லாமல் இருந்தால் விருவிருப்பு இருக்காது என்பதால், அதுபோன்ற இணைய தளங்களில் உங்கள் கருத்துக்களை இடவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது- இந்த வலைப்பூவில் உள்ளதுபோல!!
ஆனால் அனைத்துல தரக் கட்டுப்பட்டு மையத்தால் (ISO) இற்றைப் படுத்தப்பட்ட ஒருங்குறி என்றழைக்கப்படும் யூனிகோடு முறை பெருமளவு பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், பல இணைய இதழ்கள் வெவ்வேறு விதமான எழுத்துருக்களை (font) பாவிக்கின்றன. இதனால் பயனர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தமிழக அரசும் TAM99 என்னும் யூனிசோடு முறையை பரிந்துரைக்கிறது. சீக்கிறமே எல்லா இணையப் பதிப்புக்களும் ஒரே வரையறைக்குள் வருவார்கள் என்பது திண்ணம்.
சரி. என் வலைப் பதிவுக்கு வருகிறேன்!
இங்கே நான் எழுதியுள்ள கருத்துக்களுக்கு எதிர்வினையாக ஏதேனும் மறுமொழிகளை (Comments) இட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால், "தமிழில் எப்படி அச்சடிப்பது, கீ போர்டு (விசைப்பலகை) ஆங்கிலத்திலல்லவா உள்ள்ளது" என்ற ஐயம் உங்கள் மனத்தில் எழுவதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் உங்களுக்கு உள்ள ஒரே தீர்வு, தமிழில் அச்சடிக்க உதவும் விசைபலகையையும், எழுத்துருக்களையும் அவை கிடைக்கும் சில வலைத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவி, பின்னர் அதனைப் பயன்படுத்துவதுதான். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா? அலுவலகக் கணினி, இன்னொருவருக்குச் சொந்தமான கணினி, வெளியே இருக்கும் இண்டெர்னெட் மையங்கள் - இதுபோன்ற சூழலில் அத்தகைய செயல்பாடு வேலைக்காகுமா?
ஐ.யி-யில் மட்டும் ("ஐயோ" இல்லை; "ஆயி" யும் இல்லை, வெறும் 'ஐயி') - நுண்மிருது நிறுவனத்தின் உலாவி (Internet Explorer) - தெரியும்படியாக சில தமிழ் வலைத்தளங்கள் உள்ளன. தீநரியில் (Firefox) உட்செலுத்தினால் கோழி "கீய்ச்சின" மாதிரி என்னென்னமோ தெரியும். திண்ணை.காம், சிஃபியின் தமிழ்ப் பக்கங்கள் போன்றவை சில எடுத்துகாட்டுக்கள்.
சரி. நீங்கள் தீநரி பாவிக்கும் ஆசாமி. திடீரென்று திண்ணையில் கட்டுரை ஒன்றைப் படிக்கவேண்டுமென்று தோன்றுகிறது. நீங்கள் ஐ.யி-யைத் தேடி "கிளிக்கெட்டி கிளிக்" செய்து சிரமப்பட வேண்டாம். இருக்குமிடத்திலிருந்தே தீநரியை ஐ.யி-யாக உரு மாற்றலாம். இந்த ரசவாத வித்தை புரியும் தீநரியின் நீட்சிக் கோப்பு (Extension) "ஐயி டாப்" (IE Tab) என்று அழைக்கப்படுகிறது. இதனை இந்தத் தளத்திலிருந்து பெறலாம்.
அந்தக் கோப்பை நிறுவியபின் உலாவியின் வலது அடிப்புறத்தில் ஒரு ஐகான் தெரியும். அதனை கிளிக் செய்தால் உலாவியின் எஞ்சின் மாறும். இதன் செயலாக்கத்தை உங்கள் வசதிக்கேட்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
நான் அடிக்கடி வாசிக்கும் செய்தி வலைத்தளங்களில் ஒன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ். சிறிது நேரத்திற்கு முன் அங்கு சென்றால் நான் கண்டது இதைத்தான். என்னவாயிற்று?
ஆமாம். இனிமேல் "பலான" சமாசாரங்கள் - "சரோஜாதேவி கதைகள்" தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை - "XXX" மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.
ஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.
இந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆகவே நண்பர்களே, "ஆண் குறி" போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்!
இந்த வலைத்தளத்தில் எதுவுமே மிகைப்படுத்தப் படுவதில்லை. ஏனெனில் அது அங்கே முடியாது! தம்மாத்தூண்டு சதுரத்தில் ஒரு குட்டி வலைப் பதிவு, விளையாட்டுக்கள், ஓவியங்கள் இவை போன்ற பலவற்றை (18×18 புள்ளிகளுக்குள்) உட்செலுத்தியுள்ளார் ஒருவர், "அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகுத்தி" என்பதுபோல்! நான் சொல்வது உலகிலேயே மிகச் சிறிய வலைத்தளத்தைப் பற்றி. சரி, அதைப் பார்த்தேயாக வேண்டுமா? இங்கே சென்றால் தெரியப் போகிறது!
ஆனால் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அலங்காரம் செய்யவேண்டி வந்து, அதற்கு சம்பந்தமில்லாதபடி அநியாயமாக "மூக்குக் கண்ணாடி" என்று பெயரிட்டு, உங்கள் மூக்குக்கு என் மேல் கோபம் வந்தால் நான் ஜவாப்தாரியல்ல! அதுவும் என் இந்தப் பதிவுக்கு அப்புறம்!
:: (பார்வை 803 முறை) ::
ஆத்ம ஞானம்
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!
துளித்துளி
உங்கள் மீது வெளிச்சம் விழ விழ, உங்கள் நிழலும் அதிக கருப்பாகத்தான் தெரியும்
சமீபத்திய மறுமொழிகள்