பெட்டகத்திலிருக்கும் இடுகைகள் ஏப்ரல், 2008

யார் குற்றவாளி?

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன.

இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். "எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்" என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.

ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.

குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!

பின் யார்தான் குற்றவாளி? இறந்த குழந்தைகளா!!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 252 முறை) ::

சும்மா பொழுது போக்கு!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). :razz:

  1. இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
  2. டான்ஸ் மாஸ்டர்!
  3. பறக்கும் பெங்குவின்கள்!
  4. உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
  5. கை விரலே கைப் பேசியானால்!

என்ன, ஜாலியா பொழுது போச்சா!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 494 முறை) ::

வண்ணதாசனின் கைவண்ணம்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

வண்ணதாசன்ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் "அகம் புறம்" பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கின்றன. அவருடைய வர்ணனைகள் எவ்வித சொல் அலங்காரங்களும், பாசாங்குகளுமின்றி நேரடியாக நம்மிடம் உரையாடும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

தன் பள்ளி நாட்களைப் பற்றியும், அப்போது தம்மோடு பழகிய முகங்கள், மனத்திலிருந்து நீங்காத சின்னஞ்சிறு நிகழ்வுகள் இவைகளைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அவர் நம்முடைய மனத்தில் ஆழப் பதிந்திருக்கும் நினைவுகளையும் கிளர்ந்தெடுத்து மீள்காணச் செய்கிறார். அவருடைய அந்தப் பின்னோக்கிய பயணத்தில் நம்மையறியாமலேயே நாமும் பங்கெடுத்துச் செல்கிறோம்!

வெங்கட்டரமணன் என்று ஒரு சகா. மூக்கு நீளமாக இருக்கும். அவனுடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அப்புறம்தான் என்னுடையது எல்லாம். என் மூக்கு பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.

கீவளூர் போர்டு ஹைஸ்கூலில் என் பக்கத்து டெஸ்க் உத்திராபதி நினைவில் வந்து தன் தீர்க்கமான மூக்குடன் எட்டிப்பார்க்கிறான்.

அப்புறம் என் மூக்கு பற்றியும் பேசாமல் இருப்பது நல்லதுதான்! :lol:

இந்த வரிகளை வாசிக்கும்போது என் கண்கள் பனிக்கின்றன, ஏனென்று தெரியவில்லை:

இப்போதுகூடக் கேட்கிறது, ஆழ்வாரப்பனின் "செந்தமிழ்த் தேன்மோழியாள்" பாட்டு. "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆழ்வாரப்பன் பாட ஆரம்பிக்கும்போது, அவன் கண்கள் மூட ஆரம்பித்து தலை பின்னுக்குச் சாய்ந்துவிடும். முழுப் பாட்டையும் அப்படியே பாடி முடித்த பிறகுதான் கண் திறந்து, முகம் சமதளத்துக்கு வந்து எங்களை எல்லாம் பார்க்கும். நாங்கள் கையைத் தட்டிக் கொண்டே அவனைப் பார்ப்போம்.எனக்கு அவன் பாடின பிறகு கைதட்டும் போதெல்லாம் ஒரு மாதிரி அழுகை வரும்.

… ஆழ்வாரப்பனைக் காணவே காணோம். பாட்டை நம்மிடம் விட்டுவிட்டுப் பாடியவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.

நயம் கொண்ட எழுத்து என்பதற்கான அடையாளங்கள்:-

வேறு வேறாக எதையுமே அடையமுடியாது போல. முதலில் அடைந்ததையே மீண்டும் மீண்டும் அடைகிறோம். அல்லது, இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம். அப்படித்தானா.

அவருடைய ஆக்கங்களை மேலும் வாசித்தபின் வரைகிறேன்.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 365 முறை) ::

 


WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in