குதிரைக் கொம்பு

ஒரு விநோதக் கதை

ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935)


ரீவணன்

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.

கேளீர், ரீவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.

இதைக்கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-

இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.

அப்படியே ராமலக்ஷ்மணரைப் படித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கும்மென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களை சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலை கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். எப்படி நீ இந்த காரியம் செய்யலாம்? என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, “அடே! சீதையைத்தான் மிதிலைக்குகனுப்பி விட்டாய். என்னை நீ விவாகங் செய்து கொள்ளு” என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு “நீ அழகான பிள்ளைதான். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்” என்றாள்.

அப்போது ராமன் “சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?” என்று கேட்டான்.

அதற்கு சூர்ப்பநகை, “இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு” என்றாள்.

இகைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம. இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டிணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் எள்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகாகோபத்துடன் சுக்கிரீவனுக்கு பின்வருமாறு ஓலை யெழுதியனுப்பினான்.

“கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்.”

உத்தரவு கண்டவுடன் சுக்கிரீவன் பயந்துபோய் அனுமானை நோக்கி “”என்ன செய்வோம்?” என்று கேட்டான். அனுமான் சொன்ன யோசனை என்னவென்றால்:-

“வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற்பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படிக் கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அலனைச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்” என்று அனுமான் சொன்னான்.

சுக்கிரீவன் அப்படியே பெண்களும் ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதி தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும் சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்த்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர்கள் தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள்.

ராவணன் தனது நண்பர்களுடன் ஆடுமாடுகளையெவ்வாம் அப்போதே கொன்று திள்று அந்த சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன்வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் அந்த பணங்களையெல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கியெடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்.

அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்திகளெல்லாம் வேவுகாரர் மூலமாக கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்கிரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படைகள் தயாரன பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணுற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் “ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!” எனறு பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை என்று வக்ரமுகசாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

குதிரைக் கொம்பு

அப்போது ரீவணன், “சாஸ்திரியாரே குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?” என்று கேட்டான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்,

“ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் “ஹா, ஹா, ஹா” என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேனன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணனுடைய பாதத்தில் விழுந்து, என் குதிரைகள் சாகாவரமுடையன. இவற்றை போல் வேகம் வேறு கிடையாது. இவற்றுக்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன்” என்று அழுதுமுறையிட்டான். ராவணன் அநத சூரியனிடம் கிருபை கொண்டு, பிரம்ம தேவனிடம், “இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது” என்று சொன்னான். அது முதலாக இன்றுவரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்ம தேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.

இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணி பரிசு கொடுத்தான்.

(“சுதேச மித்திரன்” தொகுப்பிலிருந்து பெறப்பட்டது)

5 Comments


  1. பாரதியார் எந்த சந்தர்பத்தில் இப்படி ஒரு கதை விட்டார் அதனுடைய பின்னணி என்ன என்று சொல்ல முடியுமா ?


  2. பாரதி சுதேச மித்திரனில் உதவி ஆசிரியராக இருந்தபோது நாளொன்றுக்கு இவ்வளவு பக்கங்கள் எழுதுவது என்று ஒரு திட்டம் வைத்திருந்தார். அப்போது அவர் “ச்சும்மா” எழுதிய பகடிதான் இது!
    அப்போது அவருக்கு சுமார் 23-24 வயதுதான் இருக்கும்!

    (பாரதி பக்தர் திரு. ஹரி கிருஷ்ணனிடமிருந்து பெற்ற தகவல்)

    எஸ்.கே


  3. 23-24 வயதுகளில் அவருக்கு பக்குவமில்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை! சில உண்மைகளை உருவகப்படுத்தி எழுதியிருக்கிறாரே தவிர “ச்சும்மா கதை“ விட வேண்டிய அவசியம் பாரதிக்கு இல்லை என்பதே உண்மை.


  4. பாரதி வாழ்ந்ததே 32 வயது வரை தான் என்கிறது சில ஆய்வுகள். ஆக 22-23 வயதில் பாரதி ஏதோ கண்ணா பின்னா வென்று இதை எழுதி இருக்கவே முடியாது. ஒரு வேளை அவருக்கு கிடைத்த அல்லது ஆய்ந்து அறிந்த சில மறைக்கப் பட்ட தடயங்களை வைத்து துணிவுடன் வெளியிட்ட கருத்தாக இருக்குமோ???.

Leave a Reply

Your email address will not be published.